tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு காத்த சங்கம் - தோ.வில்சன்

தோ.வில்சன்,
மாநிலச் செயலாளர்,  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் (TARATDAC) 4-ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 19, 20, 21  தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெறு கிறது. இந்த சங்கம் தோன்றி 12 ஆண்டு களை நிறைவு செய்துள்ள வேளையில் இம்மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியப் பார்வையில் மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள் அவர்களது முன்னோர்கள் செய்த ‘கர்ம பலன் களின்’ (பாவ செயல்கள்) படிதான் அவர்கள் மாற்றுத்திறனாளிகளாகப் பிறக்கிறார்கள் என்று இந்தியா வில் பேசவும், நம்பவும் வைத்திருக்கிறார் கள். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின்  நீதி சட்டமான மனுநீதி சட்டம் மாற்றுத் திறனாளிகளை மிகவும் பிற்போக்காக  பார்க்கிறது. அது மாற்றுத்திறனாளி களை தீண்டத்தகாதவர்களாகவும், அவர்கள் மற்ற மனிதர்களைப் போன்று  சமூகத்தில் புழங்கக் கூடாது எனவும்,  வீட்டில் வசிக்கக் கூடாது எனவும், வீட் டிற்கு வெளியே ஆடு, மாடுகளைப் போன்று கொட்டகைகளில் பராமரிக்கப் பட வேண்டும் என்றும் கூறுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் திரு மணம் செய்யக் கூடாது எனவும், அவர் களுக்கு சொத்தில் பங்கு அளிக்கக் கூடாது எனவும் அது கூறுகிறது.

ஹிட்லரின் ஈனச்செயல்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி யில் ஜெர்மனி நாட்டை ஆண்ட பாசிச  கொடுங்கோலன் ஹிட்லர் ஜெர்மனியின் பொருளாதார பிரச்சனைக்கு உரிய  தீர்வு காண்பதற்கு பதிலாக ஒரு கொடிய  கொள்கையை மேற்கொண்டார். அதன் படி, உழைத்து வாழ தகுதியான வர்கள் மட்டுமே உயிர் வாழ வேண் டும் எனவும், முதியோர், நோய்வாய்பட் டோர், மாற்றுத்திறனாளிகள் என உழைத்து வாழ இயலாத மற்ற அனை வரையும் கொன்றுவிட முடிவு செய்து  அவர்கள் அனைவரையும் பெரிய விஷ வாயு கிடங்குகளில் அடைத்து கொன்று  குவித்தார். அப்படி கொல்லப்பட்டவர் களில் மாற்றுத்திறனாளிகள் மட்டும்  இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் ஆவர்.

ஐ.நா. சிறப்பு மாநாடு

உலக ஊனமுற்றோர் தினத்தை  முன்னிட்டு 2006 டிசம்பர் 3ல்  மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை நிலைநாட்டு வதற்காக ஐ.நா.சபை சிறப்புக் கூட்டம்  ஒன்றை நடத்தியது. அதில் உல கெங்கும் வாழும் மாற்றுத்திறனாளிகள் நிலைமை குறித்து ஒரு வரைவுச் சாசனம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2007 மார்ச் 30ல்  ஐ.நா.சபை  ஒரு சிறப்பு மாநாட்டை யும் நடத்தியது. அந்த சிறப்பு மாநாட் டில் 164 நாடுகளை சார்ந்த பிரதிநிதிகள்  கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி களின் கண்ணியமிக்க வாழ்வுக்காக ஐ.நா. முன்வைத்த சாசனத்தை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டனர். அந்த  சாசனத்தை ஏற்றுக் கொண்டு ஏழாவ தாக கையெழுத்திட்ட நாடு இந்தியா என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த  சாசனம் ஒவ்வொரு நாடும் மாற்றுத்திற னாளிகளின் கண்ணியம் மற்றும் உரிமை களை நிலை நாட்டுவதற்காக புதிய  சட்டங்களை இயற்றிட வேண்டும் என்று  வலியுறுத்தியது. எனினும், 2010 ஆம்  ஆண்டு வரை இந்தியாவில் புதிய சட்டம் இயற்றுவதற்கான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

மாற்றுத்திறனாளிகள் சங்கம் உருவானது

இந்நிலையில் 2010 பிப்ரவரி 6 அன்று  சென்னையில் மறைந்த தோழர் தே. இலட்சுமணன், தோழர்கள் எஸ்.நம்புராஜன், பி.ராதாகிருஷ்ணன் ஆகி யோர் முன்முயற்சியில் “தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதைப்போன்று 2010 பிப்ரவரி 20  அன்று கொல்கத்தாவில், பல மாநிலங் களில் செயல்பட்டு வந்த நமது சகோதர மாற்றுத்திறனாளி சங்கங்களை ஒன்றி ணைத்து “ஊனமுற்றோர் உரிமைகளுக் கான தேசிய மேடை உருவானது.

முதல் அகில இந்திய இயக்கம்

சங்கம் ஆரம்பித்த இரண்டே மாதத் தில், அதாவது 2010 ஏப்ரல் 20 அன்று  புதுதில்லி நாடாளுமன்றம் முன்பு மா பெரும் பேரணி மற்றும் தர்ணா போராட்டமும் நடைபெற்றது. தமிழகத் திலிருந்து சுமார் 800 பேர் உட்பட நாடு முழுவதிலிருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டது வியப்பை ஏற்படுத்தியது. இந்த போராட் டத்தின்போது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை தோழர் பிருந்தாகாரத் தலைமையில் 8 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் குழு சந்தித்து நமது கோரிக்கைகளை எடுத் துரைத்துத்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த பிரதமர் உடனடியாக அவ ரது ஆட்சி காலத்திலேயே புதிய சட்டம்  கொண்டு வரப்படும் என உறுதி அளித் தார். அதன்படி புதிய சட்டம் தயாரிப்ப தற்கான பணியும் நடைபெற்றது.

மீண்டும் போராட்டம் 

புதிய சட்டம் தயாரிக்கும் பணி துவங் கினாலும் அது முழுமை பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது. புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் உடனே நிறைவேற்றிட வலியுறுத்தி மீண்டும் 2012 டிசம்பர் 3 அன்று அகில இந்திய சங்கம் சார்பில் புதுடில்லி நாடாளு மன்றம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப் பட்டது. இந்த போராட்டத்திலும்  தமிழ் நாட்டிலிருந்து நமது சங்கம் சார்பில் 700 க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட னர்.  இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் கடைசி கட்டத்தில், அதாவது 2013 குளிர்கால கூட்டத் தொ டரின்போது அவசரஅவசரமாக இச்சட் டத்தை நிறைவேற்றிட முற்பட்டது மன்மோகன் அரசு. ஆனால் இந்த சட்டம் முறையாக தயாரிக்கப்படாமல், சட்டத்தில் பல குளறுபடிகள் இருந்த மையால் அதனை திருத்தியமைக்கா மல் உடனே நாடாளுமன்றத்தில் நிறை வேற்றிட நமது சங்கம் உட்பட பல மாற்றுத்திறனாளி அமைப்புகள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தமையால் இச்சட்டம்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடி யாமல் போனது. 

ஏமாற்றம் அளித்த 2014 தேர்தல் வாக்குறுதி

அதன்பின் 2014 நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் பாஜக-வும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே இச்சட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்திருந்தது. ஆனால் 2014  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்று மத்தியில் ஆட்சி அமைத்த பிறகும் இச்சட்டம் நிறைவேற்றப்படு வதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள் ளவில்லை. தொடர்ந்து 2014 மற்றும் 2015 குளிர்கால கூட்டத் தொடர்களின் போது  நாடாளுமன்றம் முன் பல்லாயிரக்கணக் கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பேரணி, தர்ணா மற்றும் முற்றுகை போராட்டங்களை நடத்தியது. தொடர்ந்து 2016-ல் ஒரே ஆண்டில் ஐந்து கட்ட போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது ஊனமுற்றொர் உரிமை மேடை யின் விடாப்பிடியான தொடர் போராட் டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மேலும், இச்சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரும், அதற்கான விதிமுறைகள் வகுத்து அம லுக்கு கொண்டு வருவதற்கு மீண்டும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.

புதிய சட்டம் -  முக்கிய அம்சங்கள்

1995 ஆம் ஆண்டு சட்டப்படி  ஏழு வகையான உடல் குறைபாடு /  பாதிப்பு உடையோர் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் என வரையறுக்கப்பட்ட நிலையில் 2016 புதிய சட்டப்படி 21 வகை யான உடல் குறைபாடு / பாதிப்பு உடை யோர் மாற்றத்திறனாளிகளாக அங்கீ கரிக்கப்பட்டுள்ளனர். 1995 ஆம் ஆண்டு சட்டப்படி கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3  விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு  வந்த நிலையில், தற்போது 2016 உரிமை கள் சட்டப்படி உயர்கல்வியில் 5 விழுக் காடும், வேலை வாய்ப்பில் 4 விழுக்கா டும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.  சமூக பாதுகாப்பு திட்ட ஒதுக் கீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25 விழுக்காடு நிதி ஒதுக்கீடு  செய்வது, மாற்றுத்திறனாளிகள் பிரச்ச னைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாண  தனி நீதிமன்றங்கள் அமைப்பது, போக்குவரத்து உட்பட மாற்றுத் திறனாளிகள் அனைத்து பகுதிகளுக் கும் எளிதில் செல்லத்தக்க வகையில் தடையற்ற சூழலை ஏற்படுத்துவது, மாற்றுத்திறனாளிகள் உரிமை களை வழங்க மறுக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சிறைத்தண்டனை உட்பட கடும் தண்டனைகள் வழங்குவது மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்டவைகள் புதிய சட்டத் தில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களாகும்.

2016 சட்டப்படி 21 வகை மாற்றுத்திறனாளிகள்

பார்வையற்றோர் மங்கலான பார்வை உடையோர் தொழுநோய் பாதித்து குணமடைந்தோர் காது கேளாதோர் உடல் ஊனமுற்றோர் உயர வளர்ச்சி தடைபட்டோர் மனவளர்ச்சி குன்றியோர் மனநலம் பாதித்தோர் மன இறுக்க நிலைமை உடையோர் பெருமூளை வாதம் உடையோர் தசைநார் தேய்வு உடையோர் நாள்பட்ட நரம்பியல் குறைபாடு உடையோர் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உடையோர் பல்வகை ஸ்க்லரோசிஸ் பாதித்தோர் பேச்சு மற்றும் மொழி குறைபாடு உடையோர் தலசீமியா நோய் பாதித்தோர் ஹீமோபிலியா நோய் பாதித்தோர் அரிவாள் செல்நோய் பாதித்தோர் காது கேளாமை, பார்வையின்மை உள்ளிட்ட பல்வகை குறைபாடு உடையோர் அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர்  பார்க்கின்சன் நோய் பாதித்தோர்.

பிரதமர் மோடியின்  வார்த்தை ஜாலம்

பிரதமர் மோடி மாற்றுத்திறனாளி களை ‘திவ்யங்’ (தெய்வப் பிறவிகள்) எனவும், மாற்றுத்திறனாளிகள் துறையை ‘திவ்யங்ஜன்’ (தெய்வப் பிறவிகள் துறை) எனவும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அதேவேளையில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் உடலின் ஒரு  பாகமாக பயன்படுத்தக்கூடிய உதவி  உபகரணங்களான செயற்கை கால், செயற்கை கை, ஊன்றுகோல், காது  கேட்கும் கருவி, பார்வையற்றோருக்கான கண் கண்ணாடி ஆகியவற்றுக்குக் கூட  5 விழுக்காடு முதல் 18 விழுக்காடு  வரை ஜி.எஸ்.டி வரி விதித்தவர்  என்பதுதான் உண்மை. மாற்றுத்திற னாளிகள் அனைவருக்கும் வழங்குவ தாக உள்ள தேசிய பல்நோக்கு அடை யாள அட்டையை வழங்குவதற்கு ஒரு  ரூபாய் கூட ஒன்றிய அரசால் வழங்கப் படவில்லை. மேலும், மாநில அரசு களால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங் கப்பட்டு வரும் உதவித் தொகைக்கு கூட  ஒன்றிய அரசின் பங்களிப்பு மிகக் குறை வானது. உதாரணமாக தமிழ்நாட்டில் உதவித்தொகை பெறும் 5,35,000 மாற்றுத் திறனாளிகளுள் 50,000 பேருக்கும் குறை வானவரே ஒன்றிய அரசின் உதவித் தொகையைப் பெறுகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக சென்று வருவதற்கான தடையற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று 2016 உரிமைகள் சட்டம்  வலியுறுத்துகிறது. ஆனால், மாநில  அரசுகளின் அனைத்து நிதி ஆதாரங்க ளையும் ஜி.எஸ்.டி மற்றும் இதர வரிகள் மூலமாக தட்டிப் பறித்து குவித்து வைத் திருக்கும் ஒன்றிய அரசு இந்த விளிம்பு  நிலைக்கும் கீழ் வாழ்ந்து வரும் மாற்றுத் திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்த அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க மறுப்பதும், மேலும் மேலும் வெட்டி சுருக்குவதும் இரக்க மற்ற செயலே ஆகும். இவற்றுக்கெல்லாம் தீர்வு காண, தொடர் போராட்டப் பாதையை விவாதிக்க  கோருகிறது செங்கல்பட்டு மாநாடு.

 


 
 

;