மதுரை:
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ளன. இந்த நிலையில் ஆளுங்கட்சிக்கு தனது விசுவாசத்தைக் காட்ட பலர் தயாராவர்.அந்த வரிசையில் மதுரை மாவட்டத்திலுள்ள மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற தயார்ப்படுத்தி வருகிறார். அது தொடர்பான பொறுப்பாளர் கூட்டத்தை அவர் நடத்தியுள்ளார். ஆளுங்கட்சியின் இந்த அத்துமீறல் நடவடிக் கையை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.இந்த பிரச்சனை தொடர்பாக திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது சு.வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் உள்ள - மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் (பி.ஓ.)மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ளவர்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவாகதேர்தல் பணிகளுக்கு தயார் செய்யும்வகையில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் - வாக்குச்சாவடிகள், தெருக்கள் வாரியாக தலா 25 பெண்கள் கொண்டபெயர் பட்டியல் மற்றும் அவர்களதுகைப்பேசி எண்ணுடன் கூடிய பட்டியலை தயார் செய்ய வேண்டுமென அதற்கான பொறுப்பாளர்களை வற்புறுத்தி வருகிறார். அதற்கான பொறுப்பாளர்கள் கூட்டத்தை திங்களன்று நடத்தியுள்ளார்.ஆளுங்கட்சியின் தேர்தல் பணிகளுக்காக அரசின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி அரசு நிர்வாகத்தைபயன்படுத்தியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட மகளிர் திட்ட அலுவலரின் செயல்பாடுகள் மதுரை ஆட்சியருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், ஆட்சியருக்கு தெரியாமல் நடந்திருந்தால் அது சட்டவிரோதம். தெரிந்து நடந்திருந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.
தேர்தலுக்கு சுயஉதவிக்குழுக் களை பயன்படுத்தும் நடவடிக்கை அதிமுகவினரின் பலவீனத்தைத் தானே காட்டுகிறது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கனகராஜ், அதிமுகவினர் எதைச் சொல்லி வாக்குகேட்க முடியும். மக்கள் மத்தியில் மட்டுமல்ல, ஆட்சியிலும் பலவீனமாக உள்ள ஆளுங்கட்சியின் செயல்கள் போகப்போகத்தான் தெரியவரும்என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “பீகார்சட்டமன்றத் தேர்தல் “பார்முலாவை”தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறுகிறார்கள். சமீபத்தில்சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்களில் பாஜக போட்டியிட்ட இடங்களில் புகார்கள், விதிமீறல்கள் இருந்தன.இதுபோன்று ஒரு படிவம் தயாரித்திருப்பது; வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது; இவர்களின் வாக்குகளைப் பெறுவதற்குக் கூட இந்த வழிமுறை உதவக் கூடும். உண்மை நிலையை மாவட்ட ஆட்சியர் தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
சமஸ்கிருத திணிப்பு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி,சமஸ்கிருத திணிப்பும், இந்தித் திணிப்பும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்திக்கு நாளொன்றுக்கு 15 நிமிடம் ஒதுக்கப்படுவது மற்ற மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. இது கண்டனத்திற்குரியது என்றார்.மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் மொத்தம் நான்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் மூன்று பல்கலைக்கழகங்கள் சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள். மற்றொன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்திகிராம நிகர் நிலைப்பல்கலைக்கழகம். இதில் காந்தி கிராமநிகர் நிலை பல்கலைக்கழகத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசு,மூன்று சமஸ்கிருத பல்கலைக்கழகங் களின் வளர்ச்சிக்கு பல நூறு கோடிரூபாய்களை நிதியாக ஒதுக்குகிறது. இது தமிழுக்கு இழைக்கப்படும் அநீதி.தமிழகத்தில் வெறும் 15,000 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடிக்கும் நடவடிக்கை என்றும்கூறினார்.
கண்மாய், குளங்களை தூர்வாருக!
தொடர்ந்து மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெறும் பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட மதுரை நகரின் பல்வேறு சாலைகள் குண்டும்-குழியுமாக மாறிவிட்டது. இந்தச் சாலைகளை சீரமைக்க வேண்டும். புதிய சாலைகள் போடவேண்டுமென்றார்.கடந்த வெள்ளிக்கிழமை மதுரை நகரில் இரண்டு மணி நேரம் கனமழைபெய்தது. இந்த மழை நீர் செல்லூர்கண்மாயில் நுரையோடு வந்ததுதொடர்பாக பதிலளித்த விஜயராஜன், “மாரியம்மன் தெப்பக்குளம் உள் ளிட்ட மதுரை நகரில் உள்ள பல்வேறுகுளங்களை தூர்வார வேண்டும், செல்லூர் கண்மாயை தூர்வார வேண்டுமென மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி ஆட்சியரிடம் அளித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் தற்போது பெய்த மழையால் செல்லூர் கண்மாயில் எதிர்பார்த்த தண்ணீர் தேங்கவில்லை. ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ளது. தண்ணீர் மாசடைந்துள்ளது. கழிவு நீர், ரசாயன கழிவு நீர் கண்மாய்க்கு வந்தடைந்தது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கள ஆய்வு மேற் கொண்டுள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செல்லூர் கண்மாயில் கழிவு நீர், ரசாயன கழிவுநீர் வந்து சேர்வதை தடுக்கவேண்டும் என்றார்.