அலங்காநல்லூர், ஜன.28- அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்தாண்டு அரவையைத் தொடங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஆலை தொழிலாளர்கள் கடந்த 46 தினங்களாக நடத்தி வந்த காத்திருப்புப் போராட்டத்தை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தொடருவதென முடிவு செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு எந்த அறிவிப்பையும் அறிவிக்க இயலாது என்பதால் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள விவசாயிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தபின் போராட்டத்தைத் தொடருவதென முடிவு செய்துள்ளனர். இருப்பினும் தேர்தலுக்குப் பின்னர் ஆலையின் அரவையைத் தொடங்க முதல்வர் உத்தரவிட வேண்டுமெனவும் கரும்பு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிப்படி அரவையைத் தொடங்கவேண்டும்; முதல்வர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மதுரை ஆட்சியர் ஆகியோர் ஆலையை திறப்பது பரிசீலனையில் உள்ளது எனக் கூறியுள்ளனர்.
பத்திரபதிவுத்துறை அமைச்சர் பெ.மூர்த்தி எங்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும். தமிழக முதல்வரின் தேர்தல் அறிக்கை அறிவிப்பை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை ஒத்திவைக்கிறோம் என்றார் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி. 46-ஆவது நாள் போராட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் ஆண்டிச்சாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பி.இளங்கோவன், வி.உமாகேஸ்வரன் மற்றும் கரு.கதிரேசன், ஸ்டாலின்குமார், ராமராஜ், அடக்கிவீரணன், பி.எஸ்.ராஜாமணி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.