tamilnadu

img

அறிவியல் செடியில் பூத்த கவிதை - மதுக்கூர் இராமலிங்கம்

கால வெள்ளத்தில் கரைந்து போகாமல் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளை தின்று செரித்து, நின்று நிலைத்திருக்கிறது தாய்த்தமிழ். அதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, பண்பாடு, அறிவியல் என்ற இருகரைகளையும் தொட்டுக் கொண்டு காலத்தின் கையைப் பிடித்துக் கொண்டும் தமிழ்மொழி நடைபயில்வதே ஆகும்.

அறிவியலுக்கு முகம் கொடுக்காத எந்த மொழியும் அழிவைச் சந்தித்திருக்கிறது என்பதே சரித்திரம். அறி வியலும் கலை இலக்கியமும் இருவேறு துறைகள் அன்று.  ஒன்றோடொன்று இயைந்தும், இசைந்தும், இணைந்தும் வளர வேண்டிய துறைகளே. கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ‘மகா கவிதை’ எனும் பெருநூல் அறிவியலை கவிதையாகவும், கவிதை யை அறிவியலாகவும் ஆக்கிச் சமைத்துள்ளது. பெருங்கவிஞனின் இந்தப் பெரும் படைப்பை தமிழ்ச் சமூகம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கும். நிலம், நீர், தீ, வளி, வெளி எனும் ஐம்பூதங்களையும் பிசைந்து பிரபஞ்சப் பெருவெளியில் காலத்தின் கைகளால்  எழுதி முடித்திருக்கிறார் கவிஞர். வானத்தில் இயற்கை வரைகிற ஏழு வண்ணக் கோலம் வானவில் என்றால், கவிஞர் கூறியது போல, தனித்தும் கூடியும் இயங்கும், இயக்குவிக்கும் ஐம்பூதங்களை ஐம்புலன்களால் இயங்கும் உடல் எனும் அகலில் எரியும் உயிரெனும் ஒளி யில் சுடரும் அறிவெனும் வெளிச்சம் கொண்டு தமிழ்ச்  சமூகத்தின் அறிவுப் பரப்பை அடர்த்தியாக்கி இருக்கிறார்  கவிஞர். இயற்கையின் விளைச்சலால் உருவான உயிரி னங்களில் ஒன்றுதான் மனிதன். ஆனால், இன்றைக்கு இயற்கையை அழித்துக் கொண்டிருப்பதும் மனித இனம்தான். இதன்மூலம் பூமியில் நின்று கொண்டே தனக்கு ஒரு புதைகுழியை வெட்டிக் கொண்டிருக்கிறான் மனிதன். இயற்கையின் மீதான காதல் மட்டுமல்ல, கவலை யும் இங்கு கவிதையாகி இருக்கிறது. 450 கோடி ஆண்டு கள் சுழன்றும், மேலும் 450 ஆண்டுகள் சுழலப் போவது மான இந்த மண்ணுருண்டை குறித்து இன்று காணக் கிடைக்கும் கவலை கொள்ளத்தக்க அறிகுறிகள் இனி யன அல்ல என்கிறார் முன்னுரையிலேயே கவிஞர். இயற்கைக்கு நேரும் ஊறு அனைத்தும் இயற்கை யானது அல்ல. சமமற்ற மனித சமூக அமைப்பே இயற்கை  சந்திக்கும் சரிவுகளுக்கெல்லாம் காரணமாக அமைந்தி ருக்கிறது என்று இந்த கவிதை நூலின் பல இடங்களில் கண்ணீர் வடிக்கிறார் கவிஞர்.

வள்ளுவன் பாடிய ஊருணி இன்று ஊருக்குப் பொது வாக இல்லை. ‘தண்ணீரோ கூட்டாண்மை நிறுவனங்க ளின் திரவப் பொருளாதாரமாகி விட்டது’ என்று தண்ணீர்  வணிகப் பொருளாக மாற்றப்பட்ட சூழலின் சூதை இடித்து ரைக்கிறார். இயற்கைப் பேரிடர்களை அவ்வப்போது சந்திக்க நேரும்போதெல்லாம் என்னாயிற்று இந்த இயற்கைக்கு என்று புலம்புகிறோம். ஆனால், மனிதனின் சில்லரைச் சேட்டைகளை பொறுத்துக் கொள்ள முடியாத, இயற்கை யின் பொருமல்தான் இந்தப் பேரிடர்கள் என்று அறிந்தும் அறியாதது போல நடித்துக் கொண்டிருக்கிறோம். இந்த மண்ணியல், விண்ணியல் மாற்றங்களை மனித குலம் பொருட்படுத்தாது போயின், ஐம்பூதங்களும் மனி தனுக்கு எதிராகத் திரும்பிவிடும் என்று எச்சரிக்கிறார் கவிஞர். இன்னும் அப்படி இயற்கை திரும்பவில்லை. இயற்கை அவ்வப்போது திரும்பிப் பார்த்து முறைப் பதையே தாங்கிக் கொள்ள முடியாமல் தகிக்கிறது உலக உயிரினம். ஐம்பூதங்களில் முதலில் நிலத்தைப் பாடும் போது, இது கோளாறில்லாத கோளம் என்று அழைத்து, தாயே!  உம் சாகசம் கருதி நான் இறந்த பிறகும், வியந்து கிடப்போம் என்று பூமிக்கு கவிதைப் பூச்சூட்டுகிறார். நிலத்தின் நீளமான வரலாற்றை ஆழமான வரிகளால் பாடிக் கொண்டே வரும் கவிஞர், பூமி லட்சம் லட்சம் பேருயிர்களை ஈன்றெடுத்த இறைமாதா என்கிறார். முடிக்கும் போது மண் கண்டம் சொந்தமென்று மமதை கொள்ளாதே! உன் குழி எவ்வளவு கொள்ளுமோ அவ்வ ளவே உன் மண். அம்மண் எம்மண்ணோ? ஆதலால் சகல மண்ணுக்கும் தலைவணக்கம் என்கிறார். எத்தனையோ முறை தரையில் விழுந்து தரமற்ற வற்றை வணங்குகிறான் மனிதன். ஒருமுறை தரையில் விழுந்து தரைக்கு நன்றி சொல்வதே தகும் என்பதே கவி ஞரின் கவிதை நிலத்தில் நடக்கும் போது முகிழ்க்கிற சிந்தனையாக இருக்கிறது. ஏற்கனவே தண்ணீர் தேசம் தந்தவர் கவிஞர். இந்தப் பெருந்தொகுப்பில் நீரைப் பாடும் போதெல்லாம் நீராகவே  மாறிவிடுகிறார். ஆதியும் நீரே அந்தமும் நீரே என்று பாடும்  கவிஞர், தாய்க்குடம் உடைந்து பிறக்கிறோம். தண்ணீர்க்  குடம் உடைத்து முடிக்கிறோம் என்கிறார்.  நதிகளுக்கு மனிதன்தான் பெயர் வைத்தான். அந்த மனிதன் வேர் விட்டு நிலைக்க நதிநீர்தான் அடிப்படை. உலக நீரில் 97 விழுக்காடு உப்புக் கரைசல். மொத்த நீரில்  சுத்த நீரோ 3 விழுக்காடு என்று அதில் துருவங்களில் உறைந்தது, தொலையாழத்தில் மறைந்தது ஒவ்வொரு விழுக்காடு. ஒரு விழுக்காடு மிச்சம்தான் உயிரையும் பயிரையும் வளர்க்கிறது என்று இவர் எழுதியுள்ளதை படிக்கும்போது, எனக்கு இது தண்ணீர் பட்டபாடு என்று  யாராவது பீற்றினால், தலையில் தட்டி தண்ணீர் பட்ட பாட்டைச் சொல்லி வைப்போம்.  முதலாளித்துவம் தன்னுடைய தணியாத தாகத்துக்கு  தண்ணீரைச் சுரண்டுவதை, முதுகில் ஏறி, முதுகுத்தண்டு வழியே ரத்தம் குடிக்கின்றன வளர்ந்த நாடுகள். ஓசை இல்லாமல் ஒலிக்கிறது கார்ப்பரேட் வேதம் என்கிறார். பொதுவுடமையிலிருந்து தனியுடைமை ஆன கணமே,  உலகத்தின் தண்ணீரெல்லாம் கண்ணீரானது என்று நீரின் வரலாற்றோடு இணைத்து வர்க்க வரலாற்றையும் பேசும் கவிஞர், புட்டியில் அடைக்கப்பட்ட தண்ணீர்தான் நாம் விலை கொடுத்துப் பருகுவது என்கிறார். தீயைப் பாடும் போது, ஆதித் தீயிலிருந்து ஆரம்பித்து,  மீதித் தீ வரை நெருப்பின் வரலாற்றை நேர்படப் பேசு கிறார். பூமி என்பது குளிர்ந்த நெருப்புதான். கோள்களை  தன் சூட்டினால் சமைத்திருக்கிறது ஆதித் தீ. பெற்றுப் போட்ட சிறு மீன்களையே உண்டு விழுங்கும்  பெருமீன்களைப் போல், சூரியச் சுறா கிரக மீன்களை உண்ணும் ஒருநாள் என்று வருங்காலத்தில் நடக்கப் போவதைச் சொல்கிறார் கவிஞர். அதுவரை சுறாப்புட்டு சுவைக்க வேண்டியதுதான்.

தாவர ஜாதிக்கு கரியமில வாயு, மனித ஜாதிக்கு உயிர்வளி என்று ஒற்றைச் செயலில் இரட்டை சாகசம்  செய்கிறது சூரிய நெருப்பு என்கிறார். அந்தப் பெருந் தீயைப் பார்த்து, நீயே நிர்ணயிக்கிறாய் வாழ்வின் அசைவுகளை என்கிறார். இலக்கியம்தோறும் எரிந்த நெருப்பின் சூட்டையும் சுடரையும் தன்னுடைய சொற்களுக்குள் சுருக்கி வைத்துச்  சொல்லிக் கொண்டே வரும் கவிஞர், சூரிய அடுப்பை நம்பிக் கொதிக்கிறது ஏழை பூமியின் இரவல் உலை  என்று பாடிச் செல்லும்போது, அடுத்தடுத்த அத்தி யாயங்களில் இன்னும் என்னவெல்லாம் சமைத்து வைத்தி ருப்பாரோ என்று நம்மை பசி நெருப்பு பற்றிக் கொள்கிறது. “பாவம் சீதை கொண்டு போனவனோ நந்தவனத்தில் இறக்கி விட்டான், கொண்டவனோ தீக்குழியில் இறக்கி விட்டான், என்னடா இது...ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பெருமுரண்” என்று கவிஞர் எழுதும்போது சமகால நடப்பு கள் கண்முன்னே வந்து போகின்றன. சுடராய் இது சூரியத் தீயே என்று கவிஞர் முடிக்கும் போது, புரியாத மொழியில் சூரிய நமஸ்காரம் என்று கூறும் நிலையில் சூரியனுக்கு அன்னைத் தமிழ் இதழ்களால் ஒரு குளிர் முத்தம் கொடுத்திருக்கிறார் கவிஞர் என்றே எண்ணத் தோன்றுகிறது. காற்றைப் பாடும் போது, கவிஞரின் கவிதைகளுக்கு இறகு முளைத்து விடுகிறது. காற்றில் ஏறி காற்றைப் பாடுகிறார்.  எரிமலை பூமியின் முதற்புரட்சி, வெடித்த எரி மலைக் குழம்புகளோடு வெந்து வெளியேறிய அதன் வாய்  வழி வந்த வாயு வடிவம்தான், இன்னும் பூமியில் இருக்கி றேன் என்று சுயசரிதை சொல்கிறது காற்று. எரிமலையில் இருந்து வெளிவந்ததாலோ என்னவோ, சில பெருமூச்சுகளில் இன்னமும் வெப்பம் குறையாமல் இருக்கிறது. உயிரின் வளி வடிவம் உயிர்வளி; உணவின் வளி வடிவம் கரியமில வாயு என்று எழுதும் கவிஞர், என்னை  காற்று என்றும் அழைக்கலாம், காப்பான் என்றும் அழைக்கலாம் என்று காற்று சொல்வதாகச் சொல்கிறார். குழந்தைகளின் காலைக் கனவுகளை அவர்தம் கண்களில் அமர்ந்து காணுவேன், இரவில் நிசப்தங்களை உடைத்து ஒலியாவேன். ஒலியில் ஒழுங்கு இருந்தால் இசையாவேன் என்று காற்றை கவிபாடுகிறார்.

துன்பத்திலும் இன்பம் எப்போது என்ற கேள்விக்கு, பிள்ளைகளின் பலூன்களில் சிறைவாசம் செய்யும் போது என்று சொல்கிறது காற்று. ஒரு நாளில் மனிதன் உள்ளிழுக்கும் காற்றின் எடை ஒன்பது கிலோ என்று எடை போட்டுச் சொல்கிறார். மாசடைந்த காற்றின் சோகத்தையும் சொல்கிறார். வளரும் நாடுகள் என்னை விற்று வாங்கிய எரிவாயுவில், அடுப்பும் அடிவயிறும் சேர்ந்தே எரிகின்றன என்கிறது காற்று.  இலைகள் எல்லாம் காற்றைத் துடைக்கும் கைக்  குட்டைகள் என்று சொல்லிச் செல்லும் கவிஞர், எந்த வொன்றை இன்னொன்று கொண்டு நிரப்பவியலாதோ, அதை கடவுள் என்பர் சிலர். ‘காற்றென்போம் நாம்’ என்று  முடிகிறது காற்றின் கவிதை. கடவுளை வணங்காதோரும் காற்றை வணங்குக! காற்றை வணங்குதலே நல்லது. வெளி - பெருங்கவிதையின் இறுதிச் சொற்களாய்த் திகழ்கிறது. பூமியோடு முடிந்து விடுவதில்லை பிரபஞ்சம் என்று  கூறும் கவிஞர், பால்வீதியின் ருசியை நுனி நாவில்  மட்டுமே தடவிக் கொண்டார்கள் என நாம் அறிந்திருப்ப தன் எல்லையைச் சுட்டுகிறார். நேற்றுப் பிறந்தேன், இன்றும் பிறந்தேன், சற்றுமுன்  பிறந்தேன், இந்தக் கணத்திலும் பிறந்து கொண்டிருக்கி றேன். என் அண்டங்கள் பல அழியும்; தொலையும் அணை வுறும் என்கிறார். சூரியக் குடும்பம், நம் குடும்பம்... இப்படி பெருவெளி யில் இருக்கிறது பல குடும்பம்.

மனிதன் கோள்களை வைத்துக் கொண்டு குறி  சொல்லிக் கொண்டிருக்கிறான். ஆனால், எத்தனை சந்தி ரன், எத்தனை சூரியன் இருக்கிறது என்பது தெரியாது  இவனுக்கு. ஒவ்வொரு கோளின் உண்மை அறியாதவன், ஒன்பது கோளை அளந்து முடித்துவிட்டேன் என அளந்து விடுகிறான். நெப்டியூன் என்பது பூமியைப் போல் 17 மடங்கு பெரி யது என்று புள்ளி விவரங்களை புள்ளியாய் வைத்து ஒரு அறிவியல் கோளத்தை கவிதைக் கோடுகளால் வரைந்து தருகிறார் கவிஞர். நிறைவாக, மனித ஆற்றலும் அறிவும் இன்னமும் விரியும் என்று நட்சத்திரங்களுக்கு இடையே நம்பிக்கை யை விதைத்து பெருங்கவிதையை முடித்திருக்கிறார். நட்சத்திரங்கள் வாங்க, விற்க பால் வீதியில் பதாகை  வைப்பான் என்றும், ஜீவாத்மா, பரமாத்மா எனப் பட்டா ணிக்குள் பாற்கடல் கடையும் ஏகாந்தப் பெருமைகளை கருந்துளைகளில் புதைத்து விடுவான் என்று கூறுகிறார்.  கடவுள் குறித்த கேள்வியோடு முடிகிறது கவிதை. கடவுள் அவரல்ல; அது என்கிறார் கவிஞர். ஆமென் என்று  ஆமோதிப்பதைத் தவிர, கடவுளுக்கும் வேறு வழி யில்லை. சாதித்த சலிப்பில்லாமல் இயங்கிக் கொண்டே இருப்ப தால்தான் இயங்கும் இயற்கையை துலக்கமாகவும், துல்லியமாகவும் எழுத முடிகிறது கவிப்பேரரசு வைரமுத்துவால். ஐம்பூதங்களின் சாறு பிழிந்து அர்த்தமுள்ள முகப்பு ஓவியத்தை வரைந்து தந்திருக்கிறார் மதன் கார்க்கி. இந்நூல் கவிஞருக்கு மட்டுமல்ல, அறிவுசார்ந்த தமி ழுக்கும் தனிப்பெரும் சிறப்பாக விளங்கும் என்பதை ஐம்பூதங்களும் முன்மொழிந்து வழிமொழியும்.