tamilnadu

img

ஆடை அரசியல் - சாந்தி சரவணன்

ரிஷியின் அழுகுரல் தெருவோரம்  வரை கேட்டது.
யுவன் கதவை தட்டி உள்ளே வரும் முன், “அப்பா என்று ஓடி சென்று யுவன்  கால்களை கட்டிக் கொண்டான்” ரிஷி. 
“என்னடா செல்லம், ஏன் அழறிங்க, பள்ளிக்கு நேரமாகுதில்ல,   கிளம்புங்க”.
“அப்பா உங்களை பள்ளிக்கு சைக்கிளில் கூப்பிட்டு போய் விடுவேன்”, என்றான். 
ரிஷி அழுகையை நிறுத்தவேயில்லை.
குந்தவை...  குந்தவை , “ குழந்தை ஏன் அழுதுகொண்டே இருக்கிறான்...  இங்கே வா என மனைவியை அழைக்க...”
கத்திக் கொண்டே வந்த குந்தவை, “ நீங்க வந்து உங்க புள்ளைய பார்த்துக்கோங்க, சொன்ன பேச்சை கேட்க மாட்டேங்கிறான்.
 காலங்காத்தால வாக்கிங் போறேன்னு சொல்லிட்டு நீங்க கிளம்பி போயிட்டீங்க. இவனை ஸ்கூலுக்கு  கிளப்பறத்துக்குள்ள போதும் போதும்னு ஆவுது. 
“ஏன் என்ன பண்றான்” நீங்க வாங்க ரிஷி. உங்க அம்மா சொல்ல மாட்டார்கள்.  நீங்கள் சொல்லுங்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை? 
ரிஷி பதில் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தான். 
 “சொல்லுங்க செல்லம். அப்போ தானே அப்பாவுக்கு தெரியும்” என்றான். 
அப்பா “எனக்கு பேண்ட் தான் போட்டுக்கணும்” 
 டெய்லி பேண்ட் தான் போட்டுக்கணும், அப்படின்னு சொல்லிட்டு தொந்தரவு செய்கிறான், என்றாள் குந்தவை
 பால்வாடி ஸ்கூல்ல வெயில் காலத்துல டிரவுசர் போட்டு அனுப்ப சொல்றாங்க. ஆனா இவன் முழு பேண்ட் வேண்டும் என்று கேட்கிறான்.  மூன்று வயசு கூட முழுசா முடியல. அதுக்குள்ள பேண்ட் வேண்டுமாம் பேண்ட் என புலம்பிக் கொண்டு அடுப்படிக்குள் சென்றாள்
“ஏன் தம்பி, ஏன் ஃபுல் பேண்ட் வேணும்னு கேக்குறீங்க. ட்ரவுசர் போட்டு போனா தானே நல்லா இருக்கும்   பெரியவன் ஆன அப்புறம் எப்படியும் நீங்க பேண்ட் தானே போட போறீங்க.  சின்ன வயசுல மட்டும்தான் நம்ம டிரவுசர் போட முடியும். “
ரிஷி கேட்கவேயில்லை, “இல்லைப்பா எனக்கு பேன்ட் தான் வேணும். பேண்ட் தான் வேணும்”
“ கரெக்ட் எதுக்கு ஃபேண்ட் வேணும்”
அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.  எனக்கு பேண்ட் தான் வேணும் என  தொடர்ந்தது அவனது அழுகை. 
அப்பா அம்மாவும் எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் ரிஷி கேட்கவே இல்லை. கடைசியில் அவன் சொன்ன மாதிரியே அவனுக்கு பிடித்த கருப்பு பேண்ட் போட்டுக்கொண்டு பள்ளிக்கு சென்றான். 
இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு யாழினி மாலை ரிஷி வந்தவுடன் பேச வேண்டும் என காத்திருந்தாள்.
யாழினிக்கு திருமணம் முடித்து இப்போது தான் புதிதாக ரிஷியின் பக்கத்து  விட்டில் குடித்தனம் வந்து உள்ளார்கள். 
யாழினியின் இணையர்  யுவன்  கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிகிறார்.   இரவில் வர சில சமயங்களில் 8 மணி ஆகிவிடும்,   அந்த நேரங்களில் யாழினிக்கு உறுதுணையாக இருப்பது ரிஷி தான்.  அவன் கேட்கும் அடுக்கு அடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் அவள் வேலை.  ஆதனால் நேரம் போவதே தெரியாது. அத்தை அத்தை என கூடவே இருப்பான். 
இன்று ஏன் இந்த பையன் இத்தனை அடம் பிடித்தான்.  மாலை வந்தவுடன் அவனை கேட்க வேண்டும் என்று காத்திருந்தாள். 
வழக்கம் போல் மாலை பள்ளியிலிருந்து வந்த ரிஷி சாப்பிட்டு தூங்கி எழுந்து குளித்து விட்டு பாடம் முடித்து... 
அத்தை அத்தை என யாழினி வீட்டுக்குள் வந்தான். 
வாடா குட்டி பயலே!   சாப்பிட்டியா என கேட்டாள். 
“உம் சாப்பிட்டேன் “
அத்தை, “டி. வி போடுங்கள்.  டோரா ..... “
“சரி போடுகிறேன்” என டிவியை ஆன் செய்து விட்டு தட்டில் அவனுக்கு பிடித்த கடலை மிட்டாய் கொண்டு வந்து வைத்தாள்.” 
“அய்  கடலை மிட்டாய்” என எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.
“செல்லம் நான் ஒன்னு கேட்பேன். கரெக்டா பதில் சொல்லனும்” என்றாள்
உம் என்றான் டி. வி பார்த்துக் கொண்டு.... 
காலையில் ஏன் பேண்ட் வேண்டும் என அவ்வளவு அடம் பிடித்தீர்கள்.. 
அப்பா அம்மா நல்லது தானே சொல்றாங்க.... வெயில் காலத்தில் டவுசர் போட்டுக் கொண்டு போனா தானே நல்லாயிருக்கும்..... 
அதுவும் இல்லாமல் நீங்கள் பெரியவன்  ஆன பிறகு பேண்ட் தானே போட போறிங்க..... 
பதில் ஏதும் சொல்லாமல் டி.வியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் ரிஷி.
ரிஷி சொல்லுங்க  .... 
எனக்கு பேண்ட் தான் பிடிக்கும்.. 
அது தான் ஏன் என்று கேட்கிறேன? 
இல்லை. பேண்ட் தான் பிடிக்கும். 
அது சரி.  அத்தை உன் பிரண்ட் தானே. 
ஆமாம்.
அப்போ சொல்லுங்கள். ஏன் உங்களுக்கு பேண்ட் பிடிக்கும்? . 
பேண்ட் போட்டா தடுப்பு ஊசி போட மாட்டாங்க.... என்றான்.. 
யாழினி கேட்டவுடன் ஒரு கணம் அதிர்த்து  போனாள்... 
என்னது தடுப்பு ஊசி போட மாட்டார்களா... 
அம்மா அத்தை!   குழந்தைகளுக்கு தான் தடுப்பு ஊசி போடுவாங்க.  பெரியவர்களுக்கு போட மாட்டாங்க.. 
நான் பேண்ட் போட்டா பெரியவன் தானே.... என டிவி பார்த்துக் கொண்டே சொன்னான். 
யார் விதைத்தது. இந்த சின்னஞ்சிறு அரும்புக்கு ஆடை அரசியலை என யோசித்த வண்ணம் ரிஷியின் அருகில் அமர்ந்தாள் யாழினி.

;