சென்னை, ஜூலை6- உழைக்கும் மக்களுக்காக எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் தீக்கதிர் நாளிதழுக்காக தமிழகம் முழுவதும் தீவிர சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதுவரை சந்தா செலுத்தாதவர்கள், ஏற்கனவே சந்தா செலுத்தி விடுபட்டவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்ட ஊழியர்கள், கட்சியின் பல்வேறு மட்ட தலைவர்களை சந்தித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் சந்தா வழங்கி வருகிறார்கள்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களும் சந்தா வழங்கி வருகிறார்கள். சென்னை கொளத்தூர்
பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்க முக்கிய பங்காற்றியவர் களில் ஒருவர் தோழர் முனுசாமி. 80வயதாகும் அவர் கட்சி சார்பில் நடத்தப்படும் இயக்கங்களில் தவறாமல் கலந்து கொண்டவர். கட்சியை வளர்க்க புரசை, பெரம்பூர், வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிளில் தெருத்தெருவாக சென்று போஸ்டர் ஒட்டியவர், குடும்ப உறவுகளையும் கட்சி தோழர்களையும் சரிசமமாக கருதி பணியாற்றியவர். தோழர் முனுசாமி , அவரது இணை யர் கோதை நாயகி ஆகியோருக்கு புதனன்று (ஜூலை 5) 50ஆவது திருமண ஆண்டு. இதையொட்டி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக்கொண்டிருந்த தோழர் முனுசாமி, கட்சியின் கொளத்தூர் பகுதி செயலாளர் ஹேமாவதியை கண்டவுடன் நிகழ்வுகளை அப்படியே நிறுத்திவிட்டு தனது பொன் விழாவில் தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்குவதாக அறிவித்தார். சந்தா தொகையை வழங்கி குடும்பத்தாருக்கு தீக்கதிரின் மகத்துவத்தை உணர்த்தினார். தம்பதியிடம் வாழ்த்துப் பெற வரிசையில் பலர் காத்திருந்த சூழலில் தீக்கதிர் ஆண்டு சந்தாவிற்கான தொகையை தனது தள்ளாத வயதிலும் கொடுத்துவிட்டு பிற நிகழ்வை தொடர்ந்தார். சந்தாவை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட தோழர் ஹேமாவதி, தீக்கதிர் உதவி ஆசிரியர் ம.மீ. ஜாபர் ஆகியோர் தோழர் முனுசாமி தம்பதிக்கு நன்றி தெரிவித்தனர்.