திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

உயிரை பணயம் வைத்து செய்த பணிக்கு இதுதான் பரிசா? ஊதியக் குறைப்பு, தீவிர போக்குகளுக்கு வழிவகுக்கும்...

புதுதில்லி:
50 சதவிகிதம் சம்பளக் குறைப்பு செய்யப் போவதாக அறிவித்திருப்பது, மிகச் சிக்கலான மற்றும் தீவிர நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று, மத்திய அரசை, ‘ஏர் இந்தியா’ ஊழியர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவத் தொடங்கியதை அடுத்து, வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க ‘வந்தே பாரத்’ திட்டத்தை வடிவமைத்த மத்திய அரசு, ‘ஏர் இந்தியா’ விமானங்கள் மூலம்தான் அதனை மேற்கொண்டு வருகிறது. இப்பணியில், அரசுடன் இணைந்து, உயிரையும் பொருட்படுத்தாமல், 7 லட்சத்து 73 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு பணியாற்றியுள்ளோம். அதற்கு ஊதியக் குறைப்புதான் தங்களுக்குப் பரிசா? என்றும் ‘ஏர் இந்தியா’ ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் 60 விமானிகள், மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில் மேலும் அவர்கள் கூறியிருப்பதாவது:“வந்தே பாரத் திட்டத்துக்காக, அந்தத் திட்டத்தின் முன்னணியில் நின்றவர்கள், (ஏர் இந்தியா ஊழியர்கள்) மிகப்பெரிய விலையைக் கொடுத்தார்கள். இந்நாள் வரை வந்தே ‘பாரத் திட்டத்தில் ஈடுபட்ட விமானிகளில் சுமார் 60 விமானிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் மத்திய அரசு, ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு சுமார் 75 சதவிகிதம் வரையிலான ஊதியக்குறைப்பை அறிவித்துள்ளது. இது விமானி களின் குடும்பங்களில் மிகச் சிக்கலான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அரசின் இந்த முடிவானது பாரபட்ச மாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் உள்ளது. இந்த முடிவால் ஊழியர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள். அது மிகத் தீவிர நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இதைக் கடந்த கால செயல்பாடுகளும் உணர்த்தியுள்ளன.” இவ்வாறு விமானிகள் தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

‘ஏர் இந்தியா’ நிறுவனம், தனது ஊழியர்களில் பலரை, சம்பளமில்லாமல் விடுப்புக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது. சில ஊழியர்களை, சுமார் 5 ஆண்டுகள் சம்பளமில்லாத விடுப்பில் அனுப்பியது. அத்துடன் 50 சதவிகிதம் வரை சம்பளக் குறைப்பு ஆயுதத்தையும் கையில் எடுத்துள்ளது.இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், “ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து இயங்க வேண்டுமா அல்லது சம்பளம் வேண்டுமா? என்பதை நீங்கள்தான் (ஊழியர்கள்) முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி ஊழியர்களைப் பயமுறுத்தினார். ‘ஏர் இந்தியா’ நிறுவனம் மூடப்பட்டால் யாருக்குமே வேலை இருக்காது என்றும் அவர் மிரட்டினார். இந்தப் பின்னணியிலேயே 60 விமானி கள் தற்போது அவருக்கு கடிதம் மூலம் போராட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

;