tamilnadu

img

ஊடகங்களை அச்சுறுத்தும் சர்வாதிகாரப் போக்கிற்கு நிறுவனங்கள் அடிபணியக்கூடாது... ஒன்றுபட்டு எதிர்கொள்ள மூத்த பத்திரிகையாளர்கள் வேண்டுகோள்

சென்னை:
ஊடகங்களை அச்சுறுத்தும் சர்வாதிகாரப்போக்கிற்கு நிறுவனங்கள் அடிபணியக்கூடாது; அச்சுறுத்தலை ஒன்றுபட்டு எதிர்கொள்வோம் என்று ஊடக ஆசிரியர்கள், மூத்த பத்திரிகை யாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.  அந்த அறிக்கையின் சுருக்கம் வருமாறு:

ஊடகத்துறையினர் தொழில் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் பல்முனை தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. வெறுப்பை பரப்பும் சில சக்திகள்ஊடகங்கள், பத்திரிகைகள் இதைத்தான் பேச வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கில் உத்தரவிட முயல்கின்றன. பல கருத்து உடையவர்கள் ஊடகத்தில் இணைந்து பணியாற்றும் நிலையில் குறிப்பிட்டசித்தாந்தம் கொண்டவர்கள் மட்டும் ஊடகத்தில் இடம் பெறக்கூடாது என்ற பிரச்சாரத்தை அந்த சக்திகள் முன் வைக்கின்றன. அந்த சக்திகள், சில ஊடகங்களின் உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதி குறிப்பிட்ட சிலரை நீக்க வேண்டுமென்றும் அச்சுறுத்துகின்றன. இந்த நிர்ப்பந்தத்துக்கு ஊடக நிறுவனங்கள் அடிபணியக் கூடாது.சுதந்திரப் போராட்ட காலத்திலும், அவசரநிலை காலத்திலும் பத்திரிகைகள் அதிகாரத்தில்இருப்பவர்களின் தணிக்கை முறையை சந்தித்து அந்த அடக்குமுறையிலிருந்து வெற்றிகரமாக மீண்டு உள்ளன. இன்றைய சூழலில் தங்களைத்தாங்களே நடுநிலையாளர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டுள்ள சக்திகளின் அச்சுறுத்தல் அதிகமாகிவிட்டது. இத்தகைய சக்திகளின் நெருக்குதல்களை ஊடகவியலாளர்கள் தனித்தனியாக சந்தித்து வருகின்றனர். தனிநபர் ஆபாசத் தாக்குதலுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆளாக நேரிட்டுள்ளது. குடும்பத்தினர் மீதும் விமர்சனம் வைக்கின்றனர். இந்தப் போக்கு சுதந்திரமான ஊடகச் செயல்பாட்டுக்கு தடை ஏற்படுத்துகிறது.

காவல்துறை இப்பிரச்சனையில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசமைப்புச் சட்டம் வழங்கிய கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்மைத்துவம் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும்.  இவ்வாறு கூட்டறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.இந்த கூட்டறிக்கையில் ‘தி இந்து’ வாசக ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ப்ரண்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், தி நியூஸ் மின்ட் ஆசிரியர் தன்யராஜேந்திரன், கவுண்டர் கரண்ட்ஸ் இணை ஆசிரியர் சத்யா சிவராமன், செம்மலர் ஆசிரியர் தமிழ்ச்செல்வன், புதுவிசை ஆசிரியர்ஆதவன் தீட்சண்யா, இப்போது.காம் ஆசிரியர் பீர் முகம்மது, யுடர்ன்.இன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன், கலாட்டா.காம் அரசியல் பிரிவு ஆசிரியர் ஆர்.விக்ரமன், தி கேரவன் இணையதள பத்திரிகை ஆசிரியர் ஆர்.அபய்,மூத்த பத்திரிகையாளர்கள் இரா.ஜவஹர், ஜென்ராம், சிகாமணி, மயிலை பாலு,  பொன்.தனசேகரன், தீக்கதிர் குமரேசன், ஆர்.கே.ராதாகிருஷ்ணன், ராஜேஷ்சுந்தரம், ராயப்பா, விஜய்சேகர், கணபதி, சாவித்திரிகண்ணன், மணா, வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி, கவின்மலர் மற்றும் ஆர்.ரங்கராஜன், (சென்னை நிருபர்கள் சங்கம்), ஏ.ஆர்.பாபு ( தலைவர் கோயம்புத்தூர் பிரஸ் கிளப்), எம்.அசீப் ( மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்), நெறியாளர்கள் கார்த்திகேயன், தம்பி தமிழரசன் உள்ளிட்டு 50-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.