கொச்சி:
திருவனந்தபுரம் விமான நிலையத்தின் செயல்பாட்டை அதானி மேற்கோள் காட்டியதொகைக்கு கையகப்படுத்த தயாராக இருப்பதாக கேரள அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இத்தகவலுடன் மத்தியஅரசுக்கு அனுப்பிய கடிதம் புறக்கணிக்கப்பட்டதாக கேரள அரசு ,நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் விமான நிலையத்தை நடத்துவதற்கான முடிவுக்கு எதிராக கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. புதனன்று இந்த மனுவை நீதிமன்றம் பரிசீலிக்கும் போது அரசாங்கம் இதனைக் கூறியது. முன் அனுபவமில்லாத அதானி குழுமத்திடம் விமான நிலைய செயல்பாட்டை ஒப்படைப்பது விமான நிலைய விதிமுறைகளுக்கு எதிரானது. முன்அனுபவம் உள்ள கேரள அரசு புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு நிலத்தில் இயங்கும் விமானநிலையத்தை ஒரு தனியார் குழுவிடம் ஒப்படைப்பது பொது நலனுக்கு எதிரானது என்று அரசாங்கம் கூறியுள்ளது. நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் சி.எஸ். டயஸ் அடங்கிய அமர்வு முன்பு அரசாங்கத்தின் முதல்கட்ட விசாரணை முடிந்தது. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான விகாஸ் சிங் அரசாங்கத்திற்காக ஆஜரானார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தின் நிர்வாகத்தை அதானி குழுமத்திடம் மத்திய அரசு பொது நலனை முற்றிலுமாக புறக்கணித்து ஒப்படைத்ததாகவும் கே.எஸ்.ஐ.டி.சியும் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. மத்திய அரசின் நடவடிக்கை மாநிலமற்றும் பயணிகளின் நலனுக்கு எதிரானதுஎன்றும், விமான நிலையத்தின் செயல்பாட்டிற்கு ஒரு போட்டி டெண்டரை சமர்ப்பிக்க முடியாது என்றும் கே.எஸ்.ஐ.டி.சி தெளிவு படுத்தியது. கே.எஸ்.ஐ.டி.சியின் டெண்டர் பயணிகளின் நலனுக்காக உள்ளது. ஒரு நியாயமான தொகையை மட்டுமே மேற்கோள் காட்ட முடியும். ஆறு விமான நிலையங்களுக்கான டெண்டர்களை சமர்ப்பித்த அதானியால், அதன் வருவாயை ஈடுகட்ட முடியும் என்று கே.எஸ்.ஐ.டி.சி.வாதிட்டது. இந்த வழக்கில் கே.எஸ்.ஐ.டி.சியின் வாதமும் முடிந்துவிட்டது. இந்த வழக்கில் ஒரு தரப்பாக உள்ள விமான நிலையஊழியர்களின் வாதங்களும் நிறை வடைந்தன. வியாழனன்று மத்திய அரசின் பதில் வாதம் நடந்தது.