tamilnadu

img

கொன்ற தத்துவம் கோலோச்சுகிறது - என்.சிவகுரு

“ஒரு பைத்தியக்காரன் அவரைக் கொன்று விட்டான்.. இத்தகைய காரியத்தை செய்தவன் பைத்தியக்கா ரன் என்றே நான் சொல்லுவேன். நமது நாட்டில் கடந்த சில வருடங்களாக கொடும் நஞ்சு விதைக்கப்பட்டு வரு கிறது. அந்த விஷம் மக்களின் மனதில் வேலை செய்தது…அந்த கொடும் நஞ்சை சமாளித்து அதை பூண்டோடு அழித்திட வேண்டும்...” - மகாத்மா காந்தி ஜனவரி 30ஆம் தேதியன்று இந்துத்துவ மத வெறியனால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட போது ஜவஹர் லால் நேரு வாசித்த அஞ்சலி குறிப்பின் சிறு பகுதியே இது. இந்தியாவின் தேசத் தந்தை காந்தியடிகள் கொல்லப்பட்டு ஆண்டுகள் 72 ஆகிவிட்டது. அவர் எதற்காக கொல்லப்பட்டாரோ அந்த நஞ்சே இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் காந்தியின் துணை முன்னெப்போதையும் விட கூடுதலாக தேவைப்படுகிறது. 

காந்தியின் வாழ்வை நாம் உற்று நோக்கினால், அதி காரத்திற்கு எதிரான சமரசமற்ற போரும், அனைவருக்கும் நல்லதொரு வாழ்க்கையை உத்திரவாத படுத்துவதும் தெரிய வரும். பல்வேறு தனிநபர் குண நலன்களை கொண்ட காந்திய டிகளை இன்று பாஜக அரசு “ஸ்வச் பாரத்” (தூய்மை இந்தியா) திட்டத்தின் தூதுவராக மாற்றியுள்ளது. கிராமங்களே இந்தியாவின் ஆதாரம்; அது முன்னேற்றம் அடையாமல் நாடு முழு வளர்ச்சி அடையாது என காந்தி வலியுறுத்தி வந்தார். இன்றைய இந்தியா அவரின் கனவோடு ஒத்து போகிறதா? நிச்சயம் இல்லை. கிராமப்புற மக்களின் வாழ்வியலில் சிறு மாற்றம் கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டம், ஆபத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது. உலக அளவில் ஏற்றத்தாழ்வுகள் பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது. இந்தியாவில் 9 பெரும் பணக்காரர்களின் செல்வ மதிப்பு இந்திய மக்கட் தொகையில் கீழ் நிலையில் (பொருளாதாரத்தில்) உள்ள 50% மக்களின் சொத்துக்க ளுக்கு நிகராக உள்ளது. செல்வக் குவிப்பு ஒரு பக்கம் சீராக நடந்து கொண்டிருக்க கிராமப்புற பொருளாதாரமோ உடைந்து சின்னாபின்னமாகி வருகிறது. 

இந்து பண்பாட்டை காக்கும் “இந்து அரசு” அமைவதை காந்தி ஒரு போதும் ஏற்கவில்லை என்பதாலேயே துவக்கத்தி லிருந்தே முரண் துவங்கியது. இந்துத்துவ சித்தாந்தம் முன்வைத்த வரலாற்றை காந்தி நிராகரித்தார். அவர் பன்முக கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டவர். பல இனங்கள், மதங்கள், மொழிகள் என அனைத்திலும் பன்மைத் தன்மை கொண்ட இந்தியாவை ஒற்றைக் கலாச்சாரமாக முன் வைக்க நினைக்கும் இந்துத்துவ கும்பலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட தத்துவ மோதலின் விளைவே காந்தியின் படுகொலைக்கு காரணம். அறிவுலகத்தில் தன்னை எதிர்ப்ப வர்களைக் கொல்வதே அவர்களின் வழிமுறை… அப்படி தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை குறிப்பாக மரணத்தைப் பற்றி காந்தி முன்கூட்டியே கணிக்கிறார். 

1924லிலேயே ஒரு ரயில் பயணத்தின் போது, தன் நண்பரி டம் தனக்கு இயற்கையான மரணம் நிகழாது என்கிறார். சுதந்திர போராட்டத்தின் போதே இந்துத்துவ சக்திகளின் பிற்போக்கு கொள்கைகளை தைரியமாக எதிர்கொண்டவர்; இந்து எனும் அடையாளத்தை மட்டும் வைத்து ஒட்டுமொத்த சுதந்திர வேட்கையை திசை திருப்ப ஒரு கூட்டம் தொடர்ந்து முயற்சிப்பதை அவர் நன்கு அறிந்து கொண்டதின் விளைவே அவர்களுக்கு எதிரான அனைத்து வினையாற்றல்.  சுதந்திரப் போராட்டத்தோடு இந்துத்துவா மத வெறியர்க ளை நன்கு அடையாளம் கண்டு தன் பணிகளை செய்துள் ளார் காந்தி.  1940 ஆம் ஆண்டு அவர் நடத்தி வந்த ‘ஹரிஜன்’ இதழில் மரணம் குறித்து இவ்வாறு எழுதுகிறார்: “என்னை எரித்த இடத்தில் உள்ள நினைவிடத்தில், இவர் ஆன மட்டும் முயன்றார். ஆனால் படுதோல்வியடைந்தார்” என எழுதி வையுங்கள்.” 

சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் என்பதையே அடிப்படையாக கொண்டவரை மூர்க்க எண்ணம் கொண்ட மதவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியுமா?  சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாத ஒரு கூட்டம், ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்காத ஒரு அமைப்பு,காலனி ஆதிக்க ஒழிப்பு, சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம் போதிக்கும் ஒருவரை ஏற்றுக் கொள்ளுமா? ஒருவரை ஒழித்தாலே அவரின் கொள்கைகள் ஓய்ந்து விடும் எனும் கொடூர குணம் கொண்டவர்கள் காந்தியை ஒழிப்பதே தங்களின் லட்சியமாக கருதினர். இது காந்திஜிக்கும் தெரியும் என்பதே உண்மை. 

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948ல் தான் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர் இப்படி சொல்கிறார்: “நான் ஒரு பைத்தியக்காரனின் தோட்டாவால் இறக்க நேர்ந்தால், நிச்சயம் நான் புன்னகைக்க வேண்டும். கடவுள் என் இதயத்திலும், உதடுகளிலும் இருக்க வேண்டும். ஆக ஏதாவது ஒன்று நடந்தால் நீங்கள் யாரும் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தக் கூடாது.”  

தன் மரணம் யாரால் நிகழப்போகிறது என்பதைக் கூட துல்லியமாக சொல்ல முடிந்த ஒரு மாபெரும் தலைவர் காந்தியடிகள். மதவெறி கூட்டம் தங்களின் முதல் எதிரியாக காந்தியை கருதியதின் விளைவே அவரை கொலை செய்ய திட்டமிட்டது. ஜனவரி 28ஆம் தேதியே காந்தியாரை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டு,அது நிறைவேறாமல் போனது. அதில் முக்கிய குற்றவாளி மதன் லால் பாவா. அவருக்கு அளிக் கப்பட்ட சிறை தண்டனை முடிந்து 1998ல் தான் விடுதலை யானார். முதுமையான வயதில் அவர் “அவுட்லுக்” இதழுக்கு பேட்டியளித்தார். அதில் இரு முக்கியமான பதிவுகள் நமது கவனத்தில் எப்போதும் இருப்பது நல்லது:

காந்தி இந்தியாவை பாழாக்கியவர். நான் அவரை கொலை செய்ய முடியாமல் போனதற்கு இன்னமும் வருந்துகிறேன். அந்த செயல் (காந்தியின் கொலை) மீண்டும் நிகழ வேண்டுமானால், எல்லா இடதுசாரிகளும், காங்கிரஸ்கா ரர்களும் குண்டு வீசி அழிக்கப்பட வேண்டும்.. விடுதலை ஆகும் போது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு தினமும் டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தவரின் வன்மத்தை  பாருங்கள். காந்தி இறப்புக்கு வருத்தமே தெரிவிக்காதவர்…இது தான் அவர்களின் மூர்க்கம்…

இதே போல் எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் 2016ல் வெளிவந்த மற்றொரு பேட்டியும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பேட்டி கொடுத்தவர் சத்யாகி.. இவர் நாதுராம் கோட்சேவின் கொள்ளுப் பேரன்… இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயமாக இருக்கும் பாஜக ஆட்சியாளர்கள் காந்தியின் தத்துவ இருப்பை முற்றிலும் அழிக்கப் பார்க்கிறார்கள். எந்த கொள்கைகளை தன் வாழ் நாள் முழுவதும் எதிர்த்தாரோ அந்த இந்துத்துவா மதவெறிக் கோட்பாட்டை எல்லோரையும் இணைத்து எதிர்த்து வரலாற்றின் குப்பை தொட்டிக்குள் தூக்கி எறிவதே காந்திக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

 

;