மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, 2019 ஜனவரியில், ‘எதிர்பார்க்கப்பட்ட தரங்களை மீறுவதாக’ இருப்பதாகவும்,
‘உண்மைகளுக்கு ஏற்ப இல்லை’ என்ற வகையில் பதிவுகளை அந்த பக்கங்கள் கொண்டிருந்தன என்றும் குறிப்பிட்டு தனக்கு
எதிரான 44 பக்கங்களின் பட்டியலை ஃபேஸ்புக் இந்தியாவிடம் பாரதிய ஜனதா கட்சி குறித்துக் காட்டியது என்று இந்தியன்
எக்ஸ்பிரஸ் பத்திரிரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த 44 பக்கங்களில் 14 பக்கங்கள் நீக்கப்பட்டு, அந்த சமூக ஊடக
மேடையில் தற்போது இருக்கவில்லை.
பீம் ராணுவத்தின் உத்தியோகபூர்வ பக்கமான, ‘நாங்கள் பாஜகவை வெறுக்கிறோம்’ என்ற நையாண்டி தளம்,
எதிர்க்கட்சியான காங்கிரஸை ஆதரிக்கின்ற அதிகாரப்பூர்வமற்ற பக்கங்கள் மற்றும் ஆல்ட்-நியூஸ் செய்த உண்மை
சரிபார்ப்புகளைப் பகிர்ந்து கொள்கின்ற ‘குஜராத்தின் உண்மை’ என்று அழைக்கப்படுகின்ற மற்றொரு பக்கம் ஆகியவை
காவி கட்சியால் குறித்துக் காட்டப்பட்டிருந்தன. ஃபேஸ்புக் இந்தியா அகற்றிய பக்கங்களில் பத்திரிகையாளர்கள்
ரவிஷ்குமார் மற்றும் வினோத் துவா ஆகியோருக்கு ஆதரவான பக்கங்களும் அடங்கும்.
இதற்கிடையில், ஏற்கனவே நீக்கப்பட்டிருந்த 17 பக்கங்களை மீண்டும் சேர்க்குமாறு ஃபேஸ்புக் இந்தியா குழுவிடம் ஆளும்
கட்சி கேட்டுக் கொண்டது. தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வை பரப்பியதாக ஓபிஇந்தியா மீது தொடர்ந்து குற்றம்
சாட்டப்பட்டு வந்த நிலையில், தங்களுடைய உள்ளடக்கத்திற்கான விளம்பர வருவாயை வலதுசாரி சாய்வு கொண்ட
இரண்டு செய்தி இணையதளங்களான ஓபிஇந்தியா மற்றும் தி சௌபால் ஆகியவை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும்
என்று பாஜக விரும்பியது.
தனது தளத்திற்கான விளம்பர வருவாயை 2019இல் ஃபேஸ்புக் ரத்துசெய்ததாகவும், அதற்குப் பிறகு அது
அனுமதிக்கப்படவில்லை என்றும் தி சௌபாலின் நிறுவனரான விகாஸ் பாண்டே கூறினார். பாஜகவின் தகவல்
தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியாவிடம், அந்தப் பக்கங்கள் ‘தவறுதலாக’ நீக்கப்பட்டதாக ஃபேஸ்புக்
கூறியதாக அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது. மீண்டும் சேர்க்கப்பட்ட அந்த 17 பக்கங்கள், வலதுசாரி வலைத்தளமான
போஸ்ட்கார்டு நியூஸின் பிரத்தியேக உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொண்டவையாக இருக்கின்றன. அவற்றில் பல
கன்னடத்தில் உள்ளன. கடந்த காலங்களில் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதில்
போஸ்ட்கார்டு நியூஸ் இணையதளத்தின் இணைநிறுவனரான மகேஷ் விக்ரம் ஹெக்டே ஈடுபட்டிருப்பது
நிரூபிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த சமணத் துறவி ஒருவரைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பிய
குற்றச்சாட்டில் 2018 மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஃபேஸ்புக் தளங்கள் வழியாக, போலிச் செய்திகளின் உள்ளடக்கம், அரசு ஆதரவு கொண்ட தவறான தகவல் பிரச்சாரங்கள்
மற்றும் வன்முறை உள்ளடக்கம் கொண்ட செய்திகள் ஆகியவை பரவியதால், ஃபேஸ்புக் நிறுவனம் கடுமையான
விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
நீக்கப்பட்ட 17 பக்கங்களும் ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்புடையவை என்று நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.
மாளவியா, அங்கி தாஸ் மற்றும் சிவ்நாத் துக்ரால் ஆகியோருக்கு இடையேயான மின்னஞ்சல்கள் மூலம் பாஜக இந்த
கோரிக்கைகளை முன்வைத்தது. தாஸ், துக்ரால் இவர்கள் இருவரும் இந்தியாவில் ஃபேஸ்புக்கின் பொதுக்கொள்கை
தொடர்பான உயர்மட்ட நிர்வாகிகள். இவர்கள் இருவரும் காவிக் கட்சியை ஆதரித்ததான சர்ச்சையின் மத்தியில் உள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு கிடைத்த 2019 பிப்ரவரி முதலான மின்னஞ்சல்களில், பாஜக-சார்பு ஃபேஸ்புக்
பக்கங்கள் சிலவற்றைப் ‘பாதுகாப்பது’ பற்றி ஃபேஸ்புக் இந்தியாவுடன் தான் விவாதித்த சந்திப்பு பற்றி மாளவியா
குறிப்பிடுகிறார். காவிக்கட்சி மீது ‘தவறாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது’ என்று கருதுகின்ற பக்கங்களைப் பற்றி
விவாதிப்பதற்காக 2019 ஜனவரியில் நடந்த கூட்டத்தில் துக்ரால் அந்த யோசனையைப் பரிந்துரைத்ததாக மாளவியா
கூறுகிறார்.
‘நான் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்’ என்பது போன்ற பக்கங்களும் உண்மையான தொண்டர்களால் நடத்தப்படும் பிற
பெரிய பக்கங்களும் இருந்தன. ‘அவர்கள் தாக்கப்படுவார்கள் என்று அஞ்சினர்’ என்று அந்த செய்தித்தாளிடம் மாளவியா
கூறியிருந்தார். ‘கடந்த காலத்தில் நாங்கள் ஃபேஸ்புக்கோடு பேசினோம். சரியானதைச் செய்யும்படி அவர்களிடம் கேட்டுக்
கொண்டோம். அவர்கள் எங்களுக்குப் பதிலளிப்பதில்லை. மிகவும் வெளிப்படையான மற்றும் நியாயமான முறையை
நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அவர்கள் வேறுவிதமாக நினைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது’.
ஃபேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ஒருவர், பாஜக ஐடி அணித் தலைவரால் பயன்படுத்தப்பட்ட ‘பாதுகாப்பது’ என்பது
போன்ற எந்த வார்த்தையும் இல்லை என்று கூறினார். ‘எங்களிடம் சரிபார்ப்பதற்கான செயல்முறை உள்ளது. சில
பக்கங்களின் உள்ளடக்கம் மற்றும் சுயவிவரங்களை இரண்டாவது அடுக்கு மதிப்பாய்வு கொண்டு உறுதி செய்வதன் மூலம்,
அமலாக்கத்தில் இருக்கின்ற பிழைகளைக் குறைப்பதற்கானதொரு அமைப்பாக அது இருக்கின்றது. எங்கள் கொள்கைகளை
நாங்கள் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அது செய்யப்படுகிறது’ என்று
அந்தத் செய்தித் தொடர்பாளர் கூறினார். ‘எங்கள் சமூகத்தின் தரங்களை மீறுவது கண்டறியப்பட்டால், அது அமலாக்க
நடவடிக்கையைத் தடுக்காது’ என்றும் அவர் கூறினார்.
மாளவியா நவம்பரில் அந்த ‘பாதுகாக்கப்பட வேண்டிய’ பக்கங்கள் குறித்த நினைவூட்டலை அனுப்பியிருந்தார். அவற்றில்
எட்டு பக்கங்கள் ஃபேஸ்புக்கில் உள்ள மிகப்பெரிய பாஜக ஆதரவு பக்கங்கள் ஆகும்.
‘அரசியல் மற்றும் அரசாங்கத்தை அணுகக்கூடிய உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்கொள்கைக் குழு, 2019 தேர்தலின்
போது அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளியாக இருந்தது’ என்று அந்த செய்தித்
தொடர்பாளர் கூறினார். ‘பிரச்சாரத்தின் போது, தங்கள் அதிகாரப்பூர்வ மற்றும் ஆதரவு பக்கங்களால் எதிர்கொள்ளும்
பிரச்சினைகளை பல கட்சிகளும் அதிகரித்துக் கொண்டன. அதிகரித்தல்களைத் தீர்மானிக்கும், செயல்படுத்தும் பல்வேறு
நிபுணர் குழுக்களிடம் இந்த அதிகரித்தல் குறித்து தர வேண்டும் என்பது எங்களுடைய உள்செயல்முறைக்குத்
தேவைப்படுகிறது. உலகளாவிய தேர்தல் குழுக்கள் சமூகத் தரங்களின் அடிப்படையில் அமலாக்கத்தை மேற்பார்வையிடும்
உள்ளடக்கக் கொள்கைக் குழுக்களுடனும், அதேபோன்று அமலாக்கத்தை மேற்பார்வையிடும் செயல்பாட்டுக்
குழுக்களுடனும் இணைந்து முடிவுகளை எடுக்க உதவுகின்றன. சிவில் சமூகம், ஊடகங்கள் அல்லது அரசாங்க நிறுவனங்கள்
போன்ற பிற பங்குதாரர்களைப் போலவே, எங்களுடன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்து அரசியல் கட்சிகளும்
குறிப்பிட்டுக் காட்டலாம்’ என்கிறார்.
ஃபேஸ்புக் சர்ச்சை
பாஜக தலைவர்களின் கலகமூட்டுகின்ற பதிவுகளை நீக்குகின்ற யோசனையை, ‘இந்தியாவில் நிறுவனத்தின் வணிக
நலன்களை அது பாதிக்கும்’ என்று எச்சரித்து அங்கி தாஸ் எதிர்த்ததாக, ஆகஸ்ட் 14அன்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி
வெளியிட்ட பிறகு, ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டது. காவிக்கட்சியுடன்
தொடர்புடைய போலி செய்தி பக்கங்களை ஃபேஸ்புக் நீக்கியுள்ளதாக செய்தியை தாஸ் வெளியிடவில்லை என்று அந்த
செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் இந்தியாவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த பாஜகவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ஆகஸ்ட் 27
அன்று டைம் பத்திரிகை வெளியிட்ட மற்றொரு அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர்
கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், இந்தியாவில் மிகவும்
பிரபலமான சமூக செய்தி செயலியான வாட்ஸ்ஆப்பையும் கொண்டிருக்கிறது. ‘இந்தியாவில் பணம் செலுத்துகின்ற
செயலியாக வாட்ஸ்ஆப்பின் எதிர்காலமானது, தேசிய கொடுப்பனவு கட்டுப்பாட்டாளரின் இறுதி ஒப்புதலைப் பொறுத்ததாக
இருக்கிறது. அது இன்னும் நிலுவையில் உள்ளது’ என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
பாரதிய ஜனதாவுடனான உறவு அழிவதைத் தவிர்ப்பதற்காக, ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய அணி தன்னுடைய
வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான கொள்கையைப் புறக்கணித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, அந்த
சமூக ஊடக நிறுவனம் என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்று ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்
ஜுக்கர்பெர்க்கிடம் கடந்த பதினைந்து நாட்களில் இரண்டாவது முறையாக காங்கிரஸ் கட்சி கேட்டிருக்கிறது. செய்தியிடல்
செயலி மூலமாக வெறுக்கத்தக்கப் பேச்சுக்களை வெளியிட வாட்ஸ்ஆப்பின் இந்தியக் குழு அனுமதித்ததாகவும், அதன்
விளைவாக இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தைக் கிழித்தெறிந்து விட்டது என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் குறித்து விதிகளை முறையாகப் பயன்படுத்தவில்லை என்ற
குற்றச்சாட்டுகள் குறித்து, செப்டம்பர் 2 அன்று* ஃபேஸ்புக் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலுக்கு தகவல்
தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான
தில்லி சட்டமன்றக் குழுவும் ஃபேஸ்புக் அதிகாரிகளை வரவழைக்க முடிவு செய்துள்ளது.
ஃபேஸ்புக்கின் விளம்பரச் செலவினக் கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, கடந்த 18 மாதங்களில், சமூக பிரச்சினைகள்,
தேர்தல்கள் மற்றும் அரசியல் குறித்து ஃபேஸ்புக்கில் சிறந்த விளம்பரதாரராக பாஜக இருந்தது என்பதுவும்
வெளிப்பட்டுள்ளது.
* செப்டம்பர் 2 அன்று சசிதரூர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஃபேஸ்புக் நிர்வாகத்தின் சார்பில் அதன்
நிர்வாக இயக்குநரான அஜித் மோகன் கலந்து கொண்டார். மூன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்திற்குப் பிறகு,
மீண்டுமொரு முறை தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவை ஃபேஸ்புக் அதிகாரிகள்
சந்தித்து விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போதிருக்கின்ற தொழில்நுட்பத் துறைக்கான
நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஓராண்டு பதவிக்காலம் செப்டம்பர் 12 அன்று முடிவடையும் நிலையில், மக்களவை
சபாநாயகர் புதியதொரு நிலைக்குழுவை அமைத்த பிறகே, விடாரணைக்கான அடுத்த சந்திப்பு நிகழக் கூடும் என்று
கருதப்படுகிறது.
நன்றி: - https://scroll.in/latest/971905/facebook-removed-14-of-44-pages-flagged-by-bjp-ahead-of-2019-
elections-report
தமிழில் தா.சந்திரகுரு