tamilnadu

img

புலம்பல் அல்ல... நீதிக்கான குரல்...

தேசம் தழுவிய வேலை நிறுத்தம் ஏன்?

வேலை நிறுத்தத்தின் முக்கிய கோரிக்கை குறைந்த பட்ச ஊதியமாக ரூ. 21000, குறைந்தபட்ச பென்சனாக ரூ.10000 நிர்ணயம் செய் என்பது! இது அரசின் வருமான மறு பங்கீடு எப்படி பாரபட்சமாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடு. 2014 ல் 33 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் வரிகள் 22 சதவீதமாக 6 ஆண்டுகளில் குறைக்கப்பட்டுள்ளது. சில புதிய நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே. இதனால் அரசுக்கு ரூ.145000 கோடிகள் இழப்பு என்று நிதி அமைச்சரே அறிவித்தார். சில நாட்களுக்கு முன்பு நிதியமைச்சருடன் முன் பட்ஜெட் விவாதத்தில் தொழிலதிபர்கள். எல்லா தொழிலதிபர்களுக்கும் 15 சதவீதம் என்கிற ஒரே நீதி (?) வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.  ஒரு திரைப்படத்தில் வடிவேலு பலசரக்கு கடை படிக்கற்களைத் திருடி விற்று விட்டு பணத்தை எண்ணிக் கொண்டு வருவார். படிக்கற்களை பறி கொடுத்த பலசரக்கு கடைக்காரர் குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டு இவ்வளவு ரூபா மதிப்புள்ள பொருள் போச்சே என்று வழியில் வடிவேலுவைப் பார்த்து புலம்புவார். அவர் சொன்ன மதிப்பை கேட்டவுடன் நம்மை ஏமாத்திட்டான்டா என்று வடிவேலு, திருட்டு பொருளை வாங்கிய வியாபாரி மீது  கூட்டாளிகளிடம் கோபப்படுவார்.  பலசரக்கு கடைக் காரர் என்னுடைய பொருளு... இவன் ஏமாந்தேன் என்கிறானே என்று திகைத்துப் போய் நிற்பார். 

அது போல தேசத்தின் வருமானத்தில் மக்கள் மீது வரி போட்டு விட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை வழங்கினால் அதில் எனக்கு 10 சதவீத சலுகை, சிலருக்கு 18 சதவீத சலுகையா என “நீதி” கேட்கிறார்கள் கார்ப்பரேட்டுகள். ஏமாந்தவர்களுக்கு கணக்கு போடுகிற உரிமை கூட இல்லை. ஏப்பம் விட்டவர்கள் எவ்வளவை விழுங்கினோம் என்று சண்டை போடுகிறார்கள்.  இப்படி வரிச் சலுகை ஒரு ரகம். இந்த சலுகை வரிகளையாவது ஒழுங்காக கட்டுகிறார்களா என்பது இன்னொரு ரகம். இந்து பிசினஸ் லைன் டிசம்பர் 28 ல் வருமான வரித்துறை விடுத்துள்ள நோட்டீசுகள் பற்றிய செய்தி வந்துள்ளது.  இப்படி நோட்டீஸ் விடப்பட்டு கட்டாமல் உள்ள நேரடி வரிகள் 2017-18 ல் 6,23,539 கோடிகள். இது 2018-19 ல் 9,96,829 கோடிகள். ஒரே ஆண்டில் 3,73,290 கோடிகள் உயர்வு. 60 சதவீதம் ஜம்ப் ஒரே ஆண்டில்...! மொத்த நோட்டீஸ் தொகையான 9,96,839 கோடிகளில் 5,02,158 கோடி பாக்கி கார்ப்பரேட்டுகளின் வருமானம் சம்பந்தப்பட்டதாகும்.

நாடாளுமன்ற நிதி அமைச்சக நிலைக் குழு செப் 30, 2019 அன்று வரை வருமான வரித் துறை விடுத்த 12,30,201 கோடி நோட்டீஸ் தொகையில் 12,17,749 கோடிகள் வசூல் ஆவதில் சிரமம் இருப்பதாக கூறியுள்ளது. மத்தியக் கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர் (சி.ஏ.ஜி) அறிக்கையின் படியும் 98.6 சதவீதம் வசூல் ஆவது கடினம் என்பதே. இதுதொடர்பாக நிலைக் குழுவிற்கு வருமான வரித் துறை தந்த விளக்கம் என்ன தெரியுமா?  நோட்டீஸ் விடுக்கப்பட்டவர்கள் முகவரியை தேட முடியவில்லை, அதிகார மட்டங்களில் உள்ளவர்கள் தடுத்து விடுகிறார்கள், வரி பாக்கி வைத்திருப்பவர்களிடம் போதுமான சொத்து இல்லை என்கிற வழக்கமான பதில்களே. 

நிலைக் குழுவின் கருத்து என்ன? நோட்டீஸ் விடுக்கப்பட்ட வரி பாக்கிகள் வசூலிக்கப்படுவதற்கு முதல் முன்னுரிமை தரப்பட வேண்டும்; குறித்த காலத்தில் வசூலிக்கப்பட வேண்டும்; இதற்கான திட்ட வட்டமான முறைமை தேவை என்பதே. இதன் பொருள் என்ன?  இந்த முனைப்பு இப்போது இல்லை என்பதுதானே.  நிதி ஒழுங்கு பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசுபவர்கள் பல லட்சக் கணக்கான கோடி ரூபாய் தொகைகளை எப்படி கார்ப்பரேட் கைகளில்  வசூலிக்காமல் அலட்சியமாய் விடுகிறார்கள் என்று பாருங்கள்!  இவையெல்லாம் ஒளிக்கப்பட்ட பணம். ஆனால் தொழிலாளர் கேட்பது உழைப்பிற்கான பணம். குறைந்த பட்ச கூலியே. ரூ .21000 ஐ  கொடுக்க மூக்கால் அழுபவர்கள் பல லட்சம் கோடிகளை எப்படி அள்ளித் தருகிறார்கள்? படிக் கல்லைப் பறி கொடுத்தவர்கள் போல புலம்புபவர்கள் அல்ல தொழிலாளர்கள். வருமான மறு பங்கீட்டில் நீதி கேட்பவர்கள். அதற்காக அவர்கள் களம் இறங்கும் நாளே ஜனவரி 8.

;