tamilnadu

img

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஜனாதிபதி உரையில் பாராட்டு

புதுதில்லி,ஜன.31- மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாராட்டி நாடாளுமன்ற பட்ஜெட் தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 வெள்ளியன்று  காலை 11 மணிக்குத் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடை பெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இக்கூட்டத்தில்  கையில் கறுப்பு பட்டை அணிந்தபடி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறியும் திருத்தங் களை ஏற்றுக்கொள்ளாமலும் மத்திய பாஜக அரசு அராஜகமான முறையில் நிறைவேற்றியது. இந்த சட்டம் குடி மக்களை பிளவுபடுத்தும் வகையில் உள்ளதாக குற்றம்சாட்டியும் அதனை  திரும்பப்பெறக்கோரியும் நாடு முழு வதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடியரசுத்தலைவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாராட்டி பேசினார். கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சியில் இந்த  பத்தாண்டுகள் மிகவும் முக்கிய மானது.

காந்தி மற்றும் நேரு ஆகியோ ரின் கனவுகளை இந்த தசாப்தம் நனவாக்கும். கடந்த 7 மாதங்களில் நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. முஸ்லிம் பெண்களுக்கு சம அதிகாரம் வழங்கும் முத்தலாக் சட்டத்திற்கு ஒப்பு தல் வழங்கப்பட்டுள்ளது. அரசிய லமைப்பின் 370, 35 ஏ ஆகிய பிரிவுகள் ரத்துசெய்யப்பட்டது வரலாற்று ரீதி யானது மட்டுமல்லாமல், அது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் சம  வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அயோத்தி வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு நாட்டு மக்கள் நடந்துகொண்ட விதம், அவர் களின் முதிர்ச்சி பாராட்டத்தக்கது. நாடா ளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், அவர்களின் கோரிக்கை களை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். 

போராட்டம் வன்முறையாம்!

தேசிய நலன்களை முன்வைத்து மக்களுக்குத் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். பரஸ்பர கலந் துரையாடல்கள் மற்றும் விவாதங் கள்தான் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்தும் என்பது அரசாங்கத் தின் கருத்து. அதே நேரத்தில் போராட்டம் என்கிற பெயரில் நடை பெறும் எந்தவொரு வன்முறையும் சமூகத்தையும் நாட்டையும் பலவீனப் படுத்தும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சட்டம். இவ்வாறு குடியரசுத் தலைவர் கூறினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். 

கருப்புப் பட்டைகளை கையில் அணிந்திருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, மதச்சார்பற்ற ஜனதா தளம், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, கேரள காங்கிரஸ்(எம்), இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்திலேயே எழுந்து நின்று ஆவேசமாக முழக்கமிட்டனர். காங் கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தலை வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ற முறையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் தங்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த முதல்வரிசை இருக்கை களை புறக்கணித்து, அடுத்தவரிசையில் அமர்ந்து கொண்டனர். 

சீத்தாராம் யெச்சூரி, குலாம்நபி ஆசாத் கூட்டாக பேட்டி

குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகு, நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியில் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரியும் பேட்டி அளித்தனர். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம்,  தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய வற்றிற்கு எதிராக 14 அரசியல் கட்சி கள் ஒன்றுசேர்ந்து நாடாளுமன்றத் திற்கு உள்ளும் வெளியிலும் மாபெரும் போராட்டத்தைத் துவக்கியுள்ளோம் என்று குலாம்நபி ஆசாத் குறிப்பிட்டார். குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய அவமான கரமான செயல்; ஆனால் அதை ஒரு சாதனையாக குடியரசுத் தலைவர் உரை யில் சேர்த்திருப்பது துரதிருஷ்டவச மானது என்றும் அவர் கூறினார்.

சீத்தாராம் யெச்சூரி கூறுகையில்,  “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அரசு நடத்தும் வன்முறையே தவிர வேறல்ல; அதைத் தடுத்து நிறுத்து வதைத் தவிர வேறு வழியில்லை; சமூ கத்தை ஒரு போர்க்களத்தைப் போன்ற  நிலைமையை சந்திக்கும் ஒரு பயங்கர மான சூழலுக்குள் அரசு தள்ளுகிறது; இதற்கு மோடி அரசாங்கமே முழு பொறுப்பு; தனது இந்துத்துவா ராஷ்ட்டிரம் என்ற பாசிசத் திட்டத்தை அரங்கேற்றுவதற்காக இத்தகைய பிரிவினை நிகழ்ச்சிநிரலை - மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை அரங்கேற்று கிறது” என சாடினார். அனைத்து எதிர்க்கட்சிகளும் நாட்டின் தற்போதைய நிகழ்ச்சிப்போக்கு குறித்து தெளிவாக உணர்ந்துள்ளன; அதற்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளன எனக் குறிப்பிட்ட சீத்தாராம் யெச்சூரி, இந்தப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு அறிகுறி யும் அரசுத் தரப்பில் இல்லை; மாறாக போராடும் மக்கள் மீது அடக்கு முறையை ஏவுகிறது என்றும் சீத்தாராம்  யெச்சூரி குற்றம்சாட்டினார். செய்தியாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் டி.கே.ரங்கராஜன், மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

கூட்டம் துவங்குவதற்கு முன்ன தாக சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 14 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

;