மார்க்சிய ஆய்வாளர் பேரா.விஜய் பிரசாத் நேர்காணல்
உலகின் தலைசிறந்த மார்க்சிய ஆய்வாளர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘லெப்ட் வேர்டு’ புத்தக நிறுவனத்தின் முதன்மை ஆசிரியரும், சர்வதேச சமூகவியல் ஆராய்ச்சி மையமான ‘டிரைகாண்ட்டினண்டல்’ அமைப்பின் இயக்குநருமான பேராசிரியர் விஜய் பிரசாத், சர்வதேச நிகழ்வுகளையும் பிரச்சனைகளையும் மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து தொடர்ந்து எழுதி வருகிறார். அவரது தொடர் கட்டுரைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், போர்ச்சுகீஸ், ரஷ்யன், ஸ்பானிஷ், கிரீக் ஆகிய மொழிகளில் இணைய ஏடுகளிலும் அச்சு ஏடுகளிலும் வெளியாகி வருகின்றன. தமிழிலும் தீக்கதிர் வெளியிடுகிறது. பேரா.விஜய் பிரசாத் சமீபத்தில் பிரேசில் சென்றிருந்தார். பிரேசிலில் தொழிலாளி வர்க்கத்தின் தலைவர்களாக இருந்த லூலா, அவரைத் தொடர்ந்து டில்மா ரூசெப் ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்தனர். இவர்களது ஆட்சியை கவிழ்ப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளான வலதுசாரி சக்திகள் அராஜகமான முறையில் ஜனநாயக சீர்குலைவில் ஈடுபட்டு, லூலா மீதும் டில்மா மீதும் பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகளை புனைந்து அவர்களது ஆட்சியை கவிழ்த்தனர். தற்போது பிரேசிலில் அதிதீவிர வலதுசாரி அராஜகவாதியான ஜெயிர் பொல்சானரோ ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கிறார். பிரேசிலை தீவிர வலதுசாரிப் பாதையில் கொண்டு செல்லும் அவர், இதுவரையிலும் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை ஈவிரக்கமின்றி பறிக்கவும், அடக்குமுறைகளை ஏவவும் தயங்காதவராக இருக்கிறார். உலகின் மாபெரும் காலநிலை பாதுகாப்பு மண்டலமான அமேசான் காடுகளை பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாப வேட்டைக்கு திறந்து விட்டிருக்கிறார். பிரேசிலில் ஒரு சர்வாதிகார ஆட்சியை அவர் நிறுவ முயல்கிறார். இதை எதிர்த்து பிரேசில் தொழிலாளி வர்க்கம் உறுதியோடு போராடுகிறது. பிரேசில் உழைக்கும் வர்க்கத்தின் ஜன்னலாக திகழ்கிறது. அவர்கள் 2003ஆம் ஆண்டு உலக சமூக மாமன்றம் எனும் மாபெரும் மாநாட்டை நடத்திய போது துவக்கிய “பிரேசில் டி பேட்டோ” எனும் பத்திரிகை. ‘பிரேசில் டி பேட்டோவுக்கு’ பேரா.விஜய் பிரசாத் அளித்த விரிவான நேர்காணலின் முக்கிய அம்சங்கள் இங்கு தரப்படுகின்றன: (தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்)
- கேள்வி: பிரேசிலின் புதிய ஜனாதிபதி ஜெய்ர் பொல்சானரோவின் அரசாங்கத் தைப் பற்றி உலக மக்கள் என்ன கருது கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
பதில் : பொல்சானரோ போன்ற நபர்கள் சற்று ஏளனப் புன்னகையுடனே மக்களால் பார்க்கப்படுபவர்கள். இவர்களது செயல்பாடு கள் நையாண்டி செய்யத்தக்க தன்மையுடை யவை போல தோன்றும். டொனால்டு டிரம்ப், பொல்சானரோ, தற்போதைய பிரிட்டிஷ் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் போன்றவர்களை சொல்லலாம். ஆனால் இவர்கள் கொடூரமான ரவுடித்தனம் நிறைந்த கோமாளிக் குணம் படைத்தவர்கள். இவர்களது செயல்பாடு களைப் பற்றி ஜனநாயகம் பேசுபவர்கள் மட்டுமல்ல, தாராளவாதிகள் மட்டுமல்ல, எல்லோருமே எரிச்சலுடனும் எச்சரிக்கை யுடனும் விமர்சிக்கிறார்கள். உலகில் இரண்டு இடங்கள் கரியமில வாயுவின் தாக்கம் மிகுந்து புவி வெப்பமடைந்து மூழ்கிப் போகும் நிலையில் இருக்கின்றன. ஒன்று, பாப்புவா தீவுகள். இதில் மேற்கு பாப்புவா மற்றும் பாப்புவா நியூ கினியா ஆகிய இரண்டுமே அடங்கும். மற்றொன்று, அமேசான். அமேசான் காடுகளை கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு திறந்து விட பொல்சானரோ தீர்மானித்தபோது, இந்த உலகம் உண்மையில் அதிர்ச்சியில் உறைந்துதான் போனது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூட பொல்சானரோவின் அமேசான் கொள்கையை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியிருக்கிறது.
பொல்சானரோவின் செயல்கள் கோமா ளித்தனமாக இருக்கலாம். ஆனால் பயங்கர மானவை. அமேசானை அழித்துவிட்டால் உலகமே அழிவின் பிடியில் சிக்கும். இதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் கவலையோடும் நாம் குரல் எழுப்புகிறோம்.
- கேள்வி: கடந்த பத்தாண்டுகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் (BRICS) பிரபலமாக பெயர் பெற்று வந்தது. அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விடுக்கும் அளவிற்குக்கூட பிரிக்ஸ் அமைப்பு முன்னேறி வந்தது. இப்போது டிரம்ப்புக்கு மிக நெருக்கமான நபராம் பொல்சானரோ பிரேசில் ஜனாதிபதியாகியிருக்கும் சூழலில் பிரிக்ஸ் கதி என்னவாகும்?
பதில் : நாடுகளின் கூட்டமைப்புகளை நாம் ஒருபோதும் மிகைப்படுத்திப் பார்க்க வேண்டியதில்லை. பிரிக்ஸ் அமைப்பும், அதில் இடம் பெற்றுள்ள வேறுபட்ட நாடுகளின் அரசாங்கங்களது வர்க்க குணாம்சத்தின் அடிப்படையிலே செயல்பட்டது. பிரிக்ஸ் அமைப்புக்கு முன்பு இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் மட்டும் இணைந்த ‘இப்சா’ (IBSA) எனும் அமைப்பு இருந்தது. இப்போதும் அது இருக்கிறது. இந்த மூன்று நாடுகளில் சமூக ஜனநாயக கட்சிகள் ஆட்சியிலிருந்தன. மூன்றும் ஒரே குரலில் மருந்துப் பொருட்கள் பரிவர்த்தனை முதல் விவசாய மானியம் வரை சர்வதேச அரங்கில் எழுப்பின. இந்த நாடுகளின் மக்க ளுக்கு போதுமான மருந்துகளும் சுகாதார வசதிகளும் கிடைக்க வேண்டும் என்றும், பல்வேறு உலக நாடுகளின் வர்த்தகக் கொள்கைகளால் தங்களது நாடுகளின் விவசாயிகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் பேசி வந்தன. அது 2003ஆம் ஆண்டு.
பின்னர் 2009ல் பிரிக்ஸ் உதயமானது. இந்த அமைப்பும் விவசாயிகளின் மானிய வாய்ப்புகளை பாதுகாப்பது, பரஸ்பரம் வர்த்தக உடன்பாடுகளை மேற்கொள்வது என்ற அடிப்படை நிகழ்ச்சி நிரலுடன் இயங்கியது. ஆனால் இப்சாவைப் போல் அல்லாமல் பிரிக்ஸ் அமைப்பு அந்தந்த நாடுகளின் ஆளும் வர்க்க - செல்வந்த கார்ப்பரேட்டுகளின் குரலை யும் எதிரொலித்தன. அதே வேளையில் உலக ளாவிய முறையில் தெற்கு நாடுகளின் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக இருந்தன. பிரிக்ஸ் அமைப்பில் சோசலிச சீனா உறுப்பு நாடாக இருந்தாலும், ஒவ்வொரு நாடும் அதனதன் வர்க்க குணாம்சத்திற்கேற்பவே பிரிக்ஸ் அமைப்புக்குள் செயல்பட்டன. பிரேசில் பெரும் கார்ப்பரேட் வர்த்தகர்கள் இந்திய சந்தைகளுக்குள் நுழைய விரும்பு கிறார்கள். எனவே இதற்குள் அவரவர் நலன்கள் அடங்கியிருக்கிறது. இது வெறுமனே ஒரு அரசியல் கருவியாக மட்டும் செயல்பட வில்லை. சர்வதேச அரங்கில் பன்முகத்தன்மை என்ற அரசியலை முன்வைக்க மட்டும் பிரிக்ஸ் செயல்படவில்லை. வர்த்தகத்திற்காகவும் செயல்படுகிறது. அதற்குள் ராணுவ நலன்கள், ஆயுத பேரங்கள் எல்லாம் இருக்கின்றன. எனவே பிரிக்ஸ் அமைப்பு கலைந்து விடாது.
- கேள்வி : உலகின் வெவ்வேறு பிராந்தியங்களில் தீவிர வலதுசாரிகள் முன்னேறியிருக்கிறார்கள். இதன் விளைவாக தற்போது “பாசிசம்” என்ற பதத்தைப் பற்றி விவாதம் தீவிர மடைந்திருக்கிறது. 20ஆம் நூற்றாண் டின் துவக்கத்தில் இத்தாலியில் உரு வான பாசிசம் என்பதையும் தற்போது உருவாகியிருக்கக்கூடிய தீவிர வலதுசாரி அரசாங்கங்களையும் ஒப்பிட முடியாது என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். வேறு சில ஆய்வாளர்கள், அன்றைக்குத் தோன்றிய பாசிசத்திற்கும் தற்போதைய தீவிர வலதுசாரி ஆட்சியாளர்களின் செயல்பாடு களுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன என்றும், எனவே பாசிசம் என்று பெயரிட்டு அழைப் பதை விட வேறு பொருத்தமான சொல் இல்லை என்றும் கூறுகிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பதில் : இந்த விவாதங்கள் மிக முக்கியமான வை. நீங்கள் சரியாக ஆய்வு செய்திருக்கிறீர்க ளா என்பது இதில் முக்கியமில்லை. தற்போ தைய சூழ்நிலைமையை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதை இந்த விவாதங்கள் தெளிவுப்படுத்துகிறதா என்பதுதான் முக்கியம். நாம் ஏன் 1920 களுக்கும் 1930களுக்கும் பயணிக்கிறோம்; அன்றைக்கு என்ன நடந்தது என்பதைப் பேசுகிறோம் என்றால், ஒரு ஜன நாயகக் கட்டமைப்பிற்குள் சர்வாதிகாரம் அல்லது எதேச்சதிகாரம் எப்படி செயல்படும் என நாம் புரிந்து கொள்ள விரும்புகிறோம் என்பதால்தான். பெனிட்டோ முசோலினியும், அடால்ப் ஹிட்லரும், ஜனநாயகத்தின் மூலம்தான் அதிகாரத்திற்கு வந்தார்கள். வாக்குப்பெட்டி மூலம்தான் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். பிறகு அவர்கள் சமூகத்தில் எதேச்சதிகார அரசியலை மிகத் தீவிரமாகவும், ஆழமாகவும் திணித்தார்கள். ஆனால் ஹிட்லரும் முசோலினியும் உரு வாக்கிய பாசிசமும் நாஜிசமும் இன்றைய நிலைமையோடு ஒப்பிடும்போது முற்றிலும் வேறானவை. அன்றைக்கு அவர்களது பிர தான பணி என்னவாக இருந்தது என்றால், முதலாளிகளிடமிருந்தும் நிலப்பிரபுக்களிடமி ருந்தும் அவர்களுக்கு தரப்பட்ட பணி என்ன வாக இருந்தது என்றால், அன்றைக்கு மிகப் பிரம்மாண்டமாக எழுந்துவந்த தொழிலாளர் வர்க்க இயக்கத்தை அடித்து நொறுக்கி முற்றாக அழிப்பதுதான். 20ஆம் நூற்றாண்டின் துவக் கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றிய நாஜிக ளுக்கும், பாசிச சக்திகளுக்கும் கொடுக்கப்பட்ட முதன்மையான பணி அதுதான். ஆனால் இன்றைக்கு தொழிலாளர் வர்க்க இயக்கங்கள் பலவீனமாக இருக்கின்றன. எனவே முதலாளித் துவ, நிலப்பிரபுத்துவ சக்திகள், “ஏ பாசிஸ்ட்டு களே, மீண்டும் அதிகாரத்திற்கு வாருங்கள், தொழிலாளர் இயக்கத்தை அழித்து விடுங்கள்” என்று உத்தரவு போட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஒரு சூழல் இன்று இல்லை. இன்றைய தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி எதன் அடிப்படையிலானது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
நவீன தாராளமய காலம் இது. இந்த காலகட்டத்தில் நவீன தாராளமயக் கொள்கை யானது இரண்டு பெரும் தாக்கங்களை ஏற் படுத்தியிருக்கிறது. ஒன்று, உண்மையிலேயே தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சமூ கத்தின் அனைத்துத் தரப்பு தொழிலாளர்கள் தங்களை அணிதிரட்டிக் கொள்ளும் சக்தியை பலவீனப்படுத்தியிருக்கிறது. அதாவது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பேரம் பேசும் சக்தி குறைந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, அவர்கள் தங்களைத்தாங்களே அணி சேர்த்துக் கொள்கிற, ஒன்று திரட்டிக் கொள்கிற சக்தியையே நவீன தாராளமயக் கொள்கை பலவீனப்படுத்தியிருக்கிறது. இது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எனவே இப்போது நாம் வலு குறைந்த விவசாய மற்றும் தொழிலாளர் சங்கங்களையே பெற்றிருக்கிறோம். இது, முதலாளித்துவ சக்திகளுக்கு மிக மிக சாதகமான - தொழிலாளி யையும் விவசாயியையும் அட்டையாய் உறிஞ்சு கிற - வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்திருக்கி றது. இப்படித்தான் இந்த காலகட்டத்தில் முதலாளி வர்க்கம் மேலும் மேலும் செல்வ வளங்களைக் குவித்திருக்கிறது.
இதுபற்றி பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி விரிவான விபரங்களை அளித்திருக்கி றார். வருமான ஏற்றத்தாழ்வு, சமூக ஏற்றத் தாழ்வு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. ஆனால் இந்த ஏற்றத் தாழ்வு மேலும் மேலும் ஆழமாவதைப் பார்த்து முதலாளி வர்க்கம் உண்மையில் கவலைப்படு கிறது. ஏற்றத்தாழ்வு தீவிரமடைந்தால், சமூ கத்தில் அமைதியின்மையும் கிளர்ச்சிகளும் அடுத்தடுத்த விளைவுகளும் வெடித்தெழும் என்று முதலாளித்துவம் அஞ்சுகிறது. பல நாடுகளில் அதைப் பார்க்கிறோம். மக்கள் சமூகங்கள் கொதித்து எழுகின்றன. உணவுக் கலவரங்கள் நடக்கின்றன. சமூகத்தில் செல்வ வளங்களை குவித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக கிளர்ச்சி வெடிக்கிறது. இந்தக் கட்டத்தில்தான் வலதுசாரி சித்தாந்தம் தனது தலையீட்டை கூர்மைப் படுத்துகிறது. சமூகத்தில் செல்வ வளங்களை குவித்து வைத்திருக்கக்கூடிய நபர்கள் - அதாவது முதலாளித்துவ அதிகார வர்க்கங்கள், தங்களுக்கு எதிரான மக்கள் சமூகங்களின் எழுச்சி, கிளர்ச்சி போன்றவற்றுக்குக் காரணம் அந்த மக்கள் சமூகங்களுக்குள் இயங்குகிற முற்போக்கு சக்திகள், பெண்ணியவாதிகள், சிறுபான்மை மக்கள்- இவர்கள் தான் என்று கருதுகின்றன. அவர்களுக்கெதிராக குறி வைக்கின்றன. அவர்களுக்கெதிராக மக்கள் சமூகங்களுக்குள்ளேயே சித்தாந்த ரீதியாக தாக்குதல்களை திருப்பி விடுகின்றன. அகதிக ளாக வந்தவர்கள், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பிழைக்க வந்தவர்கள் இவர்களை யெல்லாம் அந்தந்த பகுதிகளின் மக்கள் சமூ கத்திற்கு எதிரிகள் என்று அடையாளப்படுத்து கின்றன. பிழைக்க வந்தவர்களால்தான் உள்ளூரில் உனது வேலை பறிபோய்விட்டது என்று தூண்டி விடுகின்றன. ஒட்டுமொத்த சமூகத்தின் மீது தங்களது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பேணுவதற்காக இத்தகைய வலதுசாரி சித்தாந்த கருத்துக்களை நவீன தாராளவாத முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் செல்வந்தர்கள் அன்றாட அரசியல் நடவடிக்கை களுக்குள் புகுத்துகிறார்கள்.
ஆனால் ஏற்றத்தாழ்வுக்கும் வாழ்வாதா ரங்கள் சீர்குலைந்ததற்கும் மேற்கண்ட நவீன தாராளவாத சக்திகள்தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே மக்கள் அவர்களை நம்பத் தயாராக இல்லை. இந்த நிலையில், ஏற்கெனவே இடதுசாரிகளும் பலவீனமான உள்ள சூழலில், வலதுசாரி சக்திகள் தீவிர வலதுசாரிகளாக உரு வெடுக்கிறார்கள். அவர்கள் எதேச்சதிகார வலது சாரிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொள்கி றார்கள். நவீனதாராளவாதிகள் ஏற்னெவே நடைமுறைப்படுத்திய அனைத்தையும் தங்கள் வசப்படுத்திக் கொள்கிறார்கள். நவீன தாராள வாதிகளின் பிரச்சார உத்தியையும் தங்கள் வசப்படுத்திக் கொள்கிறார்கள். அனைத்து சக்தி களையும் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள்.
எனவே இப்படித்தான் நவீன எதேச்சதிகாரி கள் - அதாவது நவீன பாசிஸ்ட்டுகள் அதிகா ரத்திற்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பாசிஸ்ட்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றியது போல அதே வழியில் வரவில்லை. வேறுபாடு இருக்கிறது. இவர்கள், 20ஆம் நூற்றாண்டில் பாசிஸ்ட்டுகள் செய்ததுபோல ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைக்க வேண்டிய தேவையில்லை. மாறாக ஜனநாயக நிறுவனங்களை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். ஜனநாயக நிறுவனங்க ளை அவர்கள் ஒன்றுமில்லாத இடமாக, வெற்றுப்பாத்திரமாக வைத்துக் கொள்கிறார் கள். தேர்தல் நடத்தப்படும். நாடாளுமன்றம் இருக்கும். எல்லாமே இருக்கும். சர்வாதிகாரம் என்று செல்லவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. ஏனென்றால் ஜனநாயகம் என்ற கோட்பாட்டையே அவர்கள் வெறுமையானதாக மாற்றி, உயிரற்றதாக மாற்றி விடுவார்கள். எதேச்சதிகாரத்தையும் தங்களது வலதுசாரி சித்தாந்த நிலைபாட்டையும் ஒன்றிணைத்து அதன் மூலம் வெற்று ஜனநாயகம், வெற்று ஊடகம், வெற்று விவாதம் என அனைத்தை யும் ஒன்றுமில்லாததாக மாற்றுவார்கள். இப்படித் தான் இன்றைய தீவிர வலதுசாரி சக்திகள் அரசி யலை முழுமையான வலதுசாரி சுழலுக்குள் கொண்டு வருவார்கள். எனவே இது, 20ஆம் நூற்றாண்டின் துவக்கத் தில் இந்த உலகம் பார்த்ததை விட வேறு வடிவத்திலான பாசிசம். எனவே இதைப்பற்றி இன்னும் கூர்மையான முறையில் நாம் ஆய்வு செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் திட்டவட்டமாக நிலவுகிற சூழ்நிலைமைகள் குறித்து திட்டவட்டமாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
- கேள்வி : பிரேசிலில் புதிய ஆட்சியாளர்களால் மிகக் கடுமை யாக குறிவைக்கப்பட்டு தாக்குத லுக்குள்ளாகியிருப்பது தொழிற் சங்கங்கள்தான். இந்தியாவிலும் 90 சதவீதம் தொழிலாளர்கள் முறைசாரா தொழிலாளர்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள். சங்கமாக மாற்றப்பட்ட தொழிலாளர்களின் விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது. அப்படியானால், தொழிற்சங்கம் என்ற கட்டமைப்பிற்கு வெளியே தொழிலாளர்களை அணிதிரட்டுவது பற்றி யோசிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளதா? வழக்கமான சங்க அமைப்பு அல்லது தொழிற்சாலை அளவிலான சங்க அமைப்பு என்பதற்கு வெளியே தொழிலாளர் களை அணிதிரட்ட மாற்று வழி உள்ளதா?
பதில்: சங்கமாக மாற்றுவது அல்லது தொழிற்சங்கங்களை உருவாக்குவது என்பதே தொழிலாளர்களை ஒன்று திரட்டுவது என்று அர்த்தமல்ல. தொழிலாளர்களை ஒன்று திரட்டுவது என்பது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டுவது, அதன்மூலம் அவர்களது பேர சக்தியை வலுப்படுத்துவது என்பதுதான். நமது இலக்கு ஒரு தொழிற்சங்கத்தை அமைப்பது அல்ல. மாறாக, சங்கம் மூலமாக அணி திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கமும், விவசாய வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தை அரசியல்ரீதியாக சவால் விடுவதற்கும் அதை முறியடிப்பதற்கும் பலம் பொருந்தியதாக மாறுகிறதா என்பதுதான். எனவே ஒரு சங்கத்தை உருவாக்குவது மட்டுமே போது மானது அல்ல.
சங்கம் அமைப்பது மிகவும் முக்கியமானது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால் அதுமட்டுமே இலக்கு அல்ல. சங்கங்கள் என்பவை, தொழிலாளி வர்க்கத்தின் சக்தியை வலுப்படுத்துவதற்கான ஒரு வடிவம் மட்டுமே. இன்றைய நிலைமையில் உற்பத்தி மையங்க ளில் தொழிலாளர்களை அணிதிரட்டுவது என்பது நாளுக்குநாள் கடினமானதாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை சங்கங்கள் உணர்கின்றன. தொழிற்சாலை கள் சிறைச்சாலைகளைப் போல செயல்படு கின்றன. வேலை நாள் என்பது கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. தடுப்பு அரண்களுக்குள் ளே இருப்பதுபோல தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். நீங்கள் கழிவறைக்குச் செல்ல முடியாது; உங்கள் இருக்கையிலிருந்து வேறெங்கும் திரும்ப முடியாது; ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளியோடு பேச முடியாது. எல்லோரும் கண்காணிப்பின் கீழே வைக் கப்பட்டிருக்கிறார்கள். தொழிற்சாலைகள் அதி வேக உற்பத்தியை ஈட்டுவதற்காக ஈவிரக்க மற்ற முறைகளைக் கொண்டதாக மாற்றப் பட்டுள்ளன. எனவே தொழிற்சங்கங்கள் தொழிலாளியோடு தொழிற்சாலையில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே தொழிலாளியை எங்கு சந்திப்பது, எப்படி அணி திரட்டுவது என்று சிந்திக்கத் துவங்கியுள்ளன. தொழிலாளி வாழும் இடத்தில் சந்தித்து அணி திரட்டலாம் என்ற யோசனைக்கு வரு கின்றன. ஏனென்றால் நமது நோக்கம் தொழி லாளர்களை அணி திரட்டுவது என்பதுதான். இப்போது நீங்கள் தொழிலாளர்கள் வாழும் இடத்தில் அவர்களை அணி திரட்டினால், அவர்கள் அந்தப் போராட்டத்தை தொழிற்சா லைக்கு எடுத்துச் செல்வார்கள். தொழிற்சாலை வாயிலில் தொழிலாளர்களை சங்கம் சேர்க்க முடியவில்லை என்றால், தொழிற்சங்கங்கள் இன்னும் ஆக்கப்பூர்வமாக யோசிக்க வேண்டும். எப்படி தொழிலாளர் சக்தியை கட்டி அமைப்பது என்பதில் புதிய புதிய வடிவங்களை ஆலோசிக்க வேண்டும்.
தொழிற்சாலையிலேயே அல்லது பொருள் உற்பத்தி செய்யும் இடத்திலேயே தொழிலா ளர்களை அணி திரட்டுவது முக்கியம்தான். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அவர்களை சங்கத்திற்குள் அணி திரட்ட முடியும்; எங்கு வேண்டுமானாலும் அவர்கள் மத்தியில் ஒற்றுமையையும், நம்பிக்கையையும் உருவாக்க முடியும்; எல்லா இடங்களிலும் அவர்கள் தங்களது பலத்தை உணர்ந்து விட்டால் அந்த அனுபவத்தை அவர்கள் நேரடியாக தொழிற்சாலைக்குள் எடுத்துச் செல்வார்கள். எனவே தொழிற்சங்கங்கள் புதிய புதிய வடிவங்களை, நடைமுறைகளை பரீட்சித்துப் பார்த்து வருகின்றன.
எனவே உலகளாவிய முறையில் தற்போது தெளிவாக, மிகத் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், நவீன தாராளவாதமும் எதேச்சதிகாரமும் ஒன்றிணைந்த ஒரு ஒட்டுரக நவீன பாசிசம் தலைதூக்கி இருக்கிறது. இந்த ஒட்டுரக நவீன பாசிசம் தொடுத்திருக்கிற போர், ஜனநாயகத்தின் உயிரைப் பறித்து விடும். ஒட்டுமொத்த பூவுலகிற்கும் இது எதிரானது. இந்த போரின் அடிப்படைநோக்கம் பெரும் செல் வந்தர்களின் அரசாங்கத்திற்கு, ஆதிக்கத்திற்கு சேவகம் செய்யும் விதத்தில் ஒட்டுமொத்த ஜனநாயக நடைமுறைகளையும் அதன் அடிப்ப டைகளையும் முற்றாக நிர்மூலமாக்குவது என்பதுதான். அதை எதிர்த்து தொழிலாளர் வர்க்கத்தையும், விவசாய வர்க்கத்தையும் அணி திரட்ட பழைய வடிவங்கள் மட்டுமே போதாது. புதிய புதிய வடிவங்களில் புதிய புதிய முனைப்புகளுடன் முன் செல்ல வேண்டும். நமது நோக்கம் இந்தப் போரில் வெல்வதற்கான சக்தியைப் பெறுவதுதான்.