tamilnadu

img

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உருவான வரலாறு - என்.ராமகிருஷ்ணன்

தத்துவ அறிஞர்களான காரல் மார்க்சும், பிரெடரிக் ஏங்கெல்சும் 1844ஆம் ஆண்டில் முதன் முறையாக பாரீஸ் நகரில் சந்தித்தனர், இருவரும் ஜெர்மனி நாட்டின் பிரஷ்ய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் மன்னராட்சி ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ ஒழிப்பு மற்றும் முதலாளித்துவ ஒழிப்பு என்பதில் தீவிரம் கொண்டவர்கள். தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைப்பாளி மக்களிடம் பரிவு கொண்டவர்கள்.  இப்பொழுது இவ்விருவரும் பாரீஸ் நகரில் ஒன்றாகத் தங்கியிருந்து 10 நாட்கள் ஐரோப்பிய தத்துவம், அரசியல் பொருளாதாரம் மற்றும் அச்சமயத்தில் பிரான்ஸ் நாட்டில் ஆர்வத்துடன் பேசப்பட்ட கற்பனா சோசலிசக் கருத்துக்கள் குறித்து விவாதித்தனர். தங்கள் இருவர் கண்ணோட்டமும் ஒரே மாதிரியாக இருந்ததை உணர்ந்து கூட்டாகச் செயல்படுவதென்றும், தொழிலாளி வர்க்கத்திற்காக ஒரு புரட்சிகர தத்துவத்தை உருவாக்கி ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்குவதென்றும் முடிவு செய்தனர்.

அதன்படி ஓராண்டு காலத்திற்குள் தங்கள் கருத்தை விளக்கி ஜெர்மன் தத்துவம் என்ற நூலை எழுதினர். ஆனால் அந்நூலை ஐரோப்பாவில் யாரும் வெளியிட முன்வரவில்லை. ஆனால் மார்க்சும், ஏங்கெல்சும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ‘எங்களுக்குத் தேவையான சுய தெளிவு கிடைத்துவிட்டது. அது போதும்’ என்று கூறிவிட்டனர்.  இதையடுத்து, இந்தத் தத்துவத்தை எந்த மக்கள் பகுதியினரைக் கொண்டு அமலாக்குவது என்று அவர்களிருவரும் விவாதித்தனர். முதலாளித்துவ சமுதாயத்தை மாற்றி சோசலிச சமுதாயத்திற்கான போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்த தகுதி வாய்ந்தது. நவீன ஆலைத் தொழிலாளி வர்க்கமே என்ற முடிவுக்கு மார்க்சும், ஏங்கெல்சும் வந்தனர்.

இச்சமயத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. மார்க்ஸ் ஆபத்தான புரட்சிக்காரர் என்று கருதி பிரெஞ்சு அரசாங்கம் அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. எனவே மார்க்ஸ் தன் மனைவி ஜென்னியையும், கைக்குழந்தையான மகளையும் அழைத்துக் கொண்டு அண்டை நாடான பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்குச் சென்றார். மார்க்ஸைக் குறித்து அறிந்திருந்த பெல்ஜியம் அரசாங்கம் ‘அவர் எந்த அரசியல் வேலையிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையை விதித்து அவர் குடும்பம் அங்கே தங்க அனுமதியளித்தது. ஏங்கெல்ஸ் பாரீசிலேயே தங்கி தொழிலாளிகளிடையே அவர்கள் உருவாக்கிய தத்துவத்தை பிரச்சாரம் செய்வதென்று முடிவு செய்யப்பட்டது. இப்பொழுது மார்க்ஸ் முன்பு ஒரு பிரச்சனை எழுந்தது. தொழிலாளி வர்க்கத்திற்கான நல்லதொரு தத்துவம் உருவாக்கப்பட்டு, அதற்கு தலைமை தாங்கி நிறைவேற்றும் சக்தியையும் கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால் அதைச் செய்ய ஒரு தொழிலாளி வர்க்க அமைப்பு வேண்டுமே, அதற்கென்ன செய்வது என்ற சிந்தனையில் அவர் இருந்த பொழுது ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

லண்டனிலிருந்து செயல்பட்டு வந்த ‘நீதியாளர் கழகம்’ (League of Justice) என்ற அமைப்பைச் சேர்ந்த ஜோசப் மோல் என்பவர் மார்க்ஸ் இல்லத்திற்கு வந்து அவரைச் சந்தித்தார். அந்த அமைப்பில் 400 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஜெர்மானியர்கள். மார்க்ஸ், ஏங்கெல்சின் சொந்த மாநிலமான பிரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் கணிசமானோர் பிரஷ்ய மன்னனுக்கெதிராக பிரச்சாரம் செய்ததற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். மீதிப் பேர் அரசியல் காரணங்களுக்காக தாங்களாகவே வெளியேறியவர்கள். கற்பனாவாத சோசலிசம் என்பதுதான் அந்த அமைப்பின் கருத்து. அத்துடன் சதிச் செயலில் ஈடுபடுவது என்ற போக்கும் இருந்தது. இவர்கள் அனைவரும் கைவினைஞர்கள் ஆவர். இவர்களில் முக்கியமானவர்கள் செருப்பு தயாரிப்பாளர் ஹீன்ரிச் பாயர், கடிகாரம் தயாரிப்பாளர் ஜோசப் மோல் மற்றும் காரல் ஷாப்பர் போன்றவர்கள்.

மார்க்ஸ், ஏங்கெல்சைப் பற்றி கேள்விப்பட்ட இந்தத் தலைவர்கள் அவர்கள் இருவரையும் சந்தித்து தங்கள் அமைப்புக்கு வழிகாட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்ள முடிவு செய்தனர். அதன் பொருட்டு ஜோசப் மோலை தங்கள் சங்கப் பிரதிநிதியாக மார்க்சை சந்திக்க அனுப்பினார். மார்க்ஸ் ஏற்கெனவேயே இந்த அமைப்பு குறித்து நன்கறிவார். இப்பொழுது ஜோசப் மோலைச் சந்தித்தார். மோல் பேசும் பொழுது தங்கள் அமைப்பில் மார்க்சும், ஏங்கெல்சும் சேர்ந்து தங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்றும், சதிச் செயல்புரிவது போன்றவற்றை தாங்கள் கைவிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த மார்க்ஸ், மோல் நேராக பாரீசுக்குப் போய் ஏங்கெல்சை சந்தித்துப் பேசும்படி கூறினார். மோலும் அவ்வாறே செய்தார். ஏங்கெல்சும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் மார்க்சும், ஏங்கெல்சும் உடனே அதில் சேரவில்லை.

சிறிது காலம் கழித்து நீதியாளர் கழகத் தலைவர்கள் பிரஸல்சுக்கு வந்து மார்க்ஸ்- ஏங்கெல்சைச் சந்தித்து மீண்டும் வலியுறுத்தினர். மார்க்ஸ் ஒன்றை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். ‘அனைத்து மனிதர்களும் சகோதரர்களே!’ என்ற நீதியாளர் கழக பிரகடனத்தைச் சுட்டிக்காட்டி இது தவறானது. முதலாளிகளும், தொழிலாளிகளும் எதிரெதிர் வர்க்கங்கள், வேறு வேறு நலன்கள் கொண்டவர்கள், முதலாளிக்கு தன் உழைப்புச் சக்தியை கூலிக்கு விற்கும் தொழிலாளி அந்த முதலாளிக்கு சகோதரன் ஆக முடியுமா என்ற கேள்வியை எழுப்பினார். அதைக் கேட்ட நீதியாளர் அமைப்புத் தலைவர்கள் மார்க்ஸ் கூறுவது சரியானதென்று ஏற்றுக்கொண்டு தங்களுக்கு ஒரு புதிய பிரகடனம் உருவாக்கித் தரும்படி அவரைக் கேட்டுக் கொண்டனர். அவர் எழுதிக் கொடுத்த புதிய பிரகடனம் “உலகத் தொழிலாளிகளே ஒன்று சேருங்கள்.” 

நீதியாளர் கழகத் தலைவர்கள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். மார்க்சும், ஏங்கெல்சும் நீதியாளர் கழகத்தின் உறுப்பினர் ஆனார்கள். அந்த தலைவர்கள் மீண்டும் ஒரு கோரிக்கை வைத்தனர். தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அரசியல் கல்வி புகட்டுவதற்காக தொழிலாளி வர்க்கம், வர்க்கப் போராட்டம் குறித்து சிறு சிறு குறிப்புகள் எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டனர். அந்தப் பணியை ஏங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார். முதலில் தனித்தனி குறிப்புகளாக எழுதினார். பின்னர் அவை அனைத்தையும் கொண்ட ஒரு சிறு நூலாக ‘கம்யூனிஸ்ட் நம்பிக்கை வாக்கு மூல நகல்’ என்ற பெயரில் நீதியாளர் கழக மாநாட்டில் வெளியிடப்பட்டது. பின்னர் இது நீதியாளர் கழகத்தாரால் விவாதிக்கப்பட்டு அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற மாநாட்டில் இறுதியாக்கப்பட்டு “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’’ என்ற பெயரில் வெளிவந்தது. இந்த மாநாட்டில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.  

அதில் ‘கம்யூனிஸ்ட் என்பதின் நோக்கம் என்ன?” ‘அந்த நோக்கத்தை எவ்வாறு அடைவது’, ‘பாட்டாளி என்றால் யார்?’, ‘பாட்டாளி எப்பொழுதும் இருந்ததில்லையா?’, ‘பாட்டாளிக்கும் அடிமைக்கும் என்ன வித்தியாசம்’, ‘பாட்டாளிக்கும் பண்ணை அடிமைக்கும் என்ன வித்தியாசம்?’, ‘பாட்டாளிக்கும் கைவினைஞருக்கும் என்ன வித்தியாசம்?’, ‘நாட்டிலுள்ள மதங்களை கம்யூனிஸ்ட்டுகள் நிராகரிக்கிறார்களா?’ போன்ற ஏராளமான கேள்விகளை ஏங்கெல்ஸ் எழுப்பி அவரே அதற்கும் பதிலளித்தார்.  மார்க்சும், ஏங்கெல்சும் மற்றொரு கருத்தைத் தெரிவித்தனர். அதாவது நீதியாளர் கழகம் என்ற பெயரை மாற்றி ‘கம்யூனிஸ்ட் கழகம்’ (Communist League) என்ற பெயரை வைக்கும்படி கூறினார். அதை அவர்கள் ஏற்று தங்கள் அமைப்பின் பெயரை ‘கம்யூனிஸ்ட் லீக்’ என்று மாற்றினர்.

இந்த மாநாடு மார்க்சும், ஏங்கெல்சும் ஒரு பிரகடன வடிவில் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு (கம்யூனிஸ்ட் லீக்) ஒரு திட்டத்தை எழுதித் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. அவர்களும் அதை ஏற்று ஒரு நீண்ட பிரகடனத்தை எழுதிக் கொடுத்தனர். அதுதான் உலகப் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இதன்பின் தங்கள் அமைப்பிற்கு ஒரு ‘அமைப்புச் சட்டம்’ உருவாக்கித் தர வேண்டுமென அதன் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்று மார்க்ஸ், அமைப்புச் சட்டத்தை எழுதிக் கொடுத்தார். ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்ட அந்த கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புச் சட்டம் இன்று உலகம் முழுவதுமுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழிகாட்டும் அமைப்புச் சட்டமாக உள்ளது.

400 உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கழகம்’என்ற கட்சிதான் உலகின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி. இது இன்று ஏழரை கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளாக உருவெடுத்துள்ளன. மற்றொரு பெருமைக்குரிய செய்தி என்னவென்றால் உலகின் அனைத்துப் பிரதான மொழிகளில் வந்துள்ள மூன்று நூல்களில் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. மற்ற இரண்டு நூல்கள் பைபிள் மற்றும் திருக்குரான் ஆகும்.

;