நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிர்வு தாங்கு மண்டலத்தை செயல்படுத்துவதில் இருந்து விலக்கு தரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும்காலநிலை மாற்றத்துறை அமைச்சர்பிரகாஷ் ஜவடேகருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வருவாய் கிராமங்கள் அடங்கிய பகுதிகளில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தை செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2019செப்டம்பர் 12 ஆம் தேதியன்று பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விரிவான ஆட்சேபனைகளையும் கருத்துகளையும் நாங்கள் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம். இது தொடர்பாக வேறு பலஅமைப்புகளின் சார்பிலும் ஆட்சேபணைகளும் அந்த கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எங்கள் கட்சியைத் தவிர மற்ற பங்கேற்பாளர்களும் அந்த அரசு அறிவிப்பின் தமிழ்பதிப்பை வெளியிடுமாறும், வருவாய்கிராம வாரியாக பொது விசாரணையை தனித்தனியாக நடத்துமாறும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இந்த அறிவிப்பின் தமிழ்மொழிபெயர்ப்பை மக்களுக்கு வழங்கிய பிறகே கிராம அளவில் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியரும் அந்தகூட்டத்தில் ஒப்புக்கொண்டார். மதுரை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாதாடிய வழக்கறிஞரும் பாதிக்கப்படும் கிராமங்களில் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
ஆனால் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தது போன்று தனித்தனியான கிராம அளவிலான பொது கருத்துக்கேட்பு கூட்டங்கள் இதுவரை நடத்தப்படவில்லை. கடந்த 2019 செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு பின்னர் அப்போதைய மாவட்ட வனஅலுவலர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் சரியான மறுசீரமைப்பு செய்யப்படும் என பத்திரிகைகள் மூலம்அறிக்கை வெளியிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சூழலியல் அதிர்வுதாங்கு மண்டல அமலாக்கத்தை இறுதி செய்வதற்கு முன்னர் இந்த திட்டத்திற்கு எதிரான அனைத்து கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம்உறுதியளித்தபடி எதுவும் நடக்கவில்லை, இதுவரை மத்திய மற்றும் மாநில அரசிடமிருந்து எந்தவொரு பதிலும் அல்லது விளக்கமும் எங்களால் பெற முடியவில்லை.
இந்த சூழ்நிலையில், 2020 ஜூன் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற்ற சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் குறித்த நிபுணர் குழு சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில், இந்திய சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இதுதொடர்பான முன் வரைவு அறிக்கையை இறுதி செய்ய முடிவு செய்துள்ளதுஎன அறிந்தோம். அது உண்மையாகஇருக்கும்பட்சத்தில் குமரி மாவட்டமக்கள் தங்கள் அன்றாடவாழ்க்கையில் மிகுந்த இன்னலுக்கு ஆளாக நேரிடும். இந்த பின்னணியில்2019 செப்டம்பர் 12 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எங்கள் எழுத்துப்பூர்வ ஆட்சேபனையில் குறிப்பிடப்பட்டுள்ள சில குறைகளை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம்ப வரைவு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் சிறு விவசாயிகள் மற்றும் குறு விவசாயிகள். மேலும் அவர்களின் வருமானத்திற்காக சிறுகடைகள் மற்றும் சிறு ஓட்டல்களையும் நடத்துகிறார்கள். மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கனரகதொழில்கள் இந்த மாவட்டத்தில் இல்லை. தனியார் வனச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் ஏழை விவசாயிகளுக்கு சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் விளைவாக ஏழை மக்கள் தங்கள் நிலத்தில் தங்கள் உரிமையை இழந்துள்ளனர். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், கொள்முதல் விற்பனை செயல்களுக்கும் கூட மக்கள் அனுமதிக்காக மாவட்ட கண்காணிப்புக் குழுவை அணுக வேண்டிய நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் மாவட்ட கண்காணிப்புக் குழுவின் ஒப்புதலுக்காக இன்னும் நிலுவையில் உள்ளன.
தனியார் வனச் சட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகள் மற்றும் குடியிருப்பாளர்கள், ஏற்கனவே தங்கள் நிலம் மற்றும் வீடு வைத்திருப்பது மீதானதங்கள் உரிமையை இழந்துவிட்டனர். இதற்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக மக்கள் தனியார் வனச் சட்டத்திலிருந்து விலக்கு பெற போராடி வருகின்றனர். வனவிலங்கு சரணாலயம் மற்றும்புலிகள் சரணாலயம் என்ற பெயரில்மேலும் மேலும் விவசாய மற்றும் குடியிருப்பு பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு மாநில மற்றும் மத்தியஅரசுகள் ஏழை நில உரிமையாளர்களின் உரிமை உரிமையை ஆக்கிரமித்து பறித்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள ஏழை மக்களின் துயரமானநிலைமை இதுதான். இந்த உண்மை நிலையை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் அதிர்வுதாங்கு மண்டலத்தை நாங்கள் எதிர்த்தோம். மத்திய அரசு இந்த சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தினால் மக்களின் அது மீதமுள்ள வாழ்வாதார வாய்ப்புகளை அழித்து விடும்.
சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து பகுதிகளும் தானாக வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ்வரும். அந்த பகுதிகளில் தனிநபர்கள்அல்லது உள்ளூர் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு பணிகளுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்புக் குழுவிலிருந்து அனுமதி பெறப்பட வேண்டிய நிலை ஏற்படும். அதன்படி இந்த மலைப்பாங்கான மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்கள் நிலம் மற்றும்வீட்டை வைத்திருக்கும் அசல் உரிமையாளர்களாக இருந்தாலும் அவர்களின் வாழ்வாதார தேவைகளுக்காக மாவட்ட கண்காணிப்புக் குழுவை சார்ந்து இருக்க வேண்டும். மார்ச் 2020 முதல் இந்திய மக்கள்கோவிட் 19 தொற்றுநோயை எதிர்கொள்கின்றனர். இந்த காலகட்டத்தில் அரசு ஆன்லைன் கூட்டங்களை நடத்துகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக, இந்த திட்டத்திற்கு எதிராக எந்தவொரு அரசாங்க அலுவலகத்திற்கும் முன்னால் மக்கள் கூட முடியவில்லை. எனவே இந்த மனுவை குமரி மாவட்ட மக்களின் பிரதிநிதித்துவமாக ஏற்றுக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டல திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து விலக்குஅளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.