tamilnadu

img

அறிமுகம் இல்லாத ஊரில் தங்கி அமைப்பை உருவாக்கிய அமீர் ஹைதர் கான் - ஜோ.ராஜ்மோகன்

இந்திய விடுதலை இயக்கத்துக்காகவும், புரட்சி இயக்கத்துக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மிக சிறந்த கம்யூனிஸ்ட் அமீர் ஹைதர்கான், மீரட் சதி வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பிரிட்டிஷ் போலீசாரால் தேடப்பட்டவர். எனினும்  போலீஸ் வசம் சிக்காமல் தலைமறைவாக இருந்து கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை மேற்கொண்டவர். தென்னிந்தியாவில் தலைமறைவாக பணியாற்றிக் கொண்டிருந்த போது தோழர்கள் பி.சுந்தரய்யா, வி.சுப்பையா, கம்பம்பாடி சத்யநாராயணா (சீனியர்) பி.சீனிவாசராவ், எஸ்.எம்.ராமையா, சி.எஸ்.சுப்ரமணியம், ரஷ்யா மாணிக்கம், அவரது சகோதரர் ராஜவடிவேலு, ஆர்யா என்னும் கே.பாஷ்யம், வி.கே.நரசிம்மன் போன்ற ஆளுமைமிக்க புரட்சிக்காரர்களை கம்யூனிஸ்டுகளை உருவாக்கி, தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடித்தளமிட்டார் ஹைதர்கான்.

இவர் தென்னிந்தியாவில் சங்கர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அமீர் ஹைதர்கானை  பம்பாயிலிருந்து சென்னைக்கு ஸ்பென்சர் கம்பெனியில் வேலை பார்த்த ஒரு அதிகாரியை சந்திக்கும்படி சுகாசினி (சரோஜினி நாயுடுவின் சகோதரி) கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பி வைத்தார். அவர் தோழர் அமீர் ஹைதர்கான் சென்னையில் வேலை செய்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறியிருந்தார். ஆனால் அந்த அதிகாரி அச்சத்தின் காரணமாக தம்மால் எவ்வித உதவியும் செய்து தர இயலாது என்று கூறி பம்பாய்க்கே  திரும்பி சென்று விடுமாறு கானை கேட்டுக்கொண்டார். ஆனால் கான், சென்னையிலிருந்து திரும்பி சென்றுவிட மனமில்லை. எவ்வித அறிமுகம் இல்லா ஊரில் பேசும் மொழி தெரியாத நிலையிலும் மார்க்சியத்தை பவரச் செய்வது, கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவது என்ற லட்சியத்தில் உறுதியோடு இருந்தார் ஹைதர்கான்.  சென்னை ரயில் நிலையம் அருகில் உள்ள விடுதி ஒன்றில் தங்கிக் கொண்டு புதிய தொடர்புகளை உருவாக்கிட திட்டமிட்டார். அந்த விடுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவரான மாத்யூ அறிமுகமானார். அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். மாத்யூ தனக்கு கீழே பணியாற்றிய சிலரை அமீர்கானிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது விஞ்ஞானத்திலும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் கொண்ட வெங்கட்ராமன் அறிமுகமானார். சுதந்திர நாடுகள் தான் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்க முடியும் என்று சுதந்திர வேட்கையை அவரிடமும் ஏற்படுத்தினார் அமீர் கான். அவரிடம் தனக்கு இளைஞர்களை அறிமுகம் செய்து வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

லயோலா கல்லூரியில் பி.ஏ.ஹானர்ஸ் படித்து வந்த வி.கே.நரசிம்மன் என்பவரை கானுக்கு அறிமுகப்படுத்தினார் வெங்கட்ராமன். அதேபோல் ஜெயராமன் என்ற தனது பயிற்சியாளரையும் அறிமுகம் செய்து வைத்தார். இவ்வாறாக சேர்ந்த மாணவர்களை வைத்து இளம் தொழிலாளர்கள் சங்கம் என்ற ஒரு குழுவை உருவாக்கினார் அமீர்கான். ஜெயராமனை மாஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர் மார்க்சிய கல்வி பயின்று வந்தார். அங்கு ஒரு அறுவை சிகிச்சையின் போது அவர் மரணமுற்றார். இளம் தொழிலாளர் சங்கம் வாராவாரம் ரகசியக் கூட்டங்களை நடத்தியது. இவர்களுக்கு மார்க்சியம் பற்றியும் இந்திய விடுதலை இயக்கம் குறித்தும் வகுப்பெடுத்தும், விவாதித்தும் வந்தார். சென்னை தீவுதிடலில் அச்சுத் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் அறிமுகமானார். தனது சகோதரர் ராஜவடிவேலு சிறந்த தேசியவாதி என்றும் அவர் ஒரு பத்திரிகையும் நடத்தி வருவதாகவும் மாணிக்கம் கூறினார். உடனே அவரை சந்திக்க விரும்பினார் அமீர் ஹைதர்கான். பழைய இந்து அலுவலகத்திற்கு அருகில் ஒரு குறுகிய சந்தில் உள்ள ராஜவடிவேலு வீட்டிற்கு அமீர் ஹைதர்கானை மாணிக்கம் அழைத்துச் சென்றார். 

நீதி கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த ராஜவடிவேலுவிடம் வஞ்சிக்கப்பட்டு கிடக்கும் மக்களை அமைப்பு ரீதியில் ஒன்று திரட்டுவது வர்க்க உணர்வுள்ளோர் அனைவரது கடமை என்றும், எனவே சுரண்டப்பட்டு கிடக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் நாம் அணிதிரட்டப்பட வேண்டியவர்கள் என்றும் கூறினார் அமீர்கான். ராஜவடிவேலு நடத்திவந்த ஜனமித்திரன் என்ற பத்திரிகையை முன்னேற்றம் என்று பெயர் மாற்றம் செய்து இளம் தொழிலாளர் சங்கத்தின் பத்திரிகையாக நடத்தச் செய்தார். ஜெர்மனியிலிருந்து வெளியாகிவந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் செய்தித்தாள்களை சில தோழர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதில் வந்த கட்டுரைகளையும் இந்திய நாட்டில் நிலவும் சூழல்கள் பற்றியக் கட்டுரைகளையும் தாங்கி வந்தது ‘முன்னேற்றம்’. கம்யூனிஸ்ட் அகிலத்தின் சார்பாக இந்தியா செல்வதற்கு வழிச் செலவுக்கென கொடுத்த 150 டாலரில் பயணச் செலவு போக எஞ்சியதை மிகச்சிக்கனமாக செலவு செய்து தனது கடமைகளை ஆற்றினார். பல நாட்கள் பசியும் பட்டினியுமாக இருந்தார் அமீர்கான். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தை உருவாக்குவது, அகிலத்துடன் இணைப்பது, மார்க்சியத்தை பரவச் செய்வது என்பதே அவரது இலட்சியமாக இருந்ததால் வறுமையையும் கடும் சோதனைகளையும் எளிமையாக கடந்தார். தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கு அடித்தளத்தை அமைத்தார்.

லயோலா கல்லூரியில் பயின்று வந்த போதே தேசிய இயக்கத்தில் பங்கெடுத்து வந்த கம்பம்பாடி சத்யநாராயணா, காந்திஜி அன்னியதுணி புறக்கணிப்பு போராட்டத்தையும், கள்ளுக்கடை மறியல் போராட்டங்களையும் நிறுத்தியதாலும் உப்பு சத்தியாகிரகத்தை வாபஸ் பெற்றதாலும் அதிருப்தியடைந்திருந்த சத்யநாராயணாவை சந்தித்து அமீர்ஹைதர்கான் உரையாடினார். அதனால் மார்க்சிய லெனினிய பாதையை ஏற்றுக்கொண்ட சத்யநாராயணா, அமீர் ஹைதர்கானின் வேண்டுகோளின்படி தனது மனைவியை அழைத்து வந்து சென்னையில் குடியேறினார்.  சென்னை கட்சி குழுவில் முழுநேர ஊழியராக பணியை மேற்கொண்டார். பின்னர் ஆந்திரா சென்று தோழர் சுந்தரய்யாவுடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார். பின்னாளில் பிரஜாசக்தி விசாலாந்திரா பத்திரிகையில் ஆசிரியராக தனிப்பெரும் மதிப்புமிக்க தலைவராக உருவானார்.

(நாளை தொடரும்)

 

;