tamilnadu

img

அகில இந்திய வேலை நிறுத்தம் இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்

பாஜக மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச நலனுக்கு
விரோதமான கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள்
ஒருங்கிணைந்து ஜனவரி 08, 2020 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப்
போராட்டத்தை அறிவித்துள்ளன. இதேபோல் விவசாயிகளின் உற்பத்தி
பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை, விவசாயிகள், விவசாயத்
தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து
200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளன. தொழிலாளர்கள், விவசாயிகள்
அறிவித்துள்ள நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் பேராதரவு
வழங்கியுள்ளன.
மோடியின் பாஜக மத்திய அரசு, தொழிலாளர் நலனுக்கு பாதுகாப்பு அளித்து வந்த
44 சட்டங்களை 4 சட்டங்களாக குறுக்கு வெட்டி, போராடி பெற்றுள்ள உரிமைகள்
பறிக்கப்பட்டிருக்கின்றது. தேசத்தின் ‘இறையாண்மை’க் கொள்கையின்
ஆதாரமாக உள்ள பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை
தனியாருக்கு விற்று வருகின்றது. வரலாறு காணாத அளவில் வேலையில்லாத்
திண்டாட்டம் அதிகரித்துள்ளதோடு, வேலையிலிருக்கும் தொழிலாளர்களில் ஒரு
கோடிக்கும் அதிகமானவர்களை வேலையிலிருந்து வேரோடு பிடுங்கி வீதியில்
எறிந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தை சிதைத்து
சீர்குலைத்து வருகிறது. உற்பத்தித் துறையில் அனைத்து தொழில்களும்

தீவிரமான நெருக்கடியில் சிக்கியுள்ளன. இலட்சக்கணக்கான சிறு, குறு
தொழில்கள் செத்து மடிந்து விட்டன.மறு பக்கம் குழும நிறுவனங்களின் கொழுத்த

லாப வேட்டைக்காக சலுகைகள்,
ஏராளமான வரிச் சலுகைகளையும், ஊக்கத் தொகை, மானியம் என்கிற பெயரில்
மக்கள் வரிப்பணம் வாரி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த தீய
நடவடிக்கைகளால் பொருளாதாரத் தளத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து, சமூக
நிலையில் மோசமான விளைவுகள் ஏற்பட்டு உள்ளன. இதற்கு காரணமான வரும்
நவ தாராளமயக் கொள்கைகள் கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தியும்,
அரசியல் அமைப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் சட்டத்தின் முன்
அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை தூக்கி எறிந்து விட்டு மக்களைப்
பிளவுபடுத்தும் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், மதச்சார்பற்ற
கொள்கைகளுக்கு எதிரான தேசிய மக்கள் பதிவேடு, மக்கள் தொகை தேசிய
பதிவேடு போன்ற திட்டங்களை கைவிட வேண்டும் எனக் கோரியும் ஜனவரி 08,
2020 (புதன் கிழமை) நடைபெறும் தொழிலாளர் - விவசாயிகள் வேலை நிறுத்தப்
போராட்டத்தை தமிழ்நாட்டில் மகத்தான வெற்றி பெறச் செய்யும் வகையில்
இடதுசாரி கட்சிகளும், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு
செய்துள்ளன. இப்போராட்டத்துக்கு தமிழக மக்கள் பேராதரவு அளித்திட
வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இடதுசாரி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து பேசி இம்மறியல்
போராட்டத்த்தை வெற்றிகரமாக அந்தந்த மாவட்டங்களில் நடத்திட திட்டமிட
வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

;