புதுச்சேரி, ஜூலை 21- தலித், பழங்குடியினர் குடும்பங்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்கக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை அருகே உழவர்கரை பகுதித் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போல் பாகூர், வில்லியனூர் உள்ளிட்டு புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தலித் மக்கள் மேம்பாட்டு துணை திட்ட நிதியில் இருந்து ஒவ்வொரு தலித் மற்றும் பழங்குடியினர் குடும்பங்களுக்கு மாதாமாதம் ரூ.7,500 வழங்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம் மாதம் 10 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை உடனே துவக்கி, நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.600 உயர்த்தி வழங்க வேண்டும், மதிய உணவு திட்டத்தின் கீழ் சத்துணவு பொருட்களை தலித் மக்க ளின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடனே வழங்குவதோடு, தகுதியுள்ளவர்களுக்கு சிவப்பு ரேஷன் கார்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. பிரதேச தலைவர் வெ.கு.நிலவழகன், செயலாளர் ஜி.ராமசாமி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் நிர்வாகிகள் ரமேஷ், அரி கிருஷ்ணன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.