புதுக்கோட்டை, நவ.19- புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்தாமனை அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளிக்கு பெற்றோர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருட்களை கல்விச்சீராக வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த பள்ளத்தாமனையில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்குள்ள ஆசிரியர், பெற்றோர் மன்றும் இளைஞர்கள் முயற்சியால் கடந்த 2019-ஆம் ஆண்டு 17-ஆக இருந்த குழந்தைகளின் எண்ணிக்கை தற்பொழுது 40-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பெற்றோர், இளைஞர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் மாணவர்களுக்குத் தேவையான விளையாட்டு சீருடைகள், எழுதுபொருட்கள், திருக்குறள், பாடல் நூல்கள், கையெழுத்து நூல்கள், கணித உபகர உள்ளிட்ட ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்களை வழங்கினர். மேலும், பள்ளிக்கு தேவையான மின்விசிறி, இருக்கைகள், கணித உபகரணங்களும் வழங்கப்பட்டன. ஊர்ப் பொது மக்களே பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பு அமைத்துக் கொடுத்து, கூடுதலாக கணினி ஆசிரியரை நியமித்து சம்பளமும் வழங்கி வருகின்றானர். கல்விச்சீர் வழங்கும் விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.மணிவேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார், செயற்குழு உறுப்பினர் ரெ.பிச்சைமுத்து, ஒன்றியச் செயலா ளர் மு.சாமியப்பன், ஊராட்சி செயலாளர் சி.முருகேஷ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக உதவி ஆசிரியை ஜோதிமணி வரவேற்க, இளைஞர் மன்றப் பொறுப்பாளர் சி.முருகராஜ் நன்றி கூறினார்.