tamilnadu

img

பாலமேடு ஜல்லிக்கட்டு சீறிப் பாய்ந்த காளைகள்

அவனியாபுரத்தில் மக்கள்   மகிழ்ச்சி வெள்ளம்; ரெகுநாதபுரத்தில் 17 பேர் காயம்

மதுரை, ஜன.16- உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூரில் இன்று (வெள்ளியன்று) நடைபெற உள்ள நிலையில் அதற்கு இணையாககக் கருதப்படும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு வியாழனன்று கோலாகலமாக நடைபெற்றது.  ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சிராப் பள்ளி, கரூர், இராமநாதபுரம், மதுரை தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகள்  பதிவு செய்யப் பட்டிருந்தன. வியாழன் காலை 6 மணி முதலே, ஜல்லிக்கட்டு நடைபெற்ற மஞ்சள்மலை சாமி ஆற்றுதிடலில் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். வாடிவாசல் முன்பு காளையர்களும், கேலரிகள், தடுப்பு வேலிகளுக்குப் பின்புறம் பார்வையாளர்களும் நின்றிருந்தனர்.  முன்னதாக காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு முன்பாக மாவட்ட ஆட்சியர் வினய் உறுதிமொழியை வாசிக்க அதனை மாடுபிடி வீரர்கள் திரும்பவாசித்தனர். இதையடுத்து  ஜல்லிக்கட்டு தொடங்கி யது. முதலில் போட்டியை நடத்தும் கிராம  மகாலிங்கசாமி பொது மடத்துக்கமிட்டி சார்பில் கோவில் காளை களம் இறக்கப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட 700 காளைகளும் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. அதை வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். பதிவு செய்யப்படட 936 வீரர்களில் முதல் சுற்றில் 75 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். துள்ளிக்குதித்து வந்த காளைகளின் திமில்களை வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். திமிலை விடாத வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். 700 காளைகளில்  659 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

இதேபோல் சில காளைகள் யாருக்கும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து நிற்காமல் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று காளையர்களை கலங்கடித்தன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் வாடிவாசல் வழியாக வரும் முன்பே அது யாருடைய காளை, அதற்கான பரிசுப்பொருட்கள் என்ன என்பதும் அறிவிக்கப்பட்டன. அதேபோல் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஜல்லிக்கட்டு திடலில்  உட னுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.மூர்த்தி (திமுக). மாணிக்கம் (அதிமுக) உட்பட பலர் ஜல்லிக் கட்டு போட்டியை பார்த்து பரவசமடைந்தனர். 

26 பேர் காயம்

26 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தொடர்ந்து மேல்  சிகிச்சைக்காக அழகுராஜா, பிரசாத், செல்வக்குமார், ரமேஷ்குமார், பிரபு, அழகுபாண்டி, கார்த்திக், ரகு உள்ளிட்ட பத்து பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆட்டுக்குட்டி-கன்றுக்குட்டி பரிசு

பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் சார்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டன. தங்கம், வெள்ளிக்காசுகள், சைக்கிள், அண்டா, கட்டில், ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டி என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

மருத்துவர் குழு

மதுரை மண்டல மருத்துவ இணை இயக்குநர் பிரியாராஜ் தலைமையில் 15 மருத்துவர்கள், 85 மருத்துவ உதவியாளர்கள் உட்பட 100 பேர் கொண்ட மருத்துவக்குழு செயல்பட்டது. காலை எட்டு மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு மாலை ஐந்து மணிக்கு நிறைவு பெற்றது. ஆட்சியர் டி.ஜி.வினய்,  தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், டி.ஐ.ஜி.  ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் மணிவண்ணன் இரண்டாயிரத்திற்கும்  மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கரைவேட்டிக்கு காவல்துறை ‘தனி மரியாதை’

பாலமேடு ஜல்லிக்கட்டை காண விஐபி பாஸ்கள் மதுரை வருவாய் கோட்டாட்சிய ரால் வழங்கப்பட்டிருந்தன. பல்வேறு நேரங்கள் குறிப்பிடப்பட்டு விஐபி பாஸ்கள் வழங்கப்பட்டிருந்தன. இதில் வியாழன் மாலை மூன்று மணி முதல் நான்கு மணி வரை விஐபி பாஸ்கள் பெற்றிருந்தவர்களை காவல்துறையினர் அனுமதிக்க  மறுத்து விட்டனர். வருவாய் கோட்டாட்சியர் வழங்கிய ‘பாஸ்க்கு’ இது தான் மரியாதையா என பாஸ் வைத்திருந்தவர்கள் புலம்பினர். அதே நேரத்தில் அதிமுக கரை வேட்டியுடன் வந்தவர்கள் எந்தக் கட்டுப்பாடுமின்றி விஐபி கேலரியில் அமர்ந்து ஜல்லிக்கட்டு பார்த்தனர்.

அவனியாபுரம்

தனி நபரின் கையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சென்றுவிடுமோ என்ற  ‘கலக்கம்’ அவனியாபுரம் மக்களிடையே சூழ்ந்து நின்ற  நிலையில், மதுரை உயர்நீதிமன்றம் ஓய்வு  பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப் பட்டதால்  காளைகள், மாடுபிடி வீரர்களைவிட ஜல்லிக்கட்டை துள்ளிக்குதித்து வரவேற்று கொண்டாடியது அவனியாபுரம் மக்கள். அவனியாபுரம் மக்கள் ஆடல், பாடல், ஆட்டம், பாட்டம் என வெற்றிக் களிப்பு ஒருபுறம், மற்றொருபுறம் காளைகளை அடக்கும் வீரர்கள் என “இரட்டை ஜல்லிக்கட்டு”  புதன்கிழமை (தை முதல்நாள்) நடைபெற்றது என்றால் அது மிகையல்ல. காலை எட்டு மணிக்கு தொடங்கிய ஐல்லிக்கட்டு மாலை 4.30 மணிக்கு  முடிவடைந்தது.  ஓய்வுபெற்ற ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் வினய், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம், மாநக ராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் போட்டியை நடத்தினர்.  ஒன்பது சுற்றுக்களாக நடைபெற்ற இப்போட்டியில்  641காளைகள், 610 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், கரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த ஏராளமான காளைகள்  மாடுபிடிவீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடின. காளைகளுக்கு இணையாக மாடுபிடி வீரர்களும் காளைகளின் திமில்களை தழுவி அடக்கினர்.  ஜல்லிக்கட்டில்  66 பேர் காயமடைந்தனர். இவர்களில்  37  பேர் மாடு பிடி வீரர்கள். 29 பேர் பொதுமக்கள். இவர்களில் ஒன்பது பேர் மேல்சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்  14 காளை களை அடக்கிய மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்ந  சேர்ந்த விஜய்  முதல் பரிசையும், 13  காளைகளை அடக்கிய மதுரை சோலை அழகு புரத்தைச் சேர்ந்த பரத்குமார் இரண்டாம்  பரிசையும், பத்து காளைகளை அடக்கிய மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு  மூன்றாம் பரிசையும் பெற்றனர். சிறந்த காளை (புருஷோத்தமன்)-க்கான விருதை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் குடும்பம் பெற்றது. பரிசை அனுராதா பெற்றுக்கொண்டார். அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசளிக்கப்பட்டது. 

அலங்காநல்லூர்

உலகப்புகழ்பெற்றது என வர்ணிக்கப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (வெள்ளி) காலை எட்டு மணிக்கு துவங்குகிறது.

ரெகுநாதபுரத்தில் 357 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 357 காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வை யாளர்கள் என 16 பே ர் காயமடைந்தனர். கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் அடைக்கலமாதா கோயில் 3 ராஜாக்கள் பொங்கல் விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர்,  மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 357 காளைகள் கலந்து கொண்டன. 120 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர்.  மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் போட்டியை தொடங்கி வைத்தார். ஆர்.டி.ஓ.  பாலதண்டாயுதபாணி, தாசில்தார் ஷேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு நாற்காலி, எலக்ட்ரிக் ஸ்டவ், குக்கர் வெள்ளி காசு  உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப் பட்டன. வாண்டான் விடுதிகுமார் என்பவ ரது காளை, வீரர்களிடமிருந்து தப்பித்து மைதானத்திற்கு வெளியே இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. உடனடியாக கிராம இளைஞர்கள் காளையை உயிருடன் மீட்டனர். காளையை அடக்கிய 6 வீரர்கள் உள்பட பார்வையாளர்கள் 10 பேர் என மொத்தம் 16 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
 

;