tamilnadu

img

அவர்களின் அகோரப் பசிக்கு இரையாகாமல் தப்பிக்க...

பாஜக அரசின் இந்துராஷ்டிரா நிறுவும் திட்டமும், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள், அலுவலக நிறுவனங்களை கைப்பற்றவும், கனிம வளங்களையும், வேளாண் நிலங்களையும், காடுகளையும் கைப்பற்ற எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மக்களை இந்தியநாட்டிலிருந்தும், தொழில் அமைப்புகளிலிருந்தும், வேளாண் துறையிலிருந்தும் வெளியேற்றும் கர்ண கொடூரமான உள்நோக்கம் கொண்டவைகளாகும்.  அவைகளை நிறைவேற்ற சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என கருதி சட்டரீதியான நடவடிக்கைகளில் பலபடி வேகமெடுத்து செயல்பட்டு வருகின்றனர். 

பாஜக அரசின் பிரதமராக முதல்முறையாக  மோடி  பதவியேற்ற உடனே ஐந்தாண்டுதிட்டத்தை மட்டும் ரத்து செய்யவில்லை. அதோடு சேர்த்து 37 சட்டங்களையும், 186 திட்டங்களையும் ரத்து செய்தார். இதன் மூலம் நாட்டின் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி என்பதை தூக்கி எறிந்ததோடல்லாமல், சுமார் 70 ஆண்டு காலமாக தொழிலாளர்கள் போராடி ரத்தம் சிந்தி பெற்ற சட்டரீதியான உரிமைகளையும், சலுகைகளையும் ரத்து செய்தார். இவ்வாண்டு  நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மேற்குவங்க மாநலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் முடிந்த உடன் கண்டிப்பாக குடியுரிமை திருத்தசட்டத்தை அமல்படுத்துவோம் என கூறியுள்ளார். ஆகவே, மத்திய பாஜக அரசு சிறுபான்மை மக்களைநாட்டை விட்டு வெளியேற்ற தீவிரமாக உள்ளது தெரிகிறது. கார்ப்பரேட் நிர்வாகங்கள் இந்திய நாட்டின்தொழில்துறை, வர்க்கத்துறை, சேவைத்துறை மற்றும் வேளாண் துறைகளை கைப்பற்றி கபளீகரம் செய்யவும் தொழிலாளர்களையும், அலுவலக பணியாளர்களையும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் ஆலைகளில் இருந்தும், சேவை நிறுவனங்களில் இருந்தும்வேளாண்மையிலிருந்தும் வெளியேற்ற  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

ஆலைத் தொழிலாளர்களை சட்டரீதியாகவே ஆலை பணிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முதல் கட்டமாக கடந்த 70 ஆண்டுகளாக போராடி பெற்றுஅனுபவித்து வந்த 29 சட்டங்களை ரத்து செய்துவிட்டது மோடி அரசு. அதற்கு பதிலாக மூன்று சட்டத்தொகுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தொழில் உறவு சட்டத்தொகுப்பு இந்தியாவில் சுமார் 50 கோடிக்கு மேல் உள்ள தொழிலாளர்கள் பனடைவதற்காகவே கொண்டு வந்துள்ளதாக கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்த சட்டத்தொகுப்பில் உள்ள சாரங்கள் அவர்கள்மீது இடி விழுவதைப் போலவே உள்ளன. 

வேளாண்மையும் கபளீகரம் 
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயம்செய்யவும், தொழிற்சாலைகள் அமைக்கவும், வியாபார மற்றும் சேவை நிறுவனங்களை நடத்தவும் அடிப்படையான நிலம் தேவை.ஆகவே இந்திய நாடு முழுவதும் நிலங்களை கையகப்படுத்த 1985 ஆண்டு முதலே பகீரத வேலைகள் நடந்து வருகின்றன. ஸ்டெர்லிங் கம்பெனி, மேக்ஸ் ஒர்த் கம்பெனி, குஜராத் மூல்சந்த் கம்பெனி, அனுபவ் பிளாண்டேசன் போன்ற நூற்றுக்கணக்கான கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்திலும் மற்ற பல மாநிலங்களிலும் நிலங்களை கையகப்படுத்தி, வேளாண் உற்பத்தி செய்தும் விற்பனை செய்தும் வருகின்றன. அவை ஒவ்வொன்றும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டு உள்ளன. 1985 முதல் 1992 வரையான காலத்திலே பல லட்சம் ஏக்கர் நிலங்கள் கார்ப்பரேட்களின் கைவசம் சென்றுவிட்டன.  1998ஆம் ஆண்டு வாஜ்பாய்  பிரதமராக இருந்த போது அகில இந்திய தரிசு நிலமேம்பாட்டு மாநாட்டை சென்னையில் நடத்தினார்.அதில் நாட்டில் உள்ள 10 கோடி ஏக்கர் புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை தரிசு நில மேம்பாட்டு திட்டப்படி செயல்பட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தர முடிவு செய்யப்பட்டது. அதன் படி தமிழகத்தில் மட்டும், 56 லட்சம் ஏக்கர் புறம்போக்கு நிலங்களையும், 3.5 லட்சம் தரிசு நிலங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரிசு நிலமேம்பாட்டு திட்டத்தில் 99 ஆண்டுகளுக்கு சொற்ப குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. 

அத்துடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்யவும், அவைகளை விற்பனை செய்யவும், வேளாண் பொருட்களைக் கொண்டு மக்கள் பயன்பாட்டு பொருட்களாக்க ஏற்றுமதி, இறக்குமதிக்கான நிறுவனம், இவைகளுக்கு நிதி உதவி வழங்க வங்கி நிறுவனங்கள் ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில்  சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதன்படிதமிழ்நாட்டில் மட்டும் 147 சிறப்பு பொருளாதார மண்டலங்களும், இந்திய நாடு முழுவதும் 1200க்கும் மேற்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களும் ஏற்படுத்தப்பட்டன. 2014-15 தோராயமாக நாடு முழுவதும் 2477 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் அமைக்க இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதோடு  வேளாண்பொருட்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டன. அதோடு பலவிதமான பொருட்களாக செயல்முறைப்படுத்தும் கம்பெனிகள் -பெப்சி கம்பெனி -  எம்.சி.கெயின் புட்ஸ் - சட்னம் அக்ரி இன்புட் கம்பெனிகள் - சைன்ஜென்டா -கார்கில்- மான்சாண்டோ - ஜான்டீரி  மற்றும் ஏராளமான, காண்டிராக்ட் மூலம் சாகுபடி செய்யும் கம்பெனிகள் எல்லாம்  ஒப்பந்த அடிப்படையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைத்தன. 

இதன்படி சில லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் வளைத்துப் போட்டன. அதுபோல நிலம் கையகப்படுத்தும் திருத்தச் சட்டம் 2015  கொண்டுவரப்பட்ட போது அதில் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் நிலமதிப்பை விட மூன்று மடங்கு கூடுதலாக பணம் கொடுத்து தனிநபர்களிடமிருந்து நிலங்களை பெற்றுக் கொள்ளலாம் என சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் 5ஆண்டுகளுக்கு தடைவிதித்தது. இருந்தாலும் இந்தியாவின் பல இடங்களில் நிலமதிப்பை விட மூன்றுமடங்கு, அதற்கு மேலும் கொடுத்து கூட நிலங்களை வளைத்துப் போட்டன. அதுபோல பணமதிப்பிழப்பு அறிவித்தபோது கருப்புப் பணத்தை வைத்திருந்தவர்கள் கார்ப்பரேட் கம்பெனிகள், பிஜேபி
காரர்கள் உட்பட பெரும்பாலும் நிலம் வாங்குவதிலும் தங்கம் வாங்குவதிலும் போட்டனர். அதனால் கருப்புப் பணம் வெறும் ஒரு சதவீதம்தான் வங்கிக்கு வந்தது. மீதத்தை வெகுவாக பயன்படுத்தி லட்சோபலட்சம் ஏக்கர் நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் வளைத்து போட்டன. இதே சமயத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் வசம் நாட்டின் பல இடங்களில் பலகோடி ஏக்கர் நிலங்களை வைத்துள்ளனர். அதில் பூராவும் சாகுபடி ஆரம்பிக்க வேண்டுமென துடித்துக் கொண்டுள்ளனர். 
கார்ப்பரேட் கம்பெனிகள் பரந்துபட்டுவளைத்துப் போட்டிருக்கும் கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நவீனமுறையில் சாகுபடி செய்ய ஆரம்ப கட்ட மூலதனத்திற்கு பாஜக அரசிடமிருந்தே பணம் பெற்றுள்ளனர். மோடி அரசு 2014 முதல் 2019 ஆகிய5 ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாராளமாக நிதிச் சலுகை வழங்கியது. வரி ரத்து  - ரூ. 3 1/2 லட்சம் கோடி வரிகுறைப்பு  - ரூ. 3 1/2 லட்சம் கோடிசெயல்படாத சொத்து - ரூ.7 லட்சம் கோடிகடன்களுக்கு வட்டிக்குறைப்பு  - ரூ. 1 லட்சம் கோடி ஆக மொத்தம் ரூ.15 லட்சம் கோடி பெற்றுள்ளனர்.  இந்த ஆண்டும் ரிசர்வ் வங்கியின் இருப்பு தொகையில் ரூ.1.86 லட்சம் கோடி பெற்றுள்ளனர். தற்போது கொரோனா கால பாதிப்புகளுக்கான ஊக்கத்தொகையாக ரூ.2.20 லட்சம் கோடி பெற்றுள்ளனர். அதோடு பல வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் கடனும் பெற்றுள்ளனர். விவசாயிகளையும், விவசாயத்தொழிலாளர்களையும் நிலத்திலிருந்து வெளியேற்ற கங்கணங்கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பல கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், பல லட்சம் கோடி ரூபாய்பணமும் பெற்றுக் கொண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவற்றின் அகோரப்பசி அடங்கவில்லை. மோடி, மத்திய ஆட்சிப்பொறுப்பில் இருப்பதுதான் சரியானதருணம். இந்த சமயத்திலேயே விவசாயிகளுடைய நிலங்களையும் அபகரித்துக் கொள்ள வேண்டுமென தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்திய நாட்டு விவசாயிகள் துண்டு துக்காணி நிலங்களாக வைத்துள்ளனராம். அவர்களால் மக்கள் தேவைக்கான உற்பத்திசெய்ய முடியாதாம். அதனால் மலைப்பகுதிகளிலும், சமவெளிப்பகுதிகளிலும் கார்ப்பரேட்டுகள் வளைத்துப் போட்டுள்ள பல கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்களில் ஒரே நாளில் பத்தாயிரம் ஏக்கர், 1 லட்சம் ஏக்கர் என நடவு இயந்திரம், அறுவடை இயந்திரம், வான்வெளி மூலம் கண்காணிப்பு, வான்வெளி மூலம் பூச்சிமருந்து அடிப்பது, தாவரங்களில் வேர்களுக்கே தேவையான போது, தேவையான அளவு சாகுபடி நீர்கிடைக்க சொட்டு நீர்பாசனம், சொட்டு நீரில்உரம் தருவது, தோட்டக்கலை பயிர்களுக்குதெளிப்பு நீர் பாசனம் செய்ய முடியும். மொத்தத்தில் நவீன இயந்திரங்கள், தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த முடியாதாம். தரமான உற்பத்தியும் செய்துவெளியூர், வெளிநாடுகளுக்கு விற்பனைசெய்ய முடியாதாம். ஆகவே விவசாயிகளுடைய நிலங்களை கார்ப்பரேட் சாகுபடியாளர்களிடம் கொடுத்துவிட வேண்டுமாம். 

அது போல இந்திய விவசாயத்துக்கு இவ்வளவு அதிகமாக -  15 கோடி விவசாயத் தொழிலாளர்கள் தேவையில்லையாம். எல்லா வகையிலும் நவீன இயந்திரங்களும் மற்றும் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட இருப்பதால் இவ்வளவு தொழிலாளர்கள் தேவையில்லையாம். தொழிலாளர்கள் தேவைப்படும் பழங்கள், பூக்கள், காய்கறிகள் பறித்தல் அது போன்ற தேவைப்படும் வேலைகளுக்கு மட்டும் சிறிய அளவு தொழிலாளர்களை வைத்துக் கொண்டுமற்ற தொழிலாளர்களை வெளியேற்றுவது அவசியம் என கார்ப்பரேட்டுகள் முடிவுசெய்துள்ளனர். இந்த கார்ப்பரேட்களின் கருத்துக்களை மோடி அரசும் ஏற்றுக் கொண்டு தான் மிக கொடூரமான அந்த மூன்றுவேளாண் விரோத சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. இந்த தொழிலாளர் விரோத, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து அவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களை ரத்து செய்யக் கோரி இந்திய தொழிலாளர்கள் சங்கங்களின் அகில இந்திய சம்மேளனம் வரும் 2020 நவம்பர் 26ஆம் தேதி பொது வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுபோல அகிலஇந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பு நவம்பர் 27ஆம்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடவும், நாடு முழுவதும் மாநில, மாவட்ட தலைநகர்களில் ரயில்மறியல், சாலைமறியல் போராட்டமும் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. நாடு முழுவதும் ஆலைத்தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கோபக்கனல் பற்றி எரிகிறது. அதனால் வரலாறுகாணாத வகையில் நாடெங்கும் போராட்டம் நடந்தேறி வருகிறது. நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து தமிழகத்திலும் இந்த போராட்டத்தீயை கொழுந்து விட்டு எரிய செய்வோம். நம்மக்களுக்கு எதிரான சக்திகளை முறியடிப்போம். மக்களைக் காப்போம்.

கட்டுரையாளர் :எஸ்.திருநாவுக்கரசு, முன்னாள் அ.இ.தலைவர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்.

;