tamilnadu

img

இந்திய இராணுவத்தை அரசியல் மயமாக்கும் மோடி அரசு! -எஸ்.வி.ராஜதுரை

இந்தியாவின் அண்டை நாடுகளில் குறிப்பாக பாகிஸ்தான், மியான்மார், சீனா, சிறிலங்கா ஆகியவற்றின் இராணுவங்கள் நீண்டகாலமாகவோ, அண்மைக்காலமாகவோ அரசியல் தன்மையாக்கப்பட்டவையாகவே உள்ளன. இந்த அரசியலின் தன்மை நாட்டு நாடு வேறுபட்டிருந்தாலும், இந்த நாடுகள் அனைத்திலும் அரசியல் அதிகாரத்தில் இராணுவம் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது. சீன இராணுவம் அந்த நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது; அரசியல் ரீதியாகப் பார்த்தால் அது நடுநிலையான இராணுவம் அல்ல; பாகிஸ்தான் அரசாங்கம் அந்த நாட்டு இராணுவத்துக்குக் கட்டுப்பட்டதாகவே உள்ளது. அந்த இராணுவமும் அரசாங்கமும் மதவாதத்துக்குக் கட்டுப்பட்டவை; மியான்மாரில் நீண்டகாலமாக ஆட்சி செய்துவந்த இராணுவம் சில ஆண்டுகளுக்கு முன் குடிமக்கள் ஆட்சிக்கு வழிவிட்ட போதிலும், அந்த நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் தீர்மானிப்பதில் அதுதான் இன்றும்கூட தீர்மானகரமான சக்தியாக உள்ளது. ஸ்ரீலங்காவில் புலிகளுக்கு எதிரான தீர்மானகரமான போர் தொடங்கிய 2006ஆம் ஆண்டு முதலே, அந்த நாட்டு இராணுவம் சிங்கள- பெளத்த பேரினவாதச் செல்வாக்கின் கீழ் வந்துவிட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படியே இந்திய இராணுவம் செயல்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது என்றாலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அந்தக் கட்சியின் கருத்துநிலைக்கோ, அக்கட்சியின் கொள்கை முடிவுகளுக்கோ உகந்த வகையில் செயல்படாமல் தேசப் பாதுகாப்பு கருதி நடுநிலையுடன் செயல்படுவதுதான் அதனிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவம் நடுநிலை தவறிய தருணங்கள்

கடந்த காலத்தில் இராணுவத்தைச் சேர்ந்த சில முக்கிய அதிகாரிகளின் தற்சாய்வுகள், பீதி, அவசரகதி முதலியவற்றின் காரணமாக இந்திய இராணுவம் நடுநிலை தவறிச் செயல்பட்டுள்ள பல நிகழ்வுகள் உள்ளன. 1947ஆம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டதன் விளைவாக நாட்டில் மூண்ட கலவரத்தை அடக்கவும் ஹைதராபாத் நிஜாமின் சமஸ்தானத்தில் உள்ளவர்களின் கொட்டத்தை அடக்கவும் அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டிருக்கிறது. ஹைதராபாத் சமஸ்தானத்தில் இந்திய இராணுவம் மேற்கொண்ட அத்துமீறல்களைப் பற்றிய விசாரணைக் குழுவொன்றை பண்டிட் சுந்தர்லால் தலைமையில் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அமைத்தார்.

வடகிழக்கு மாநிலங்களிலும் ஜம்மு காஷ்மீரிலும் பாதுகாப்புப் படைகளுக்குச் சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்தே அவை, குறிப்பாக இந்திய இராணுவம் அரசியல்மயமாக்கப்படும் போக்கு முளைவிடத் தொடங்கியது எனலாம். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை அரசியல்ரீதியான கருத்துகளை இராணுவ உயரதிகாரிகள் சொல்வது மன்மோகன் சிங்கின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இருந்த காலத்திலேயே சில முறை நிகழ்ந்துள்ளது என்றாலும் அந்தப் போக்கு கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது.

இராணுவத்துக்குள் ஆர்எஸ்எஸ்

இந்திய இராணுவத்துக்குள் தனது செல்வாக்கை நிறுவுவதற்காக ஆர்எஸ்எஸ் - பாஜக நீண்டகாலமாகவே திட்டமிட்டு வந்துள்ளது. பாஜகவின் நாடாளுமன்ற விவகாரக் குழு 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நிறுத்தப்படுவார் என்று அறிவித்தது. இரு நாட்களுக்குப் பிறகு, அதாவது 2013 செப்டம்பர் 15 அன்று முன்னாள் இராணுவத் தளபதிகளும் அதிகாரிகளும் நடத்திய பேரணியொன்றில் மோடி கலந்து கொண்டார். முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங்கும் மோடியும் மேடையைப் பகிர்ந்துகொண்டனர். ‘பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் மீது இந்தியா மென்மையாக நடந்துகொள்வதை’ கண்டனம் செய்வதற்காக நடத்தப்பட்ட பேரணி அது. 2011 மார்ச் 14 அன்று அகமதாபாத்தில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. ‘உங்கள் எதிரிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்’ என்பதுதான் அந்தக் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெயர்.

அந்தக் கண்காட்சியைப் பார்வையிடச் சென்ற இந்திய இராணுவத்தின் உயரதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஐ.எஸ்.சிங்கா, குஜராத்தில் மோடி மேற்கொண்டு வந்த பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை வெகுவாகப் புகழ்ந்தார். மோடி ‘தொலை நோக்குப் பார்வையுடையவர்’ என்று பாராட்டிய அவர், “நாங்கள் இராணுவத்தில் எவ்வாறு செயல்படுகிறோமோ, அவ்வாறே மோடி செயல்படுகிறார். அவர் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து, அந்தக் காலக்கெடுவுக்குள் குறியிலக்குகள் யாவும் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்து கொள்கிறார். இராணுவத் தளபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகளே இவை.”

தீர்க்கதரிசனச் சொற்கள் இவை! 2014ஆம், 2019ஆம் ஆண்டுத் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு மோடி அமைத்த இரு அமைச்சரவைகளிலும் மேஜர் ஜெனரல் வி.கே.சிங் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்பட்ட இராணுவம்

2014-19ஆம் ஆண்டுக் கால நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஜம்மு காஷ்மீரில் ‘பயங்கரவாதிகளை’ ஒடுக்குதல் என்னும் பெயரால், சாதாரணக் குடிமக்கள்மீது இராணுவத்தினர் கடுமையான தாக்குதல் நடத்தினர்.

26.2.2019இல் பாகிஸ்தானின் பாலக்கோட் என்னுமிடத்தில் உள்ள தீவிரவாதிகளின் முகாமொன்றை முற்றிலுமாக அழித்ததில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. பாகிஸ்தானிய விமானப் படை 27.2.2019 அன்று இந்தியப் போர் விமானமொன்றைச் சுட்டு வீழ்த்தி விமான ஓட்டியைக் கைது செய்து பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு அவரை இந்தியா வசம் ஒப்படைத்தது.

பாலக்கோட்டில் இந்திய விமானங்கள் வீசிய குண்டுகள் கட்டாந்தரையில் விழுந்தனவே தவிர, அங்கு தீவிரவாதிகள் முகாம் என்பது ஏதும் இல்லை என்று பாகிஸ்தான் கூறியது. பல்வேறு சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களும்கூட இந்திய அரசாங்கம் கூறியதை ஏற்கவில்லை. எனினும், நரேந்திர மோடியும் சங் பரிவாரமும் இந்தியாவைப் பாதுகாக்கக் கூடியவர்கள் தாங்களும் இந்திய இராணுவத்தினரும் மட்டுமே என்பதைத் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது விடாது கூறிவந்தனர். நடுநிலை வகிக்க வேண்டிய இந்திய இராணுவத்தை அவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் முதன்மைப்படுத்தியும் தங்களுக்கும் இந்திய இராணுவத்துக்கும் இடையில் இடைவெளி ஏதும் இல்லை என்பது போலவும் பேசிவந்ததைப் பற்றிக் கேள்வி கேட்டாலோ, பாலக்கோட் விவகாரம் பற்றிய உண்மைகளை வெளியிடுமாறு மோடி அரசாங்கத்தை நிர்பந்தித்தாலோ, அவற்றைக் கண்டறிய முயன்றாலோ தங்களை ‘தேச விரோதிகள்’ என்று சொல்லிவிடுவார்கள் என்று அஞ்சிய காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகள் அனைத்தும், தங்கள் தேசபக்தியைக் காட்டிக்கொள்ள மோடியுடன் போட்டி போட்டனர். ஜம்மு காஷ்மீருக்கு இருந்த சிறப்புத் தகுதியை அகற்றுவதற்கு முன் ஆயிரக்கணக்கான இந்தியப் படை வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டனர். அந்த (முன்னாள்) மாநிலம் முழுவதுமே – குறிப்பாக - காஷ்மீர் பள்ளத்தாக்கு – நான்கு மாத காலமாக இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்து வருகிறது.

இந்திய இராணுவத்தில் 40 ஆண்டுக்காலம் பணியாற்றி, உயர்பதவிகளை (GOC in C Northern Command and Central Command ) வகித்தவரும் ஓய்வுபெற்றதற்குப் பின் ஆயுதப் படைகள் தீர்ப்பாயத்தில் (Member of Armed Forces Tribunal) உறுப்பினராக இருந்தவருமான லெஃப்டினன்ட் ஜெனரல் ஹெச். எம்.பனாக் [Lt Gen H S Panag PVSM, AVSM (R)] ‘The Print’ ஏட்டில் 26.12.2019இல் எழுதிய கட்டுரையில் (Indian military isn’t politicised like China, Pakistan but the seeds have been sown in 2019) கூறியுள்ள பின்வரும் செய்திகள் இந்திய ஜனநாயகத்தைக் காப்பதில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும் கவனிக்க வேண்டியவையாகும்.

இராணுவத்தில் அரசியல்

(1) 2015ஆம் ஆண்டு காஷ்மீரில் வெகுமக்கள் போராட்டம் நடந்தபோது, சாதாரணப் பொதுமக்களை, போராளிகளிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்காத நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கையை இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி (COAS) வெளிப்படையாக ஆதரித்துப் பேசி வந்தார். வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக, பாகிஸ்தானிலிருந்து வரும் அச்சுறுத்தல்கள் என்பதை மிகைப்படுத்திக் கூறுவதன் மூலம் நரேந்திர மோடியின் அரசாங்கத்துக்கு மறைமுகமாக ஊக்குவிப்புக் கொடுத்து வந்தனர் இராணுவ உயரதிகாரிகள் சிலர்.

(2) பாலக்கோட் விவகாரத்துக்குப் பிறகு, இராணுவம் அரசியல்மயமாக்கப்படுவதற்குக் கவலை தெரிவித்தும், இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்துமாறும் கோரும் விண்ணப்பமொன்றை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் 150 பேர் குடியரசுத் தலைவர் கோவிந்துக்கு அனுப்பினார்கள்.

(3) ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தபோது, இந்திய விமானப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், அவற்றை வாங்கியதில் முறைகேடுகள் இல்லை என்று பேசினார்கள். அந்தப் போர் விமானங்களுக்குள்ள திறன், அவற்றின் பராமரிப்பு, அவை ஏற்றிச் செல்லும் ஆயுதங்கள் முதலியன பற்றி மட்டுமே பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டே தவிர, அவற்றை வாங்குவதில் முறைகேடுகள் இருந்தனவா, இல்லையா, விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா, இல்லையா என்பதைப் பற்றிப் பேசும் உரிமை அவர்களுக்கு இல்லை. ஆயினும் அவர்கள் மோடி அரசாங்கத்துக்கு அவர்கள் மேற்சொன்ன வகையில் மறைமுக ஆதரவு அளித்தனர்.

(4) கடந்த 14.12.2019 அன்று கொல்கத்தாவில் பொது நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட இந்திய இராணுவத்தின் கிழக்குப் பிராந்தியத் தளபதி (Eastern Army Commander) லெஃப்டினென்ட் ஜெனரல் அனில் செளஹான் கூறினார்: “தற்போதைய (நரேந்திர மோடி) அரசங்கம், நீண்ட காலமாக நிலுவையிலுள்ள உறுதியான முடிவுகளை மேற்கொள்வதில் முனைப்பாக உள்ளது. ஓரிரு வடகிழக்கு மாநிலங்களிடமுள்ள தயக்கத்தையும் மீறி குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் பிறகு, இடதுசாரி - தீவிரவாதம் தொடர்பான உறுதியான முடிவுகள் தயாராகி வருகின்றன.” உயர் இராணுவ அதிகாரி ஒருவர் இப்படிப்பட்ட அரசியல் பேச்சுகளைப் பேசுவது 72 ஆண்டுகளாக இந்திய இராணுவம் கடைப்பிடித்துவந்த நடுநிலை என்ற நெறியிலிருந்து விலகிச் செல்வதாகும்.

(5) அவர் இப்படிப் பேசிய அதே நாளில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கெதிராக அசாமிலும் திரிபுராவிலும் நடந்த எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவம் அனுப்பப்பட்டது. நற்பேறாக, அங்கு கொடி அணிவகுப்புகள் நடத்துவதுடன் இராணுவம் நின்று கொண்டது. நாட்டில் கலவரங்கள் ஏதேனும் நடக்குமானால் அவற்றைக் கட்டுப்படுத்தவோ, சமாளிக்கவோ அதிரடிக் காவல் படையே போதும்.

(6) இந்திய இராணுவத்திலுள்ள சில சந்தர்ப்பவாத உயரதிகாரிகள் ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகளுக்கு விசுவாசம் காட்டுவது நீண்டகாலமாகவே இருந்துவரும் போக்கு; 1950களிலும் 1960களும் இருந்த இந்தப் போக்குதான் இந்திய - சீன எல்லைப் போரில் இந்தியா தோற்றதற்கான காரணமாக இருந்தது. அதன்பிறகு ஆயுதப் படைகளும் அரசாங்கமும் இந்தப் போக்கைக் களையும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. தவறு செய்த இராணுவ அதிகாரிகள் மீது கறாரான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சீனியாரிட்டிகளை முந்திய ராவத்

(7) விமானப் படையைச் சேர்ந்த ஏர் மார்ஷல் மஞ்சித் சிங் செகோன், அன்றைய பிரதமரிடம் மேற்குப் பிராந்திய விமானப் படைத் தளபதியாகத் தன்னை நியமிக்குமாறு எழுதினார். அந்தப் பதவியை அவர் பெற்றிருந்தால் விமானப் படையின் தலைமைத் தளபதியாக (Chief of Air Staff) ஆகியிருப்பார். ஆனால், 19.3.2002 அன்று அவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும்படி கட்டாயப்படுத்தப்பட்டதுடன் வேறு சில அதிகாரிகளும் கண்டிக்கப்பட்டனர்.

(8) இராணுவத்திலுள்ள மூத்த அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டு தங்கள் சுயநலத்தை மேம்படுத்திக்கொள்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் பெரும்பாலான அரசாங்கங்கள் தலைமைத் தளபதி அல்லது இராணுவத் தளபதிகள் போன்ற பதவிகளில் பணி மூப்பு உடையவர்களை நியமிக்கும் கொள்கையைப் பின்பற்றுகின்றன. ஆனால், நரேந்திர மோடி அரசாங்கம் இந்த நெறியிலிருந்து பிறழ்ந்து, இரண்டு மூத்த இராணுவ அதிகாரிகளைப் புறக்கணித்து, பிபின் ராவத்தை தலைமைத் தளபதியாக நியமித்தது. அதேபோன்ற முறையில் கப்பற்படைத் தலைவராக (Chief of Naval Staff) நியமிக்கப்பட்டவர்தான் அட்மிரல் கரம்பிர் சிங். தகுதி அடிப்படையில் நியமனம் செய்வது அரசாங்கத்துக்குரிய பிரத்யேக உரிமை. ஆனால், தேர்வு செய்வதில் வெளிப்படையற்ற தன்மையையும், நமது அரசியல் கலாச்சாரத்தையும், கடந்தகால அனுபவங்களையும் கருத்தில் கொள்கையில் அரசியல்மயமாக்கப்பட்ட மேல்-கீழ் வரிசைதான் உருவாகும். மேலும், தவறு செய்த மூத்த அதிகாரிகள் கண்டிக்கப்படுவதற்குப் பதிலாக, அவர்களின் அரசியல் அறிக்கைகள்தான் போற்றப்பட்டுள்ளன; அவற்றுக்கு ஆதரவாகப் பேசப்பட்டுள்ளன.

இராணுவம் சுய பரிசோதனை செய்துகொள்ளுமா?

(9) அரசியல் நோக்கங்களுக்காக இந்திய இராணுவம் அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அது இன்னும் முழுமையாக அரசியல்மயமாக்கப்படவில்லை. ஆனால் (அரசியல்வாதிகளுக்கு விசுவாசமாக உள்ளவர்களை உயர்பதவியில் அமர்த்தும்) அறம்சாராத இந்தப் போக்கு அந்த நிலைக்குத்தான் கொண்டு செல்லும்.

(10) இன்னொரு தோல்வியை அடைவதற்காகக் காத்துக்கொண்டிருப்பதைவிட மோடி அரசாங்கமும் இராணுவ உயரதிகாரிகளும் சுய பரிசோதனை செய்துகொண்டு இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

மேற்சொன்ன ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியின் கட்டுரை ‘The Print’ ஏட்டில் வெளிவருவதற்கு ஒருநாள் முன்பே, மோடி அரசாங்கம் இந்தியாவின் முப்படைகளுக்குமான ஒன்றிணைந்த தலைமையை உருவாக்க முடிவு செய்துள்ளது. விரைவில் ஓய்வுபெறவிருக்கும் இராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், இந்தப் புதிய பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி அரசாங்கத்துக்கு மிகவும் வேண்டிய இவர் இன்று, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்களை வன்முறையாளர்கள், நாசம் ஏற்படுத்துபவர்கள் என்று கண்டனம் செய்துள்ளார்.

இது எத்தகைய பேரபாயத்துக்கான அறிகுறி என்பதைச் சொல்லத் தேவையில்லை.

கட்டுரையாளர் குறிப்பு

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்

-நன்றி மின்னம்பலம்

;