tamilnadu

img

மன்னாதி மன்னா... மகா பிரபோ...சரணம், சரணம்!

சக்ரவர்த்தி பிரேந்திர கோடி சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். கடப்பாடி வேலுச்சாமியும் வெந்நீர்ச் செல்வமும் சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர். தளபதி யமி யமி ஷாவும் அமைச்சர் தருண் பேட்லியும் கெத்தாக அமர்ந்திருக்கின்றனர். அரண்மனை சேவகர்கள் ஒரு வீரனின் கைகளைச் சங்கிலியால் கட்டி, வாயைத் துணியால் கட்டி இழுத்து வருகின்றனர்.கோடி அவர்களைப் பார்த்து “இவன் குற்றம் என்ன செய்தான் சொல்லுங்கள் வீரர்களே” என உறுமுகிறார்.மன்னாதி மன்னா.. மகா பிரபோ! சென்ற வாரம் ஜாகிஸ்தான் நாட்டுக்குப் படையோடு சென்று சுமார் 300 குதிரைப்படை வீரர்களைப் பந்தாடிவிட்டு வந்தீர்கள் அல்லவா? தேசமே அதைப் பார்த்து மிரண்டுபோய் நிற்கிறது... 


கோடி (தன் 56 இன்ச் மார்பை நிமிர்த்தியபடி) : 


ஆம், ஆம்.. அதற்கென்ன இப்போது?


நமது படைவீரர்களின் சாகசத்துக்கு நீங்கள் சொந்தம் கொண்டாடுகிறீர்களாம்! தெருக்கோடியில் கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருந்தான் மன்னா!

இந்தத் தறுதலையின் பெயர் என்னவாம்?


பாகுல் பூந்தியாம் மன்னா!


பாகுல்.. பூந்தி! கண்டவர்களுக்கெல்லாம் தண்டத் தீர்ப்பு எழுத என்னுடைய பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா?

யமி யமி ஷா (மன்னரின் காதோடு) : நல்லவேளை! நாம எதிரி நாட்டுக்குப் படைவீரர்களை அனுப்பினமா இல்லையா.. எத்தனை பேரை அனுப்பினோம்கற விஷயம் எல்லாம் நம்ம மூணு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியமா இருக்கு!


யமி யமி ஷா (மன்னரின் காதோடு) : நல்லவேளை! நாம எதிரி நாட்டுக்குப் படைவீரர்களை அனுப்பினமா இல்லையா.. எத்தனை பேரை அனுப்பினோம்கற விஷயம் எல்லாம் நம்ம மூணு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியமா இருக்கு!


தருண் பேட்லி : நம் படை வீரர்களை அவமதித்துவிட்ட இவனை ஜாகிஸ்தானுக்கு நாடு கடத்திவிடுவோம் மன்னா!


கோடி : நான் நினைத்தேன்.. நீர் சொல்லி விட்டீர் தருண் பேட்லி ! இழுத்துச் செல்லுங்கள் இவனை! மூட்டையாகக் கட்டி ஜாகிஸ்தான் எல்லையில் கொண்டுபோய் போட்டுவிட்டு வாருங்கள்! இவன் தொல்லை இன்றோடு ஒழியட்டும்!


வீரர்கள் அடுத்த குற்றவாளியை கையைக் கட்டி, வாயைக் கட்டி ஆஜர்படுத்துகிறார்கள்.


மன்னாதி மன்னா! இவன் என்ன செய்தான் தெரியுமா? சென்ற மாதம் தொலைதூரம் பயணித்து கிரான்ஸ் தேசத்து மன்னரிடமிருந்து 36 வேல்கம்புகளைப் பெற்று வந்தீர்கள் அல்லவா? 


தருண் பேட்லி : அதில் தேவைக்கு மேல் பொற்காசுகளை அள்ளி வீசி கஜானா பணத்தை வீணடித்துவிட்டதாகச் சொல்கிறானாக்கும்!


யமி யமி ஷா (மன்னரின் காதோடு) : நம்ம அமைச்சரே உளறிக் கொட்டி நம்மைக் காட்டிக் கொடுத்துவிடுவார் போலிருக்கிறதே!


 கோடி : இந்த வீணாப் போனவனின் பெயர் என்னவாம் வீரர்களே?


ஒரு வீரன் ( வாயைப் பொத்தியபடி) : ராம், ராம்! அந்தப் பெயரைச் சொல்லவே அச்சமாக இருக்கிறது மன்னா! ஆனால் நீங்க இருக்கற தைரியத்திலே சொல்லி விட்டேன்!

இன்னொரு வீரன் : இவன் பெயர் அகிலமெல்லாம் எப்படியோ பரவியிருக்கிறது மன்னா! 


கோடி : அதனால்தான் இவனை காராக்கிரகத்தில் அடைக்க யோசிக்கிறேன். அவிழ்த்துவிட்டு விடுங்கள்.. போய்த் தொலையட்டும்!


யமி யமி ஷா : நம்ம அதிகாரத்தை மதிக்காத நகர்ப்புற அறிவாளிகளை சவுக்கால் அடித்தோம். கவுரி ரங்கேஷ், பின்சாரே, தல்புர்கி போன்ற எழுத்தாளர்களை இந்த உலகத்தை விட்டே அனுப்பினோம். அப்படியும் இவங்களுக்கெல்லாம் புத்தி வரமாட்டேங்குதே! 


அடுத்தடுத்து வரிசையாக ஆண்களையும் பெண்களையும் வீரர்கள் இழுத்து வந்தபடி இருக்கிறார்கள்.இவன் என்ன செய்தான் தெரியுமா? வைக்கோல் பிரியால் பசுமாட்டின் முதுகைத் தேய்த்து அதைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான் மன்னா!(பசுமாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்திருப்பான் என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார் யமி யமி ஷா. ஆனால் வெளியே சொல்லவில்லை)இந்தத் திமிர் பிடித்தவள் என்ன செய்தாள் தெரியுமா? யாழிசையைப் பாத்து அதிகார மமதை ஒழிகன்னு சத்தம் போட்டிருக்கா...ஜாகிஸ்தான் மன்னரோட நாம சமாதானமாப் பேசி பிரச்சனையை சுமுகமாக முடிக்க வேண்டுமாம்.. இவன் அப்படி உளறிக் கொட்டுகிறான் மன்னா...இந்த வேலையத்த வாலிபர்களுக்கு வேலை வேணுமாம்..தெருவோரத்தில் நின்று கத்திக் கொண்டிருந்தார்கள் மன்னா...இவங்க விவசாயிகளாம்.. கடன் தொல்லையில நொடிச்சுப் போய்ட்டாங்களாம்! நீங்க அவங்களோட ரெண்டு வார்த்தை பேசக்கூட மாட்டேங்கறீங்களாம்...இந்த ஒதுக்கப்பட்ட ஜனங்களுக்கு இருக்கற கொழுப்பைப் பாருங்க.. ராமர் கோவில் வாசல்லே நின்னுக்கிட்டு யாருக்கும் தெரியாம நமஸ்காரம் பண்ணிக்கிட்டிருந்தாங்க...இவங்க அராபியர் தேசத்திலேருந்து வந்தவங்க.. ஆனா திரும்பி அங்கே போகமாட்டாங்களாம்.. இனிமே இங்கேதான் இருப்பாங்களாம்.. நம்ம தேசம்தான் அவங்களோட தாய்நாடாம்.. இந்தப் பெண்மணி சொல்கிறாள்.. மனிதர்களாகப் பிறந்தவர்கள் எல்லாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டுமாம்! எப்படிப்பட்ட தேசவிரோதி பாருங்கள் மன்னா!


யமி யமி ஷா (மன்னரின் காதோடு) : இதை இப்படியே விட்டோம்னா வந்துகிட்டே இருப்பாங்க. கடையை குளோஸ் பண்ணுங்க மன்னா!


தருண் பேட்லி : எனக்கு ஒரு கவலை! இவ்வளவு பேருக்கும் நம்ம காராக்கிரகத்திலே இடம் இருக்காதே மன்னா!


யமி யமி ஷா : இதெல்லாம் ஒரு பிரச்சனையா? புதிசா நூறு காராக்கிரங்களைக் கட்டினால் போச்சு!


கோடி : சபாஷ் யமி ஷா! இந்தப் பைத்தியக்காரங்களுக்கெல்லாம் நம்முடைய உன்னதமான இந்து சாம்ராஜ்யத்திலே இடம் கிடையாது.. இழுத்துச் செல்லுங்கள் எல்லோரையும்!

சபை கலையலாம்!


ராஜகுரு


;