வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

மயிலாடுதுறையில் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் அழுகி நாசம்.... சொல்ல முடியாத துயரத்தில் விவசாயிகள்....

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் ஒட்டு மொத்தமாக அழுகியும், முளைத்தும்நாசமாய் போனது. இனி விவசாய த்தையே கைவிட தயாராகிவிட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணீருடன் புலம்புகின்றனர். 

காவிரியின் கடைமடைப் பகுதியாக உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சாகுபடிதான் பிரதானமாகும். இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கும் மாவட்டங்களில் ஒன்றாக உள்ள இங்கு பாதிப்புகளுக்கு பஞ்சமில்லை. மயிலாடுதுறை, தரங்கம்பாடி,சீர்காழி, குத்தாலம் ஆகிய 4 வட்டங்களிலும் சுமார் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் ஜனவரி முதல் வாரத்தில் பெய்த தொடர் மழையால் முழுவதுமாக மழைநீரில் மூழ்கி அழுகி போயுள்ளது. 

பல இடங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் முளைத்து வயல்களெல்லாம் நாற்றாங்கால் போல காட்சியளிக்கிறது. குறிப்பாக தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில், திருவிளை யாட்டம், திருக்கடையூர், ஓடக்கரை, காழியப்பநல்லூர், திரு விடைக்கழி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் இனி கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நிவர், புரெவி என இரு புயல்கள், மூன்று மாத காலம் பெய்த தொடர் மழை, வெள்ளத்தால் பெரும் பகுதி பயிர்கள் பாதிப்புக்குள்ளான நிலையில், எஞ்சியிருந்த சில ஏக்கர் பயிர்களும் ஜனவரி 1-லிருந்துபெய்த தொடர் கனமழையால் முற்றிலும் நாசமாகி போயிருக்கிறது.

ஏற்கனவே அறிவித்த நிவாரணமே இதுவரை வந்துசேராத நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்ததும் மழையோடு மழையாக பாழாய்ப்போனதைகண்டு விவசாயிகள் சொல்ல முடியாத கவலையில் உள்ளனர். இதனிடையே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் டி.சிம்சன், வட்டத் தலைவர் என்.சந்திரமோகன், மாவட்டக்குழு உறுப்பினர் இளையராஜா, விவசாய சங்க வட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன், கிளை செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். மேலும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை உடனடியாக அரசு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்வதோடு, உரிய நிவாரணம் கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

;