நாகப்பட்டினம், ஏப்.20-நாகை மாவட்டத்தைக் கடுமையாகத் தாக்கிய கஜா புயலில், பாடப் புத்தகங்கள், வீடுகள், உடைமைகள் போன்றவற்றை இழந்து, மிகவும் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 87.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். நாகப்பட்டினம் வருவாய் மாவட்டத்தில் 17,821 மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். இதில் 15, 584 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் தேர்ச்சி 87.45 சதவீதம். இது கடந்த ஆண்டைவிடத் தேர்ச்சி 2 சதவீதம் அதிகமாகும். கஜா புயலில் வாழ்வாதாரங்களை இழந்து அவதிப்பட்ட மாணவ- மாணவியரின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைவாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் இதை உடைத்தெறிந்து சாதனை படைத்துள்ளனர் மாணவர்கள்.