tamilnadu

img

தேர்தல் நிதிப் பத்திரங்களை இப்போதாவது ரத்து செய்க!

2018 மார்ச் 18 அன்று அமலுக்கு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம். ஆளும் கட்சியினர் கார்ப்பரேட்டுகளிடமிருந்து நிதி பெறுவதையும் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் மாமூல் வாங்குவதையும் மற்றும் கருப்புப் பணத்தைப் பெறுவதையும் மறைப்பதற்கான சூழ்ச்சிகள் நிறைந்த வெட்கக்கேடான ஒரு திட்டமேயாகும். எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்திட்டத்திற்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகள் நிதி அளிப்பது தொடர்பாக பாஜக அரசாங்கம் கொண்டு வந்த திருத்தங்களுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இத்திட்டத்தைக் கிழித்து எறிய வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கமும் (The Association for Democratic Reforms) உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தது. தேர்தல் பத்திரங்களைப் பெற மாட்டோம் என்று பிரகடனம் செய்த ஒரே கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமேயாகும்.


ஆபத்தான திருத்தங்கள்


பாரத ஸ்டேட் வங்கிகளின் குறிப்பிட்ட ஒருசில கிளைகளில் நன்கொடையாளர்கள் தங்கள் அடையாளத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவராமலேயே எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் ஓர் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக அளித்திட தேர்தல் பத்திரங்கள் வகை செய்கின்றன. இதற்காகவே, நாட்டில் ஏற்கெனவே அமலிலிருந்து வரும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வருமான வரிச் சட்டம், கம்பெனிகள் சட்டம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. கம்பெனிகள் கடந்த மூன்றாண்டுகளில் தாங்கள் பெற்ற நிகர லாபத்தில் 7.5 சதவீதத்திற்குள்தான் நன்கொடை அளித்திட வேண்டும் என்கிற சட்டப்பிரிவும் ஒழித்துக்கட்டப்பட்டது. எல்லாவற்றையும் விட மிகவும் ஆபத்தான முறையில், இந்தியாவில் இயங்கிடும் வெளிநாட்டுக் கம்பெனிகள் கூட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிக்கலாம் என்கிற ரீதியில் சட்டம் திருத்தப்பட்டது.நன்கொடை வழங்குபவர்களின் அடையாளங்கள் தாங்கள் தேர்தல் பத்திரங்களைப் பெறும் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளுக்கும் அதன் மூலம் அரசாங்கத்திற்கும் மட்டுமே தெரியும் என்பதால் கார்ப்பரேட்டுகளும் மற்றும் பெரிய அளவிலான நன்கொடையாளர்களும் ஆளும் கட்சிக்கு நன்கொடைகளை தேர்தல் பத்திரங்கள் மூலமாகவே அளித்திட விரும்பினர்.


95 சதவீதம் பாஜகவுக்கே


இத்திட்டம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்திடும் நபர்கள் யார் என்பதை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டதால், நன்கொடையாளர்கள் எவ்விதப் பயமுமின்றி நன்கொடை அளிக்கிறார்கள் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாதிடுகிறார். ஆனால் உண்மையில், தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளிலிருந்து வாங்குபவர்கள் யார் என்பது அரசாங்கத்திற்கு நன்கு தெரியும். எனவேதான் நன்கொடையாளர்கள் பிரதானமாக ஆளும் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடைகளை அளிக்கின்றனர்.இதன் விளைவுகள் எதிர்பார்த்தவிதத்திலேயே அமைந்திருந்தன. 2018 நவம்பர் வரையிலும், விநியோகிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் 95 சதவீதம் பாஜகவிற்கே சென்றுள்ளன. தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னரும் தேர்தல் பத்திரங்கள் விநியோகிக்கும் முறை தொடர்கிறது.மேலும் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது சட்டப்பூர்வமாக்கப்பட்டுவிட்டது என்று அருண் ஜெட்லி கூறியதும், இந்தத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் ரொக்கப்பணம் இறக்கிவிடப் பட்டிருப்பதிலிருந்து பொய்த்துப்போயுள்ளது. ஏப்ரல் 1 வரையிலும், 1,400 கோடி ரூபாய்க்கும் மேலாக ரொக்கப் பணம் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையும் கூட தேர்தலில் இறக்கிவிடப்பட்டிருக்கிற கருப்புப்பணத்தில் ஒரு சிறு பகுதியேயாகும்.


ஓராண்டு கழித்து ஓர் இடைக்கால உத்தரவு


நாங்கள் மனுச் செய்து சுமார் ஓராண்டு கழித்து இப்போதுதான் உச்சநீதிமன்றம் இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் தாங்கள் தேர்தல் பத்திரங்கள்மூலமாகப் பெற்ற தொகைகளின் விவரங்களையும், அவற்றை எவரிடமிருந்து பெற்றீர்கள் என்ற விவரங்களையும் முத்திரையிட்ட உறையில் வைத்து தேர்தல் ஆணையத்திற்கு அளித்திட வேண்டும் என்று அது ஓர் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இத்திட்டத்தின் செயல்பாட்டை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்திடவில்லை. அதேபோன்று அரசியல் கட்சிகள் அளித்த விவரங்களை தேர்தல் ஆணையம் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கோரவில்லை. அது, தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும் நாட்களை மே மாதத்தில் பத்து நாட்களிலிருந்து ஐந்து நாட்களாகக் குறைத்திருக்கிறது, அவ்வளவுதான். தேர்தல்கள் எல்லாம் முடிந்தபின்னர், மே 30 அன்று இதுசம்பந்தமாக நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்பது ஓர் அரைமனதுடன் கூடிய, ஏமாற்றமளிக்கக்கூடிய ஒன்றேயாகும். இது தொடர்பாக நீதிமன்றம் அனைத்துத்தரப்பினரிடமிருந்தும் மூன்று நாட்களுக்கு விவாதங்களைக் கேட்டது. தேர்தல் ஆணையமும் கூட நீதிமன்றத்தில் சமர்ப்பித்த உறுதிவாக்குமூலத்தில் இதுதொடர்பாக சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் “அரசியல் கட்சிகள் நிதி பெறுவதிலிருந்த வெளிப்படைத்தன்மை அம்சங்களில் மிகப்பெரிய அளவிற்கு ஆழமான முறையில் விளைவுகளை ஏற்படுத்தும்” என்றுதான் கூறியிருந்தது. அது மேலும், தேர்தல் பத்திரங்கள் யாரிடமிருந்து பெற்றோம் என்பதைச் சொல்ல வேண்யதில்லை என்பதன் பொருள் அரசியல் கட்சிகள் தாங்கள் அரசாங்க கம்பெனிகள் மற்றும் வெளிநாட்டு கம்பெனிகளிடமிருந்து நன்கொடைகள் பெற்றிருக்கிறோமா என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதேயாகும் என்றும் கூறி யிருக்கிறது.


அட்டர்னி ஜெனரலின் அதிர்ச்சியளிக்கும் வாதம்


அரசுத்தரப்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரல் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் வாதங்களை முன்வைத்தார். “அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பது என்பது சட்டப்பூர்வமாக்கப்பட்டுவிட்டதால், அவற்றை யார் அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்தார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்வதற்கான உரிமை கிடையாது,” என்று வாதிட்டார்.தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இந்த சமயத்தில், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி பெறுவதில் ஒரு திடீர்ப் பாய்ச்சல் வேகம் ஏற்பட்டிருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்துள்ள பதிலில், 2019இன் முதல் மூன்று மாதங்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளிப்பது, 2018ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த தொகையுடன் ஒப்பிடும்போது, சுமார் 62 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று கூறியிருக்கிறது.  2018இல் 1056.73 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு ஜனவரிக்கும் மார்ச்சுக்கும் இடையே மட்டும் 1,716 கோடி ரூபாய் மதிப்பிற்கு தேர்தல் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல்கள் நடைபெறும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை அளிக்கும் தொகை மேலும் அதிக அளவில் இருக்கும் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியும். உச்சநீதிமன்றம் இப்போதாவது இத்திட்டத்திற்கு தடை விதிப்பதன் மூலம், இவ்வாறு பணம் வாரி இறைக்கப்படுவதைக் குறைந்தபட்சம் தடுத்திட முடியும்.உச்சநீதிமன்றம், பெரிய கார்ப்பரேட்டுகள் மற்றும் சட்டவிரோதமான பணம் ஆளும் கட்சியினருக்கு அளிக்கப்படுவதை சட்டப்பூர்வமாக்கி இருக்கிற மிகவும் இழிந்த இத்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, இப்போதாவது முன்வரும் என்று நம்புவோமாக!


(ஏப்ரல் 17, 2019) 


தமிழில் : ச.வீரமணி


;