விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், துலுக்கன்குறிச்சி யைச் சேர்ந்தவர்கள் குருசாமி-ஜெயலட்சுமி தம்பதியர். இருவரும் பட்டாசுத்தொழிலை நம்பியே உள்ளனர். இதில்குருசாமி மாற்றுத்திறனாளி ஆவார். இவரது மகன் இமானுவேல் (17). செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துள்ளார்.
மருத்துவராக ஆக வேண்டுமென நினைத்த இமானுவேல் குடும்ப வறுமையின் காரணமாக தனியார் பயிற்சி மையத்தில் சேராமல் நீட் தேர்விற்கு அவராகவே படித்து தேர்வெழுதினர். 165 மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி கலந்தாய்வுக்கு அழைப்பு வந்தது. நவம்பர் 19-ஆம் தேதி கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ளார். அப்போது, ஏழு தனியார் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இடம் உள்ளதாகவும், அதில் சேர ரூ.4 லட்சம்முதல் 6 லட்சம் வரை கல்விக்கட்ட ணம் செலுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த மாணவர், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் இருந்தால் சேர்ந்து கொள்கிறேன் எனக் கூறிவிட்டு சொந்தஊருக்கு வந்துவிட்டார்.
இதேபோல், திருச்சுழி வட்டம், கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. விவசாயியான இவரது மகன்அருண்பாண்டி(17). இவர் திருச்சுழியில் உள்ள சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். நீட் தேர்வில்190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நவம்பர் 18- ஆம் தேதி கலந்தாய்வுக்கு சென்றுள்ளார். தனியார் கல்லூரியில் மட்டுமே இடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், முதல் தவணையாக ரூ.25 ஆயிரம் உடனே செலுத்த வேண்டுமென வும் கூறியுள்ளனர். கையில் பணம்இல்லாததால் மனமுடைந்த அருண்பாண்டி, கலந்தாய்வில் இருந்து வெளியேறியுள்ளார்.இந்த நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கல்விக் கட்டணத்தை தமிழகஅரசு ஏற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் வலியுறுத்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீட்தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளிமாணவர்களின் மருத்துவப்படிப்புக் கான செலவை திமுக ஏற்கும் என அறிவித்தார். இதற்குப் பிறகுதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் எனஅறிவித்தார்.
இதையடுத்து மாணவர்கள் இமானுவேல் மாரிமுத்து ஆகியோர், “ தங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்கவாய்ப்பு வழங்க வேண்டும். கட்டணத்தை அரசே செலுத்துவதால் நாங்கள் இருவரும் மருத்துவப் படிப்பில் சேரத் தயாராக உள்ளோம். எங்களது கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுமென விருதுநகர் ஆட்சியர் இரா.கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.