சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தார் பிளாண்ட் - கிராம மக்கள் எதிர்ப்பு
திருப்பூர், மே 27 – பல்லடம் ஒன்றியம், பூமலூர் ஊராட்சி, கோடாங்கிபாளையத்தில் சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்துவதுடன், மக்களின் இரவு நேரத் தூக்கத்தைத் தொலைக்கச் செய்யும் தார் பிளாண்ட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். இதுதொடர்பாக, பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சியைச் சேர்ந்த கிடாத்துறை கிராமத்தைச் சேர்ந்தோர் கூறியதாவது: கடந்த ஒரு வருடமாக கோடாங்கிபாளையம் கிராமத்தில் தார் பிளாண்ட் இயங்கி வருகிறது. அங்கு தார் உருக்கப்படுவதால் சுற்றுப்புறச் சூழலுக்கு மிகவும் கேடான நிலையும், பாதிப்பும் ஏற்பட்டு காற்றுடன் தார் புகை கலந்துவருகிறது. இதனால் கிடாத்துறையில் வசிக்கும் மக்களால் சுவாசிக்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கோடை காலத்தில் இரவு நேரங்களில் கூட
வெளியே சற்று ஓய்வெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சுவாசிக்கும் காற்று தூய்மை கிடையாது, முழுக்க, முழுக்க தார் கரித்துகள் படிந்த காற்றைத்தான் சுவாசிக்க முடிகிறது. இப்படியே நீடித்தால் இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு சீக்கிரம் சுவாசக்கோளாறு, எலும்புருக்கி நோய் போன்ற கடும் நோய்த் தாக்குதல்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. சிறு குழந்தைகள், மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் தான் சுமார் 10 மணி அளவில் தார் பிளாண்ட்டை இயக்கத் தொடங்குகிறார்கள். விடிகாலைக்கு முன்பு இதை அணைத்து விடுகிறார்கள். இரவு நேரங்களில் சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்கும் நிலை உள்ளது. எனவே கிராமப்புற மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன், தூக்கத்தைக் கெடுக்கும் இந்த தார் பிளாண்ட்டை மாற்றுவதற்கு அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
காங்கேயம் பயிற்சி மையத்தில் இலவச உளவியல் பாடப் பயிற்சி
திருப்பூர், மே 27 –காங்கேயம் டாக்டர் அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையத்தில் டிஎன்டிஈடி மற்றும் பிஜி டிஆர்பி தேர்வுகளில் பங்கேற்போருக்கு உளவியல் பாடத்தில் இரு நாட்கள் இலவச சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காங்கேயம் திருப்பூர் சாலை நெய்கடை சந்து, திருநீலகண்டர் வீதி, அருணாச்சல உடையார் தோட்டத்தில் ஜூன் 1, 2 ஆகிய இரு நாட்கள் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை இப்பயிற்சிகள் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளை 98947 77931, 99407 33918, 96888 08853, 86677 58280 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
தருமபுரி, மே 27-அரூர் அருகே மான் வேட்டையாடிதாக இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.தருமபுரி மாவட்டம், அரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அ.பள்ளிப்பட்டி எனுமிடத்தில் மொரப்பூர் வனச்சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் வாகன தனிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் மான் வேட்டையாடி அதன் இறைச்சிகளை இருவர் எடுத்துச் செல்வதுதெரியவந்தது. இதுகுறித்த விசாரணையில், தருமபுரிமாவட்டம், ஆவாரங்காட்டூரைச் சேர்ந்த சந்திரன் மகன்ஞானசேகரன் (30), மல்லாங்குட்டையைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராமு (40) ஆகியோர் என்பது தெரியவந்தது.இதையடுத்து, பிடிபட்ட இருவரையும் வனத்துறையினர் கைது செய்து தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வனவிலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக ஞானசேகரன் ராமு ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.