tamilnadu

img

மோடி மீண்டும் வரவே கூடாது என்பதே இலக்கு! கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் முழக்கம்

திருப்பூர், ஏப். 7-

தில்லியில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது என்பதுதான் எங்கள் இலக்கு என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் தொகுதி கோம்பைக்காடு லட்சுமி திருமணமண்டபத்தில் ஞாயிறன்று கொமதேக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியதாவது: ஒவ்வொரு ஊழியரும் நூறுபேரிடம் பிரச்சாரத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.இங்கு யார் போட்டியிடுகிறார்கள் என்பது முக்கியமல்ல, தில்லியில் யார் வந்துவிடக் கூடாது என்பதேநமக்கு முக்கியம். மோடி மறுபடியும் பிரதமராக வரக்கூடாது என்பதே நம் இலக்கு.


பொய் வாக்குறுதி மோடி

2014 ஆம் ஆண்டு குஜராத் மாடல் வளர்ச்சியைக் கொண்டு வருவோம் என்று சொல்லி மோடிக்கு வாக்கு பெற்றுக் கொடுத்தது நாங்கள்.அன்று பாஜக சொன்ன அத்தனையும் பொய்.குஜராத் மாநிலம், அகமதாபாத் நம் ஊர் மாதிரிகூடக் கிடையாது. பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்ததை நம்பி இந்தியாவில் மோடிக்கு பல கோடிப் பேர் ஓட்டுப் போட்டார்கள். ஆனால் இந்த ஐந்து வருட ஆட்சியில் என்ன செய்தார்கள்? அவர்கள் சொன்ன ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா திட்டம் என்ன ஆனது? தமிழ்நாட்டு விவசாயிகள் தில்லி வீதியில் நிர்வாணமாக நடந்தபோதுகூட அவர்கள் கோரிக்கை குறித்து மோடி திரும்பிப் பார்க்கவில்லையே! அப்படிப்பட்டவர் கட்சி தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்கக் கூடாது. நம்மை திசை திருப்ப அவர்கள் தேவையில்லாமல் பல விசயங்களைப் பேசுவார்கள். அதை கண்டுகொள்ளக் கூடாது. பாரதிய ஜனதாவும், அதிமுகவும் பலஅரசியல் சூழ்ச்சிகளைச் செய்வார்கள். அதை எதிர்த்து நாம் நம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாம் நன்றாக இருப்பதற்கு மோடி வரவே கூடாது.


மறக்க முடியாத இரு விசயங்கள்

ஐந்தாண்டு கால ஆட்சியில் மோடி தொழில் முன்னேற்றத்துக்கு ஏதாவது முயற்சி எடுத்தாரா? எந்த விசயத்திலும் முன்னேற்றத்துக்கு அவர் ஒன்றுமே செய்யவில்லை. அவரது ஆட்சியில் மறக்க முடியாத விசயம் இரண்டே இரண்டுதான்.அதில் ஒன்று ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு. அதில் என்ன நடந்தது. தொழில் செய்யக்கூடிய, சாதாரண மக்களிடம் இருந்த பணம் முடக்கப்பட்டது. கள்ளப்பணம் பிடிக்கப்படும் என்று சொன்னார். ஆனால் அரசு வெளியிட்டபணத்தைவிட கூடுதல் பணம் வங்கிக்குக் திரும்பிவந்தது. இதன் மூலம் கள்ளப்பணம் நல்ல பணமாகமாற்றப்பட்டது. மூன்று மாதம் காலக்கெடுவுக்குப் பிறகும் 25 சதவிகிதம், 40 சதவிகிதம் என கமிஷன்அடிப்படையில் பழைய நோட்டுகளை மாற்றி புதிய ரூபாய்களைப் பெற்றுத் தந்தனர்.இப்படி 5 லட்சம் கோடி ரூபாய் மாற்றப்பட்டதுஎன்றால், அதில் கமிஷன் தொகை 30 சதவிகிதம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது,யாருக்குப் போய்ச் சேர்ந்தது? அமித் ஷாவுக்குப் போனதா? அருண் ஜெட்லிக்குப் போனதா? இந்த கேள்விக்கு பதில் இல்லை. இவர்களா ஊழல் செய்யாதவர்கள்? மோடி செய்த இரண்டாவது விசயம் ஜிஎஸ்டி கொண்டு வந்தது. இந்திய பொருளாதாரத்தில் சிறு அளவுக்குப் பணப் பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் சிறு, குறு தொழில் செய்வோர், வர்த்தகர்கள் பெருமளவு உள்ளனர். பணப்பரிவர்த்தனை என்பது முக்கியமான நடவடிக்கையாக இந்தியாவில் உள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சின்னச்சின்ன தொழில், வர்த்தக நிறுவனங்கள் சின்னாபின்னமாகிவிட்டன.


தோற்றவுடன் ஓடிய சிபிஆர்

செல்லா பண அறிவிப்பு, ஜிஎஸ்டியை பாரதியஜனதா அரசின் சாதனைகள் என்று சொல்லி சி.பி.ராதாகிருஷ்ணன் ஓட்டுக் கேட்கும் தைரியம் உண்டா? நாட்டின் பொருளாதாரத்தைக் குட்டிச் சுவராக்கிவிட்டது பாரதிய ஜனதா அரசு. ஒரு வயதான மூதாட்டி மோடி வரக்கூடாது, அவரைதோற்கடிக்க வேண்டும் என்று பிரச்சாரத்தின்போது என்னிடம் கூறினார். அந்த அளவுக்கு மக்களிடம் மோடி ஆட்சி மீது கோபம் உள்ளது.மோடி வரவே கூடாது, அவர் வருவதற்கான வாய்ப்பு கிடைக்கக் கூடாது. நமக்கு ஒரே லட்சியம்தான். மோடி கண்டிப்பாக வந்துவிடக் கூடாது. பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்றவுடன் கயிறு வாரியத் தலைவராக பதவியை வாங்கிக் கொண்டு கேரளாவுக்குப் போய்விட்டார். தோற்றாலும் மக்களுக்கு சேவைசெய்வதென்றால் இங்கேயே இருந்து பணியாற்றவேண்டியதுதானே? இப்போது தேர்தல் என்றவுடன் திரும்ப இங்கே வருகிறார்.


அதிமுக கோட்டைக்கு முடிவு 

இப்போது எந்த தொழிலும் நல்லா இல்லை. யாரிடமும் பணம் இல்லை. தொழில் மோசமாக இருப்பதே இதற்கு காரணம். கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்த தேர்தலோடு அதிமுக கோட்டை முடிவுக்கு வந்துவிடும்.கழுதையை நிறுத்தினால்கூட காசு கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்று சர்வாதிகாரம், அகங்காரத்துடன் அதிமுகவினர் கூறினர். அவர்களது அகங்காரம் அத்தனையும் நொறுங்கப் போகிறது.நம் நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். மோடி எதிர்ப்பு பலமாக இருக்கிறது. எனவே அவர் தோற்க வேண்டும். ஆனால் நமக்கு எதிரான சூழ்ச்சி கொஞ்ச நஞ்சமல்ல. 


பி.ஆர்.நடராஜனை வெற்றி பெற வைப்போம்

இந்த முறை நம் குறிக்கோள் தில்லிக்கு நாம் போய்ச்சேர வேண்டும். அப்போதுதான் நாம் பலவிசயங்களைச் சாதிக்க முடியும். அதற்காக சரியான கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறோம். நேர்மையான, எளிமையான வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை வெற்றி பெற வைப்போம்.பாஜக கூட்டணியை அதிமுகவினரே விரும்பவில்லை. பாஜக கூட்டணி என்று அதிமுக அறிவித்தவுடன் அவர்களது 1 லட்சம் வாக்குகள் மாறிப் போய்விட்டது. எனவே நாம் வெற்றி பெறகடுமையாக பாடுபடுவோம். மக்களிடம் நம் நோக்கத்தைச் சொல்லி நம் கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம். இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

;