tamilnadu

தபால் ஓட்டுக்களை செல்லாத ஓட்டாக்கும் முயற்சியா?

புதுக்கோட்டை, ஏப்.11- உறுதிமொழிப் படிவம் இல்லாமல் தபால் ஓட்டுக்கள் அனுப்பப்படுவதால் அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஓட்டுக்களை செல்லாத ஓட்டாக்குவதற்கு முயற்சிப்பதாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தேர்தல் அன்று அவர்களின் சொந்த ஊரில் வாக்களிக்க முடியாது. இதனால், வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன்பாக அவர்களுக்கு தபாலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டோடு இணைப்பாக உறுதிமொழிப் படிவமும்; இணைத்து வழங்கப்படும். இவர்தான் வாக்காளர் என்பதற்கான உறுதிமொழியை சம்மந்தப்பட்டவர்களின் மேல் அதிகாரிகள் உறுதியளித்து கையொப்பம் இட்டு வழங்குவதே உறுதிமொழிப் படிவம். அவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழிப் படிவத்துடன் செலுத்தப்படும் வாக்கு மட்டுமே செல்லத்தக்கது. உறுதிமொழிப் படிவம் இல்லாம் செலுத்தும்வாக்கு செல்லாது.இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட சில வாக்காளர்களுக்கு மேற்படி உறுதிமொழிப் படிவம் இல்லாமல் வெறும் வாக்குச் சீட்டை மட்டும்தபாலில் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் சரியானபதில் இல்லையெனவும் கூறப்படுகிறது. இதனால், தபால்ஓட்டுப்போட வேண்டிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும்மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து உறுதிமொழிப் படிவத்துடன் வாக்குச்சீட்டை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.