மக்கள் தலைவர் என்று அனைவரா லும் அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் எம்.செல்லமுத்து 1938 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதியன்று பிறந்தார். மொட்டையன் - வடுகம்மாள் என்ற பண்ணை அடிமை தம்பதியருக்கு மூத்த புதல்வரான அவர் தற்போதைய திருவா ரூர் மாவட்டம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நமசிவாயபுரம் கிராமத்திலிருந்து தனது இயக்கப்பணியை துவக்கினார். இவரின் எளிமையும் நேர்மையும் அப்போதைய கீழத்தஞ்சை மாவட்டத் தில் உள்ள இளைஞர்களை அவர் சார்ந்தி ருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் வெகுவாக ஈர்த்தது. இயக்கத்தில் இணைந்த அந்த இளைஞர்களை மார்க்சிய வழித்தடத்தில் நடைபோட வைப்பது, மக் கள் பிரச்சனைகளில் தலையிட வைப்பது, தாழ்த்தப்பட்ட, நலிவுற்ற மக்கள் மீது கனி வான அணுகுமுறையை மேற்கொள்ள வைப்பது போன்ற நடவடிக்கைகளை பயிற்றுவித்தார். இது அவரது செயல்பாட் டின் முக்கிய அம்சமாக அமைந்திருந்தன. தோழர் எம்.செல்லமுத்து மிக ஏழ்மை யான தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குடும்பத்தில் பிறந்து பண்ணை தொழிலாளி யாக வாழ்ந்தவர். தனது சிறு வயதிலேயே செங்கொடி இயக்கத்தில் சேர்ந்து தன்னு டைய உழைப்பால் படிப்படியாக உயர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநி லக்குழு உறுப்பினராகவும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் கட்சியின் மகத்தான தலை வர்களில் ஒருவராகவும் உயர்ந்தார். தோழர் பி.சீனிவாசராவ் தலைமையில் செங்கொடி இயக்கம் தென்பரையில் துவங் கிய பிறகு தஞ்சை மாவட்ட நிலப்பிரபுக் களின் ஒடுக்கு முறைக்கு முடிவுகட்டப்பட் டது. சவுக்கடி, சாணிப்பால் முறைகளுக்கு சாவு மணி அடிக்கப்பட்டது. இந்த பின்ன ணியில்தான் தோழர் செல்லமுத்து தன்னை செங்கொடி இயக்கத்தில் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் செங்கொடி இயக்கத்தில் இணைந்த பிறகு ஏராளமான விவசாய தொழிலாளர் களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். அவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மாடுமேய்க்கும் சிறுவனாக வளர்ந்து வலிவலம் தேசிகர் பண்ணையில் பண்ணை தொழிலாளியாக வேலை பார்த்தார். அவர் செங்கொடி இயக்கத்தில் சேர்ந்த பிறகுதான் மாற்றங்கள் ஏற்பட்டு பல்வேறு போராட்டங்களில் பல ஆயி ரக்கணக்கான மக்களை திரட்டி ஏராள மான போராட்டங்களை நடத்தினார். வலிவலம் தேசிகர் பண்ணையில் டிராக்டர் மறியல் போராட்டத்தின் போது இவரை காவல்துறையினர் வயலில் கீழே தள்ளி பூட்ஸ் காலால் மிதித்தனர். அதனால் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பே 60 வயதிலேயே அவரது மறைவுக்கு காரணமாகியது. ஏராளமான போராட்டங்களில் பலமுறை இவர் சிறை சென்றுள்ளார். இவரின் துடிப்பான இளமைக்கால செயல்பாடுகள் இன்றும் என்றும் நமக்கு வழிகாட்டும். திருவாரூர் சட்டமன்ற தொகுதியிலி ருந்து இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பி னராக தேர்வு செய்யப்பட்டார். இவரது எளிமையான வாழ்வு, இனிமையான பண்புகள், கனிவான அனுகுமுறைகள் போன்றவை மக்களிடம் மிக நெருக்கமாக பழக அடிப்படையாக அமைந்தன. மாவட்ட மக்களின் பாசமிக்க மக்கள் தலைவராக இவர் திகழ்ந்தார். இவர் பெரும்பாலும் கட்சி அலுவலகத்தையே இருப்பிடமாகக் கொண்டிருந்தார். மனைவி, மகன்களை பார்க்க ஊர்ப் பக்கம் அரிதாகவே செல்வார். அப்படி தனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்கே அர்ப்பணித்தார். கட்சி நலன், மக்கள் நலன் மட்டுமே அவரது சிந்தனையில் எப்போதும் குடிகொண்டிருந்தது.