சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான கட்சி பாஜக(!)
ஜி.கே.வாசன் உளறல்
தஞ்சாவூர், ஏப்.8-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் த.மா.கா வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:“மோடி அரசு நல்லரசாக மட்டுமல்ல, வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பிறகு வல்லரசாகவும்(?) மாற்றும் தன்மை பாஜக ஆட்சியாளர்களுக்கு உண்டு.(அப்படி என்றால் இதுவரைநடந்த நமது ஆட்சி எல்லாம் சும்மா தான் என்கிறாரா எனபாஜகவினர் முறைத்தபடி, இவர் என்ன சொல்ல வருகிறார்என நின்றனர்) மேலும் அவர் பேசுகையில், “மத்திய அரசுக்கு ஒத்த கருத்துடைய ஆட்சியாக புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆசியுடன், ஆட்சி செய்து வரும் அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது” என பாஜகவின் பினாமி ஆட்சி தான் என்பதை போட்டுடைத்தார். “ஜெயலலிதா தந்த திட்டங்களை விட, பல மடங்கு உயர்த்தி, தடம் புரளாமல் தமிழக மக்களுக்கு எடப்பாடி- ஓபிஎஸ் அரசு தந்து கொண்டிருக்கிறது” எனக்கூறி புளகாங்கிதம் அடைந்தார். மேலும் அவர் பேசுகையில்,“சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான கட்சி பாஜக கூட்டணி. பாஜக ஆட்சியில் நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது.எந்த கலவரமும் நடக்கவில்லை” என முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக பேசி விட்டு சென்றார். ஜி.கே.வாசனுக்கு அலங்கரிக்கப்பட்ட இரட்டைக் குதிரைகளோடு, கரகாட்டக் கலைஞர்களின் ஆட்டத்தோடு, வாணவேடிக்கைகள், கட்சிக் கொடி, தோரணங்களோடு வரவேற்புஅளிக்கப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் கண்களில்பட்டாலும் நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்விக் குறியே.
புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து மறியல் போராட்டம்
தஞ்சாவூர், ஏப்.8-தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம் கரம்பயத்தில் சிபிஎம் கிளை கூட்டம் எம்.தங்கராசு தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.ஜீவானந்தம் ஆகியோர் பேசினர். கிளை செயலாளர் ராமையன், குமாரசாமி, விதொசஒன்றிய துணைத் தலைவர் கே. மாரிமுத்து, கிளை நிர்வாகிகள் ராமையன், ஆர்.வினைதீர்த்தான், வி.வீரையன், திருமேனி, தனிக்கொடி உள்ளிட்ட 20 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தின் வெற்றிக்காக தீவிரமாக பாடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கரம்பயம் ஊராட்சியில் ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை நூறு குடும்பங்களுக்கு நிவாரணப் பெட்டகம் வழங்கப்படவில்லை. அதே போல் புயலால்பாதிக்கப்பட்ட வீடுகள், தென்னை மரங்களை இழந்த சிறு, குறுவிவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஒப்புக்கொண்டபடி, நிவாரணம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதைக் கண் டித்து ஏப்ரல் 26ஆம் தேதி கரம்பயத்தில் பட்டுக்கோட்டை- தஞ்சை சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது” என தீர்மானிக்கப்பட்டது.
ஒரத்தநாடு ஒன்றியத்தில் சிபிஎம் தெருமுனைக் கூட்டம்
தஞ்சாவூர், ஏப்.8-தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியத்தில் பொன்னப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வாக்குகள் கேட்டு தெருமுனை பரப்புரைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிபிஎம் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் என்.சுரேஷ் குமார் தெருமுனை பரப்புரைக் கூட்டத்தில் தொடங்கி வைத்துபேசினார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கோவிந்தராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.ரமேஷ், நிர்வாகிகள் ஏ.வெங்கடேசன், சமுதாயக்கனி, இந்திய வாலிபர் சங்க நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை ஏசுராஜா, திங்கள் கண்ணன்,ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர். தும்பத்திக்கோட்டை, பருதியப்பர்கோயில், பொன்னப்பூர் கிழக்கு-மேற்கு, குடமாங்கொல்லை, மூர்த்தியம்பாள்புரம், நார்த்தேவன் குடிக்காடு உள்ளிட்ட இடங்களில் தெருமனைப் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.