tamilnadu

img

தமிழக அரசு கோரும் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்....

கடலூர்;
புயல் நிவாரணத்திற்காக தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி யுள்ளார்.

கடலூரில் டிசம்பர் 9 புதன்கிழமை யன்று கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 2000 ஆம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டம் 9 முறை புயல், பெருவெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களை தொடர்ந்து எதிர்கொண்டதால்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது அமைச்சர்கள் பார்வையிடுவதும் நிவா
ரண உதவி வழங்குவதுமாக மட்டுமே இருக்கிறது. வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் தொலைநோக்கு பார்வையில்  நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். பெய்யும் மழை நீரை  சேமிக்க கொள்ளிடத்தில் 7 கதவணைகள் அமைக்க வலியுறுத்தப்பட்ட நிலையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ஒரு கதவணை அமைக்க நடவடிக்கை எடுத்தார். அந்தப் பணி தான்  ரூ.400 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மற்ற கதவணைகளையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர்களுக்கு உரிய இழப்பீடு 
 1.65 டிஎம்சி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 0.852  டிஎம்சி மட்டுமே தேக்க முடிகிறது. எனவே, வீராணம் உள்பட எல்லா  ஏரிகளையும் தூர்வார வேண்டும்.  மாவட்டத்தில் சுமார்1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல்பயிர் கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நெல் பயிரை பார்ப்பது பச்சைபசேலென தெரிந்தாலும் விளைந்தால் அவை பதராகத்தான் இருக்கும். எனவே, நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், வாழைக்கு ரூ.50 ஆயிரமும், ஒவ்வொரு பயிருக்கும் உரிய இழப்பீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மத்திய அரசின் பாராமுகம்
கடந்த புயல் வெள்ளத்தின் போது மாநில அரசு, மத்திய அரசிடம் 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கேட்டது. ஆனால் கொடுத்ததோ வெறும் 400 கோடி ரூபாய்தான். அதேபோல் கடந்த வறட்சியின்போது 19 ஆயிரம் கோடி ரூபாய்மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டதுஆனால் மத்திய அரசோ ரூ. 350 கோடிஅளவிற்கு கொடுத்தது. இதுபோன்று மத்தியக்குழு வருவதும், பார்வையிடு வதும், மத்திய அரசிடம் அறிக்கை அளிப்பதும் ஒரு ஏமாற்றுவேலையாகவே தெரிகிறது.பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கவில்லை. வறட்சி, புயல் பாதிப்புகளுக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரும் நிதியில் 10 சதவீதம் மட்டுமே வழங்குகிறது. பின்னர் எதற்காக மத்தியக்குழுவினை அரசு அனுப்பி வைக்க வேண்டும். எனவே, புயல், மழை பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்.

விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிடுக 
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தாலே தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். வீடு இடிந்தால் மட்டுமே நிவாரணம் என்று சொல்லக் கூடாது. சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவசாயிகளை பாதிக்கும். இதேபோன்று சென்னை-திருவள்ளூர்-பெங்களூர் சாலைக்காக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த இரு திட்டங்களையும் அரசு கைவிட  வேண்டும். விவசாயத்தை அழித்துவிட்டுத்தான் வளர்ச்சி என்றால் அது  யாருக்கான  வளர்ச்சி. பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுதான் அரசின் வேலையா ? 

விவசாய நலன்களை காவுகொடுத்த அதிமுக அரசு
தில்லி முதல்வர் கெஜ்ரிவால், காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி போன்றோரையும் வீட்டுக்காவலில் வைத்திருப்பது மத்திய அரசின் அராஜகத்தின் உச்சமாகும். நாடாளுமன்ற ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு பெரிய அளவிலான நாடாளுமன்ற கட்டிடம் தேவையா? வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டதால் இப்போராட்டம் நீடித்துக் கொண்டே செல்லும். அதேநேரத்தில் இதேபோன்ற சட்டத்தை தமிழகத்திலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளனர். மத்திய அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற்றாலும் தமிழகத்தில் இச்சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலை உள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காகவே கோடிக்கணக்கான விவசாயிகளின் நலனை அதிமுக அரசு காவு  கொடுத்து விட்டது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு அவசியம்என்ன?
தமிழகத்தில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமென்ன?. சாதி வாரியான புள்ளி விபரங்கள் வேண்டுமெனில் மத்திய அரசு 2011 ஆம் ஆண்டு எடுத்த புள்ளி விபரங்களை கோரி பெற்றுக் கொள்ளலாமே. இதன் பின்னணியில் அதிமுக பாமகவுடன் வரும் தேர்தலில் சமரசம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற நோக்கமே தவிர வேறு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மு.மருதவாணன், பி.கருப்பையன், வி.உதயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.தமிழரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

;