தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழக முதலமைச்சர் சிறப்பு குறைதீர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விநாயகா திருமண மண்டபத்தில் சனிக்கிழமை அன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் வரவேற்றுப் பேசினார். சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு முன்னிலை வகித்தார். நலத்திட்ட உதவிகளை வழங்கி மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் சிறப்புரையாற்றினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக வேளாண்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு விழாப் பேருரையாற்றினார்.
இவ்விழாவில் வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனை மற்றும் பட்டா மாறுதல் 127 நபர்களுக்கும், தலா 35 கிலோ அரிசி உத்தரவு 49 நபர்களுக்கும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 1000 வீதம் 175 பயனாளிகளுக்கும் மற்றும் மாநில வங்கி நேரடி குழு, மகளிர் சுய உதவி குழு கடன், சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறை, சுனாமிக்குப் பிந்தைய நிலைத்த வாழ்வாதார திட்டம், வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 430 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 59 லட்சத்து 54 ஆயிரத்து 737 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி. திருஞானசம்பந்தம், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.மதியழகன், மாணவரணிச் செயலாளர் கோவி.இளங்கோ, முன்னாள் மாநில கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன், ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி உ.துரை மாணிக்கம், சேதுபாவாசத்திரம் சிவ.மதிவாணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நன்றி கூறினார். இதே போல் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.