tamilnadu

அரியலூர் ,திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி  

அரியலூர், ஜூன் 15- அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 17-ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் இலவசமாக பாடக் குறிப்புகளும், மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.  விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு பதிவட்டை, தேர்விற்கு விண்ணப்பம் செய்த விண்ணப்ப நகலுடன் அன்றைய தினத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற ஊழியர் பணியிடங்கள்  

திருவாரூர் ஜூன் 15- திருவாரூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள கணினி இயக்குபவர்-4, நகல் ஆராய்வாளர்-3, படிப்பாளர்-1, முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்-5, இளநிலை கட்டளைப் பணியாளர்-7, ஒளி நகல் எடுப்பவர்-5, அலுவலக உதவியாளர்-9, துப்புரவு பணியாளர்-1, இரவுக் காவலர்-7, மசால்சி-3 என பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 25-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்சாகமாக கடலுக்கு சென்ற மீனவர்கள்  

நாகப்பட்டினம், ஜூன்15- மீன்பிடித் தடைக்காலம் முடிவுற்ற நிலையில் நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த ஏப்.15 முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஜூன் 14 நள்ளிரவு 12 மணிக்கு தடைக்காலம் முடிவுற்றதால் விசைப்படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  மேலும் மீன்பிடித் தடைக்கால அரசு நிவாரணத் தொகை ரூ.5000 தொகையை உயர்த்தித் தர வேண்டும். தடைக்காலத்திலேயே அந்த நிவாரணத் தொகையை அரசு வழங்கிட வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.