tamilnadu

img

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க என்ன செய்யப் போகிறது மோடி அரசு? - கி.வரதராசன்

இன்று மத்திய பட்ஜெட்

சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு தமது புகழ் பெற்ற ஆவணமான கம்யூனிஸ்ட் அறிக் கையில் மார்க்சும் ஏங்கெல்சும் கீழ்கண்டவாறு கூறினர்: முதலாளித்துவம் “…..உற்பத்தி சாதனங்களை ஒரு சிலரிடத்தில் மையப்படுத்துகிறது. (அதன் விளைவாக) சொத்துக்களும் அபரிமிதமாக ஒரு சிலரின் கைகளில் குவிகிறது” (சிவலிங்கம் மொழிபெயர்ப்பு: பக்:47)

170 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட இந்த முக்கியமான அரசியல் பொருளாதார உண்மை இன்றளவும் தொடர்கிறது. நிகழ்கால முதலாளித்துவத்தில் ஒரு சிலரின் கைகளில் சொத்து குவிப்பு என்பது பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உண்மையில் முதலாளித்துவ வளர்ச்சியின் பிரிக்க முடியாத அம்சங்களில் முக்கியமானது ஒரு சிலரிடத்தில் சொத்து குவிப்பது ஆகும். இதன் பிரிக்க முடியாத  மற்றொரு அம்சம் மறுபுறத்தில் உருவாகும் கொடும் வறுமை ஆகும். இது உலகம் முழுதும் பொருந்துவது போல இந்தியா விற்கும் மிகவும் அதிகமாக பொருந்துகிறது. இன்னும் தெளிவாக சொல்வதானால் உலகிலேயே மிகவும் அசமத்து வம் உள்ள தேசமாக இந்தியா உருவாகியுள்ளது எனில் மிகை அல்ல. இதனை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆக்ஸ்ஃபோம் அறிக்கை மீண்டும் ஒரு முறை தெளிவாக்குகிறது.

ஆக்ஸ்ஃபோம் அறிக்கை கூறும் அதிர்ச்சி தகவல்கள்

 •  உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்களாக உள்ள வெறும் 26 பேரின் சொத்து கீழ்மட்டத்தில் உள்ள 380 கோடி பேரின் சொத்துக்கு சமமாக உள்ளது.
 • இந்தியாவில் மிகப்பெரிய 10% பணக்காரர்கள் தேசத்தின் செல்வத்தில் 77%த்தை ஆக்கிரமித்துள்ளனர். இன்னும் குறிப்பாக கூறுவதானால் வெறும் 1% பேரிடம் 52% செல்வம் உள்ளது.
 •  டாலர் பில்லியனர்கள் (7000 கோடிக்கும் அதற்கு மேலும் சொத்து வைத்திருப்பவர்கள்) எனப்படும் பெருங் கோடீஸ்வரர்கள் இந்தியாவில் 2000ஆம் ஆண்டு 7 பேர்தான் இருந்தனர். ஆனால் 2018ஆம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.
 •  2018-19ஆம் ஆண்டில் இந்த 119 பெரும் பணக்காரர்க ளின் சொத்து இந்திய தேசத்தின் 130 கோடி மக்களுக்கான பட்ஜெட் தொகையைவிட அதிகம்.
 •  ஒரு ஆடைதயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஒரு ஆண்டிற்கு ஈட்டும் வருமானத்தை ஒரு கிராமப்புற உழைப்பாளி ஈட்ட 941 ஆண்டுகள் ஆகும்.
 •  இந்தியாவின் பணக்காரர்கள் ஒவ்வொரு நாளும் ரூ. 2200 கோடி வருமானம் கொள்ளை அடிக்கின்றனர். முகேஷ் அம்பானி மட்டும் ஒரு நாளைக்கு ரூ.182 கோடி லாபத்தை தன் கணக்கில் சேர்த்துள்ளார்.

மறுபுறத்தில் சாதாரண மக்களின் நிலை என்ன?

 •  வேலை வாய்ப்புகள் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளன.
 •  விலைவாசி உயர்வு வானத்தை நோக்கி சீறிப் பாய்ந்த வண்ணம் உள்ளது.
 •  ஏராளமான சிறு தொழில்களும் சிறு வணிகர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 • விவசாயம் நட்டம் தரும் தொழிலாக மாறி வருகிறது.
 •  இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்து வருகிறது என உள்நாட்டு மற்றும் உலக பொருளாதார வல்லுநர்கள் அனைவரும் அபா யச் சங்கு ஊதுகின்றனர்.
 •  இந்தியாவில் 14 கோடி பேர் மீளமுடியாத கடன் வலை யில் சிக்கியுள்ளனர்.
 •  கிராமப்புறத்தில் நுகர்வோர் செய்யும் செலவு 8.8% வீழ்ச்சி அடைந்துவிட்டதாக அரசாங்கத்தின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன (தனக்கு பாதகமாக இருப்பதால் இந்த அறிக்கையை மோடி அரசாங்கம் முடக்கியுள்ளது). இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத நிலைமை.

பொறுப்பான எந்த ஒரு அரசாங்கமும் இந்த நெருக் கடியை தீர்க்க அனைத்து போர்க்கால  நடவடிக்கைகளை யும் எடுக்கும்.  ஆனால் மோடி அரசாங்கம் அத்தகைய நட வடிக்கைகளை எடுக்காதது மட்டுமல்ல; இப்படி ஒரு நெருக்கடி உருவாகியுள்ளது என்பதையே அங்கீகரிக்க மறுக்கிறது. 

மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும்

இந்த நெருக்கடியை தீர்க்க இடதுசாரிகள் சொல்லும் தீர்வு என்ன? மக்களிடம் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்தது தான் இந்த நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் என நாம் மட்டுமல்ல; பொருளாதார வல்லுநர்கள் உட்பட பலரும் கூறு கின்றனர். குறிப்பாக முட்டாள்தனமான பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் தான்தோன்றித்தனமான ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவைவரி) யும் முறைசாரா மற்றும் சிறு தொழில்களை நாசமாக்கிவிட்டன. வேலையின்மை கடு மையாக உயர்ந்தது. சில ஆண்டுகளில் இந்த நெருக்கடி பெரிய தொழில்களுக்கும் பரவியபொழுது பொருளாதாரம் படுகுழியில் வீழத்தொடங்கியது. 

வேலையின்மையும் சிறு தொழில்நசிவும் மக்களின் வாங்கும் சக்தியை குறைத்தது அல்லது அழித்தது. பெரிய தொழில்களும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை பறித்ததன் விளைவாக தமது கைகளில் வைத்திருந்த பணத்தை மக்கள் மேலும் இழந்தனர். இதன் விளைவாக மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக வீழ்ச்சி அடைந்தது. இது பொருட்களின் விற்பனையை பாதித்தது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை ஆகாததால் வணி கர்கள் புதிய பொருட்களை கொள்முதல் செய்ய மறுத்த னர். இதன் விளைவாக பொருள் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தன. ஒரு பகுதி நிறுவனங்கள் மூடப்பட்டன. இது வேலைவாய்ப்புகளை பறித்தது. வேலை இழந்தவர்கள் வாங்கும் சக்தியையும் இழந்தனர். செலவுகளை குறைத்த னர். இது மீண்டும் பொருள் விற்பனையையும் பொருள் உற் பத்தியையும் பாதித்தது. மேலும் ஆலைகள் மூடப்பட்டன; மீண்டும் வேலை வாய்ப்புகள் பறிபோயின. மக்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சி அடைந்தது.

இப்படி இது முடிவில்லா விஷச் சுழல் கொண்ட பொருளா தார சூறாவளியை உருவாக்கியது. இதில் சிக்கிக் கொண்ட மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகிவருகின்றனர். இந்த நிலையை முறியடிக்க மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதுதான் உடனடித் தேவை ஆகும். ஆனால் அரசாங்கம் இதனை செய்வதற்கு பதிலாக இதற்கு நேர் மாறான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலாளிகளுக்கு சலுகைகள் தரப்படுகின்றன. அவர்க ளின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. வருமான வரி குறைக்கப்படுகிறது. இதர வரிகளும் குறைக்கப்படுகின்றன. இதையெல்லாம் செய்தால் முதலாளிகள் மீண்டும் முதலீடு செய்வர்; அது நெருக்கடியை தீர்த்துவிடும் என மோடி அரசாங்கம் கணக்குப் போடுகிறது. ஆனால் மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்காமல் முதலாளிகள் என்ன உற்பத்தி செய்தாலும் எப்படி அவை விற்பனை ஆகும்? எனவேதான் நெருக்கடி தொடர்கிறது.

நெருக்கடியை தீர்க்க அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

 •  கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்த வேண்டும். பதிவு செய்ப வர்கள் அனைவருக்கும் வேலை தரப்பட வேண்டும். ஊதியம் நிலுவை வைக்காமல் உடனடியாக விநியோகம் செய்யப்பட வேண்டும். 
 •  இத்தகைய வேலை வாய்ப்பு திட்டம் நகர்ப்புறங்களிலும் உருவாக்க வேண்டும். இந்த திட்டம் மூலம் நகர்ப்புற உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள இயலும்.
 •  பெட்ரோல்/டீசல் விலையைக் குறைப்பதன் மூலமும் இதர நடவடிக்கைகள் மூலமும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
 •  ஜி.எஸ்.டி. முறையில் அடிப்படை மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் சிறு தொழில்கள் மற்றும் வணிகர்கள் சந்திக்கும் இழப்புகளை அகற்ற வேண்டும்.
 • மூடப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
 •  வேலை வாய்ப்புகளை குறைத்த பெரும் நிறுவனங்கள் நிலைமை சீரடைந்தவுடன் மீண்டும் ஊழியர்களை பணி அமர்த்த நிர்ப்பந்திக்க வேண்டும்.

ஒட்டு மொத்தத்தில் மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தும் உடனடியாக செய்ய வேண்டும். இதற்காக நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் அது குறித்தும் அரசாங்கம் இப்போதைக்கு கவலைப்படக்கூடாது. இதுதான் ஒரு மக்கள் ஆதரவு அர சாங்கம் செய்ய வேண்டிய குறைந்தபட்ச பணி. இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யவுள்ள தமது இரண்டாவது பட்ஜெட்டில் மோடி அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இதையெல்லாம் செய்வாரா? அறிவிப்புகள் வெளியிடுவாரா? மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து நெருக்கடியை மோடி அரசாங்கம் தீர்க்குமா என்பதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி. 

கட்டுரையாளர்: மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) 

;