tamilnadu

img

சுகாதாரம் அற்றது முதலாளித்துவம் - ஜி.ராமகிருஷ்ணன்

நவீன தாராளமயம் மக்கள் நலனை முன்னிறுத்தாமல், லாபத்தை மட்டுமே சிந்திக்கும். எனவே நவீன தாராளமயம் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாகாது. மக்கள் நலனை முன்னிறுத்தும் சோஷலிசம் தான் தீர்வு, விடிவு என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது. மருத்துவ சிகிச்சை வசதியையும், மருத்துவக் கல்வியையும் இலவசமாக அளிப்பதற்குப் பதிலாகக் கடைச் சரக்காக நீடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

கொரோனா தொற்றால் நமது நாடும் உலகும் உருக்கு லைந்துள்ள நிலையில், ‘சுயசார்பு இந்தியாவை’ உருவாக்கிட மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக மே 12 அன்று பிரதமர் மோடி அறிவித்தார். கைத்தட்டச் சொன்னவர், விளக்கேற்றிட வேண்டுகோள் விடுத்தவர், இம்முறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் ஒதுக்கீடு என அறிவித்தபோது, மக்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  

பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த அறிவிப்புகள் புஸ்வாணமாக ஆகிவிட்டன. பல பொருளாதார வல்லுநர்களும், தனியார் நிதிநிறுவனங்களும், நிதி அமைச்சரின் அறிவிப்புகளைக் கணக்குப் போட்டுப் பார்த்தால், மத்திய அரசு கஜானாவில் இருந்து செலவு செய்வது வெறும் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் வராது; அது (ஜிடிபி) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதம் தான் இருக்கும் என மதிப்பீடு செய்துள்ளனர். அறிவிப்புகள் எல்லாம் பெரும்பான்மையாக வங்கிகள் அளிக்க வேண்டிய கடன்கள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி அரசு வங்கிகளுக்கு அனுப்பிய நிதியாக இருக்கின்றன. 

ஊரடங்கால் வேலையிழந்து, பசியும் பட்டினியுமாக உள்ள இடம்பெயர் தொழிலாளர்கள், மாநிலங்களில் உள்ள முறைசாரா தொழிலாளர்கள், ஒட்டுமொத்த உழைப்பாளி மக்களுக்கான உடனடி நிவாரணமாக, நேரடிப் பணப் பரிமாற்றம் செய்யப்படவில்லை. “மத்திய அரசின் அறிவிப்புகளுக்கும், சுயசார்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதோடு, மத்திய அரசின் அறி விப்பான 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது ஒரு ஜும்லா” என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். 

நொறுங்கிப்போன கட்டமைப்பு

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று ஒரு லட்சத்துக்கு மேல் தாண்டிவிட்ட நிலையில், இதுவரை மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துவிட்ட நிலையில், எதிர்காலத்தில் இத்தகைய தொற்று ஏற்படாமல் மக்களைப் பாதுகாத்திட மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதற்கு பதிலளிக்கும் விதத்தில் எந்த ஓர் அறிவிப்பும் இல்லை, ஒதுக்கீடும் இல்லை. 

பிரதமர் மே 12 அன்று மக்களுக்கு ஆற்றிய உரையில், ஒரு கருத்தைச் சொன்னார். “நமது தேசத்தில் இதுவரை யில் நடைமுறையில் இருந்த நிறுவனங்களும், கொள்கை முறைகளும் கொரோனா தாக்குதலால் நொறுங்கிப் போனதை அறிந்துகொள்வதற்கு, இந்த நெருக்கடி நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.”  (ஒரு வேளை அதி காரிகள் தயாரித்துக்கொடுத்த பேச்சுக் குறிப்பில் இது இருந்திருக்கலாம்.) இதன் உண்மையான பொருள், நாட்டின் பொது சுகாதார ஏற்பாடுகளும், சுகாதார வசதியும், கொரோனா தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை; நொறுங்கிப் போய்விட்டது என்பதுதான். 

புறக்கணிக்கப்பட்ட பொதுச்சுகாதாரத்தை வலுப்படுத்து வது பற்றியோ, தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெரும்பான்மையாக கொரோனாவை எதிர்த்த போராட்டத்தில் விலகி நிற்பதைப் பற்றியோ, மத்திய நிதி அமைச்சர் ஏதும் சொல்லவில்லை. அரசு மருத்துவ மனைகளும், அரசு மருத்துவர்களும், அரசு செலிவிலி யர்களும், அரசு தூய்மைப்பணியாளர்களும் தான் கொரோ னாவை எதிர்த்த போராட்டத்தில் களத்தில் நிற்கிறார்கள். சுகாதாரத் திட்டங்கள் பற்றிப் பிறகு பரிசீலிக்கலாம் என்று மட்டும் கூறி நிதியமைச்சர் நழுவிவிட்டார்.

கைவிடப்பட்ட பொது சுகாதாரம்

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில், கொரோனா வால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஏன் அதிகமாகி வரு கிறது?  ஒன்பது கோடி மக்கள்தொகையுள்ள வியட்நாம், 288 பேர் பாதிக்கப்பட்டும், ஒருவர் கூட இறக்காமல் எப்படி சமாளிக்கிறது? இதுதான் இன்று உலகம் முழு வதும் எழுப்பப்பட்டு வரும் கேள்விகள். உலகின் எந்த ஒரு நாட்டையும் தனது நாட்டில் இருந்து குண்டு வீசித் தாக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணைகள் அமெரிக்கா விடம் உள்ளன. ஆனால், அதனிடம் கொரோனா சிகிச்சைக் கான வெண்டிலேட்டர்கள் இல்லை. மருத்துவர்களை, செவிலியர்களைப் பாதுகாப்பதற்கான கவசங்களும் போதுமான அளவில் இல்லை. இதுவே உண்மை நிலை.   

கொரோனா போன்ற கொள்ளை நோயைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான பொது சுகாதாரத் திட்டத்தை கைவிட்டு, மருத்துவ வசதியை பெரும்பான்மையாக தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளைக்கு விட்டுவிட்டதுதான் இதற்கு முக்கியமான காரணம். அமெரிக்காவில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலும், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும், நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் துவங்கிய பிறகு- அதாவது கார்ப்பரேட்டுகளின் லாபம், அதன் மூலம் முதலாளித்துவ வளர்ச்சி என்ற கொள்கை அமலாக்கம் துவங்கிய பிறகு - பொது சுகாதாரம், பொதுமருத்துவம், பொதுக்கல்வி என்பதெல்லாம் புறக்கணிக்கப்பட்ட விஷயங்களாகி விட்டன. 

கஜகஸ்தான் பிரகடனம்

1978ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் முன்முயற்சியில், இன்றைய கஜகஸ்தான் நாட்டின் (முன்னாள் சோவியத் யூனியன் நாடு) அல்மா-அட்டா நகரத்தில், சர்வதேச அளவிலான மாநாடு நடந்தது. அதில் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கலந்து கொண்டன. உலக அளவில் அனைத்து நாடுகளும், அனைத்துப் பகுதி மக்களுக்கும், 2000 ஆம் ஆண்டிற் குள் இலவச சுகாதார வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என இந்த மாநாடு பிரகடனம் செய்தது. 1981ஆம் ஆண்டில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், அடுத்த இருபது ஆண்டுகளில், அதாவது 2000 ஆண்டுக்குள் அனைவருக்கும் இலவச சுகாதார வசதி ஏற்படுத்தித் தருவோம் என்று கூறினார். இருபது ஆண்டுகளில் இது நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல, இந்த நாற்பது ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த பாஜகவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட பிரகடனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

“நலவாழ்வு என்பது வெறும் நோயில்லா நிலை என்றில்லாமல், முழுமையான உடல், மன, சமூக நலம் எனும் அடிப்படை மனித உரிமையாகும். ஆரம்ப சுகாதார வசதிகள் என்பது, 1) தனிநபர் அளவிலும், சமூக அளவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 2) நோய்த்தொற்று ஏற்படாமல், நோயுறாமல் தடுக்கும் நட வடிக்கைகளை மேற்கொள்ளுதல், 3) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச்சிகிச்சை அளித்தல் மற்றும் 4) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உள்ளிட்டு அனைத்தையும் அரசு இலவசமாக அளித்தல் ஆகியவற்றின் வாயிலாக, சமூகத்தின் முக்கிய பிரச்சனை களுக்குத் தீர்வு காண்பது” என்பதே அந்த மாநாட்டின் பிரகடனம். இந்தப் பிரகடனத்தை கியூபா, வியட்நாம், சீனா உள்ளிட்ட சோஷலிச நாடுகள் அமலாக்கின. ஆனால், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளில் இந்தப் பிரகடனம் அமலாக்கப்படவில்லை. 

சொற்பமான நிதி ஒதுக்கீடு

இப்போதும், இந்தியாவில் மத்திய அரசு மருத்துவம் மற்றும் சுகாதார வசதிக்காக ஒதுக்கீடு செய்யும் நிதி என்பது, ஜிடிபியில் ஒரு சதவிகிதம் தான். பெரும்பாலான மாநில அரசுகளும் போதுமான நிதிஒதுக்கீடு செய்வ தில்லை. மருத்துவத்திற்கான ஒதுக்கீட்டை மூன்று சதவிகித மாகவாவது உயர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அதை இதுவரையில் மத்தியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் ஏற்கவில்லை.  இங்குதான், இந்திய மாநிலங்களில் கேரளாவால் கொரோனா தொற்றை  எப்படிச் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடிந்தது என நாம் பார்க்க வேண்டும். கேரளாவில் பொதுச் சுகாதாரத்துக்கு ஒதுக்கீடு செய்யும் நிதி, தனி நபர் அளவு களில், ரூ. 2092 ஆக இருக்கிறது (2017-18). பீகார் போன்ற மாநிலங்களில் இது ரூ.690 ஆக மட்டுமே இருக்கிறது. பெரும்பாலான இந்திய மாநிலங்களில் பொதுச் சுகாதா ரத்துக்கான ஒதுக்கீடு பீகார் போலக் குறைவாக இருப்ப தால்தான், அவற்றால் கொரோனா தொற்றைக் கட்டுப் படுத்துவதில், சிகிச்சை அளிப்பதில் திறம்பட செயல்பட முடியவில்லை.  

அதேபோல் உலக அளவில் பார்த்தால், அமெரிக்கா வுக்கு அருகில் உள்ள கியூபா, ஒரு சின்னஞ்சிறிய நாடாக இருந்தாலும், அங்கு குழந்தை மரண விகிதம் (ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், எவ்வளவு குழந்தைகள் மரணமடைகிறார்கள் என்ற விகிதம்) ஐந்தாக இருக்கிறது; பணக்கார, முதலாளித்துவ அமெரிக்காவிலோ அது ஏழாக இருக்கிறது. சோஷலிச கியூபாவைக் காட்டிலும், முதலாளித்துவ அமெரிக்காவில் சுகாதாரம், நலவாழ்வு, மருத்துவ வசதி மோசமாக இருக்கிறது என்பதைதான் இந்தத் தரவு வெளிப்படுத்துகிறது. இந்திய அளவில் பார்த்தால் அகில இந்திய சராசரி 34 ஆக இருக்கும்போது கேரளாவில் பத்தாக உள்ளது.   இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருக்கும் கேரளாவையும், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் சோஷலிச நாடுகளான கியூபாவையும், வியட்நாமையும் உலகமே பாராட்டுகிறது. இதற்கு காரணம், அவை சுகாதாரம் மற்றும் மருத்துவத்தை மனித உரிமையாகப் பார்க்கும் அணுகுமுறைதான். 

இன்றைக்கு, இந்தியாவில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 3000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள கொடுமையான சூழலில்கூட, மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு எனக் கண்துடைப்புக்காக சொல்கிறதே ஒழிய, அதில் பொது சுகாதாரத்தையும், மருத்துவ வசதிகளையும் மேம்படுத்துவதற்காக இவ்வளவு ஒதுக்குகிறோம் எனப் பிரதமரோ, நிதியமைச்சரோ வாய்திறக்கவில்லை. 

இரண்டு விதமான அணுகுமுறைகள்

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் இரண்டு வகைப்பட்டவை. 1) மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 2) பொ ருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களைக் காப்பாற்று வது, பொருளாதாரத்தை மீட்பது என கொரோனா நிவாரண நடவடிக்கைகளும் இரண்டு வகைப்பட்ட செயல்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும்.  தாராளமயக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் பொது சுகாதாரம், பொது மருத்துவம், பொதுக் கல்வியின் அவசியம் புரியாது. சோஷலிசப் பார்வையுடன் அணுகி னால் புரியும். முன்னது கார்ப்பரேட்டுகள் நலன், முதலா ளித்துவத்தின் மீதுள்ள பற்று, பின்னது மக்களின் மீதும், மனிதகுலத்தின் மீதும் உள்ள பரிவு, பாசம். 

ஆனால், இந்த இரண்டு விஷயங்களிலும் மத்திய அரசு என்ன செய்கிறது? முதலாவதாக மக்களைக் கைவிட்டு விட்டது. மக்களைப் பாதிப்பில் இருந்து காப்பாற்ற, நோய்த்தடுப்பு, சிகிச்சை நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நோய்த்தடுப்பு, நோய்சிகிச்சை இரண்டும் சேர்ந்ததுதான் பொது சுகாதாரம். அதை மேம்படுத்த வேண்டும். இரண்டு அம்சங்களில் கொரோனா பேரிடர் காலத்தில்கூட நோய்த்தடுப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை. இந்தியாவில் மருத்துவச்சிகிச்சைக்கு ஆகும் செலவில் 78 சதவிகிதம் மக்கள் செலவு செய்கின்றனர். அந்த அளவுக்கு மருத்துவ சிகிச்சை தனியாருக்குப் போய்விட்டது. நோய் சிகிச்சை என்பது கார்ப்பரேட் மருத்துவ மனைகளாகிவிட்டது. மக்கள் நலவாழ்வு என்பது சாத்திய மில்லை என்ற சூழலை அரசு உருவாக்கிவிட்டது. அடுத்து, வேலையிழந்து வாடும் மக்களுக்கு, பண உதவி செய்ய வேண்டும். இவை எதையும் மத்திய அரசு செய்யவில்லை.

இரண்டாவதாக, சரியும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திட, பெருமுதலாளிகளை, கார்ப்பரேட்டுகளை, அவர்களின் ஆலைகளை மட்டும் காப்பாற்றினால் போதும் என நினைக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்யும் உழைக்கும் மக்கள் நலனைப் பாது காக்க மறுக்கிறது.  மக்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை; பெரு முதலாளிகளும், அவர்களுடைய தொழிற்சாலைகளும் லாபமீட்டினால் போதும் என்ற மத்திய அரசின் அணுகு முறையினால் தான், கொரோனா தடுப்பு நடவடிக்கைக ளிலும் சரி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொரு ளாதாரத்தைப் புனரமைப்பதிலும் சரி - பெரும் தோல்வி யைக் கண்டுள்ளது. 

எதிர்காலம் எது?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, எதிர்காலத்திலும் கொரோனா போன்ற தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்காகவும், நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு மருத்துவச்சிகிச்சை அளிப்பதற்காகவும், பொதுச்சுகாதாரம் மற்றும் மருத்துவ உட்கட்டமைப்புகளில் மத்திய அரசு முதலீடு செய்யவே இல்லை என்பது எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது. 

19ஆம் நூற்றாண்டிலேயே இங்கிலாந்தில் தொழி லாளர் குடியிருப்புகளில் தொழிலாளர்களின் வாழ் நிலையை ஆய்வுசெய்த ஏங்கல்ஸ், தொழிலாளர்கள் நெருக்கமாகக் குடியமர்த்தப்பட்டிருப்பதும், அப்பகுதிகள் காற்றோட்டமில்லாமல், சுகாதாரமற்ற முறையில் வைக்கப் பட்டிருந்ததாலும் நோய்த்தொற்று ஏற்படுகிறது எனவும், அதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் உழைக்கும் மக்கள்தான் எனவும் குறிப்பிட்டிருந்தார். ஏங்கல்ஸினு டைய கூற்று சுகாதார வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே. 1918 ஆம் ஆண்டு, உலகை உலுக்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ ரஷ்யாவைப் பாதித்தபோது, லெனின், “ஸ்பானிஷ் ஃப்ளூவை ஒழிக்கவில்லை என்றால், அது சோஷலிசத்தை ஒழித்துவிடும்” எனக் கூறியிருக்கிறார். இதனடிப்படையில் தான், பொதுச்சுகாதாரம் என்ற திட்டத்தை வகுத்து, உலகிலேயே முதன்முதலாக லெனின் தலைமையிலான சோவியத் யூனியன் மக்களைப் பாதுகாத்தது. இந்தப் பாரம்பரியத்தில் தான் தற்போது சோஷலிச நாடுகளும், கேர ளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசும் பயணிக் கின்றன.  

ஆனால், நவீன தாராளமயம் மக்கள் நலனை முன்னி றுத்தாமல், லாபத்தை மட்டுமே சிந்திக்கும். எனவே நவீன தாராளமயம் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாகாது. மக்கள் நலனை முன்னிறுத்தும் சோஷலிசம் தான் தீர்வு, விடிவு என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது.  

மருத்துவ சிகிச்சை வசதியையும், மருத்துவக் கல்வியையும் இலவசமாக அளிப்பதற்குப் பதிலாகக் கடைச் சரக்காக நீடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

கொரோனா ஏற்படுத்திய கசப்பான அனுபவத்திற்குப் பிறகு, பொது சுகாதாரம், பொதுமருத்துவம், பொதுக்கல்வி உள்ளிட்ட மாற்றுக்கொள்கைக்கு மக்கள் குரல் எழுப்பு வார்கள், கிளர்ந்தெழுவார்கள்.

கட்டுரையாளர் : அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

 


 

;