tamilnadu

img

இன்றைய வேலைநிறுத்தம் இளைஞர்களுக்கானது, ஏன்? - எஸ்.பி.ராஜேந்திரன்

21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டின் நிறைவுக் கட்டத்தில் உலகம் நுழைந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் உலகம் முழுவதிலும் வர்த்தகப் போரையும் ராணுவ யுத்தங்களையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிற முதலாளித்துவ எதேச்சதிகார சக்திகள் ஒரு புறமும்; வேலைநிறுத்தங்களையும் இடைவிடாத போராட் டங்களையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிற பாட்டாளி வர்க்கம் மறுபுறமும் என முதலாளித்துவத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற் கும் இடையிலான முரண்பாடு மேலும் மேலும் கூர்மை யடைந்து வருகிறது. உலகின் ஒட்டுமொத்த செல்வத்தில் 80சதவீதத்திற்கும் அதிகமான வளங்களையும் செல்வங்களையும் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் வெறும் ஒரு சதவீதமாக இருக்கிற பெரும் கார்ப்பரேட் மகா கோடீஸ்வரர்கள் தங்கள் கைகளில் குவித்திருப்பதும்; 450 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலும் கொடிய வறுமையில் துன்பத் துய ரத்தில் ஆழ்ந்திருப்பதுமே 2020ம் ஆண்டின் துவக்கத்தில் இப்பூவுலகம் காண்கிற காட்சி.

விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிற்கு உலகம் முழுவதிலும்  500 மகா கோடீஸ்வரர்களை புளூம்பெர்க்  பில்லியனர் இன்டெக்ஸ்  ஆய்வறிக்கை பட்டியலிட்டிருக்கிறது. இந்த 500 மகா கோடீஸ்வரர்களின் மொத்த செல்வக் குவிப்பு என்பது கடந்த 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019 இறுதியில் 25சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 1.2 டிரில்லி யன் டாலர் அதிகரித்து,மொத்தம்  5.9 டிரில்லியன் டாலர் அளவுக்கு செல்வவளங்கள் இந்த வெறும் 500 பேரின் கைகளில் குவிந்திருக்கின்றன.  உலகின் மிகப்பெரிய பணக்கார நாடு என்று கருதப்படுகிற அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் மதிப்பே 5.4 டிரில்லியன் டாலர்தான். அதைவிட அதிகம், இந்த கோடீஸ்வரர்கள் குவித்திருக்கும் செல்வம்.

யார் அந்த கோடீஸ்வரர்கள்? 

இவர்களில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார் பிரான்சின் பெர்னார்டு அர்னால்ட். 36.5 பில்லியன் டாலர் செல்வ வளங்களைக் கூடுதலாகச் சேர்த்துள்ள இவர்,  ஏற்கெனவே முதல் இடத்தில் இருந்து வருகிற வாரன் பப்பெட் என்ற மகா கோடீஸ்வரனின் 89.3 பில்லியன் டாலர் சொத்துக்களை விட அதிகமாக சேர்த்து 105 பில்லியன் டாலரை எட்டி, வாரன் பப்பெட்டை நான்காவது இடத்திற்கு தள்ளியிருக்கி றார். மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 22.7 பில்லியன் டாலர் கூடுதலாக ‘சம்பாதித்து’ 2வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். உலகின் சில்லரை வணிகத்தை அழித் தொழித்த அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிஜோஸ், தொடர்ந்து மூன்றாவது இடத்தை தக்க வைத்திருக்கி றார். உலக மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தைத் தனது வலையில் தொடர்ந்து விழ வைத்துக் கொண்டிருக்கிற பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர் பெர்க் 27.3 பில்லியன் டாலர் அதிகமாகச் ‘சம்பாதித்து’ மொத்தம் 79.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 5வது இடத்தைப் பெற்றிருக்கிறார்.  இப்படி 500 பேரின் சொத்துக்களையும் பட்டியலிட்டி ருக்கிறது புளூம்பெர்க் இன்டெக்ஸ்.

இந்த மகா கோடீஸ்வரர்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் டாலர் செலவழித்தால் கூட அதிகபட்சமாக 2700 ஆண்டு களுக்கு செலவழித்துக் கொண்டே இருக்கிற அளவுக்கு சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறார்கள் என்கிறார் பொருளாதார அறிஞர் பிராங்கோ மிலனோவிக்.

மேல் நோக்கி  உறிஞ்சப்படும் செல்வம்

சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து மேல் நோக்கி செல்வ வளங்கள் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகின்றன. இது திடீரென 2019ல் நடந்தது அல்ல. 2008ஆம் ஆண்டு அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட்டில்  துவங்கியப் பொருளாதார நெருக்கடி, உலகப் பொருளாதார நெருக்கடியாக மாறி, கடந்த 10 ஆண்டுகளாக அது தீவிரமடைந்து, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என உழைக்கும் மக்களில் ஒரு வரைக் கூட விட்டுவிடாமல் ஒட்டுமொத்தமாக செல்வ வளங்களையெல்லாம் மொத்தமாக சுரண்டி, உலகப் பெரு முதலாளிகளின் கைகளில் கொண்டு போய் சேர்த்திருக்கி றது. இதற்கான கட்டமைப்பைத்தான் கடந்த 10 ஆண்டுக ளாக உலகம் முழுவதிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் செய்திருக்கின்றன. இது பல வடிவங்களில் நடக்கிறது. இதைச் செய்வதற்காகத்தான் இந்தியா உள்பட பல நாடுகளில் எதேச்சதிகார ஆட்சிகள் அமைந்திருக்கின்றன.

சுருக்கமாகச் சொல்லப்போனால் மகா கோடீஸ்வரர்க ளாக இருக்கிற உலகப் பெருமுதலாளிகளின் கைகளில் குவிந்துள்ள செல்வம் உலகப் பாட்டாளி வர்க்கத்திற்குச் சொந்தமானது. அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய சமூக நலத்திட்ட உதவிகள் முற்றாக வெட்டப்பட்டுள்ளன; லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பறிக்கப்பட்டு வீதிக்கு விடப்பட்டுள்ளனர்; ஓய்வூதியங்கள் சூறையாடப்பட்டுள் ளன; சுகாதார பலன்கள் முடக்கப்பட்டுள்ளன; ஏற்கெனவே அளிக்கப்பட்ட பாதுகாப்பான, கௌரவமான வேலைவாய்ப்பு கள் எல்லாம் பகுதிநேர வேலைகளாக, தற்காலிக வேலைக ளாக, ஒப்பந்த கூலி வேலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இப்படி மாற்றப்பட்டதன் விளைவாக கடந்த 10 ஆண்டு களில் உலகின் ஒட்டுமொத்த செல்வ வளங்களில் அதிகபட்ச மானவை பெருமுதலாளிகளின் கைகளுக்கு மாற்றப்பட்டது மட்டுமல்ல, பாட்டாளி மக்கள் தங்களது உழைப்பைச் செலுத்து வதற்குக் கூட வேலை கிடைக்காத நிலை உச்சக்கட்டத்தை எட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வேலையின்மை உச்சகட்டம் 

2019 அக்டோபர் நவம்பர் கணக்குகளின்படி, உலக நாடு களில், அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவில் 29.1சதவீதம் அளவிற்கு வேலையின்மை மிகக் கடுமையாக இருக்கிறது; துருக்கியில் 14.2 சதவீதம்; கொலம்பியாவில் 11.8 சதவீதம்; பிரேசிலில் 11.2 சதவீதம்; கிரீஸில் 16.8சதவீதம்; ஸ்பெயினில் 14.2 சதவீதம் என வேலையின்மை உலகின் அனைத்துக் கண் டங்களிலும் இளைஞர்களை துரத்திக் கொண்டிருக்கிறது.  வளம்கொழிக்கும் பூமி எனக் கூறப்படுகிற ஐரோப்பிய மண்டலத்தில் 7.5சதவீதம் வேலையின்மைக் கொடுமை நிலவுகிறது. சமூக நலனுக்கு பெயர் பெற்ற நாடு என்றால் பிரான்சை உதாரணமாகக் கூறுவார்கள். அங்கு 8.5 சதவீதம் பேர் வேலையற்றவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. 3.5 சதவீதம் வேலையின்மை. கனடாவில் 5.9 சதவீதம்; சிலியில் 6.8 சதவீதம்; சைப்ரஸில் 7.1 சதவீதம்; பின்லாந்தில் 6.7 சத வீதம்; சுவீடனில் 7.3 சதவீதம்; குரோஷியாவில் 6.6 சதவீதம்; டென்மார்க்கில் 5.3; ஸ்லோவேகியாவில் 5.6 சதவீதம். 

இவை அனைத்துமே வறுமை தாண்டவமாடாத நாடுகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிற பிரதேசங்கள். ஆனால் வேலையின்மை இந்த நாடுகளை துரத்துகிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து பெருமுதலாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தங்களது லாபம் துளி யளவும் குறைந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளவும் கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதல்கள்; உலகம் முழுவதும் உழைப்பால் விளைந்த வளங்களையும் இயற்கை வளங்களையும் குறி வைத்து உருவாக்கி நடத்தி வருகிற போர்கள்; ஈவிரக்கமற்ற சுரண்டல்கள் - இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உழைக்கும் மக்களின் கைகளில் இருந்த சேமிப்பு உள்பட அனைத்தையும் பறித்துக் கொண்டு வீதியில் விரட்டியிருக்கிறது.

மலிவாக்கப்பட்ட உழைப்பின் மதிப்பு

கடுமையான வறுமை, பாதுகாப்பின்மை, ஆயுத மோதல் கள், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் புலம்பெயர்தல் - இவை அனைத்தும் உலகத் தொழிலாளர் சந்தையில் உழைப்பின் மதிப்பை மிகவும் மலிவானதாக மாற்றியி ருக்கிறது. உழைக்கத் தயாராக இருக்கிற பெரும்படை காத்தி ருக்கிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல், எந்த விதமான உரிமைகளும் இல்லாத வேலையாக மாற்றி, உழைப்பை மிக மிக மலிவான விலைக்கு - கூலிக்கு விற்பதற்கு தயாராக இருப்பவர்களாக மாற்றியிருக்கிறது உலக முதலாளித்துவம். இப்படி உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரும் உழைப்புப் படையில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

எத்தனை யெத்தனை இளைஞர்கள்

குறிப்பாக இளைஞர்களில் உலகத் தொழிலாளர் அமைப்பின் 2018 அறிக்கையின்படி, உலகம் முழுவதும் 750 லட்சம் (7.5 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பற்ற வர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக அரபு நாடுகளில் 30.6 சதவீதம்; ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 18.4சதவீதம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் 17 சதவீதம்; தென்னாப்பிரிக்க உள்பட ஆப்பிரிக்க நாடுகளில் 50 சதவீதம் என இளை ஞர்கள் வேலைவாய்ப்பற்றவர்களாக வீதியில் விடப்பட்டி ருக்கிறார்கள். உலகம் முழுவதும் 15 வயது முதல் 29 வய துக்குட்பட்ட இளைய தலைமுறையினரில் 25 சதவீதம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் கல்வியோ, தொழிற்பயிற்சி யோ கிடைக்கப் பெறாமல் திக்கற்றவர்களாக விடப்பட்டிருக்கி றார்கள். இத்தகைய நிலையில்தான் பெருவாரியான இளை ஞர்கள் தங்களது சொந்த பூமியைவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைதேடி இடம்பெயர்கிறார்கள். உலகம் முழுவதும் வேலைதேடி புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 5.1 கோடிப் பேர், 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது கவனிக்கத்தக்கது. இவர்கள் அனைவரும் இந்தியா போன்ற வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்தியாவின் நிலை என்ன?

உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக எட்டியுள்ள வேலை யின்மை எனும் முதலாளித்துவ பயங்கரம், இந்தியாவில் 6.1 சதவீதம் என்ற அளவை எட்டியிருக்கிறது. 2017 - 18 தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள விபரம் இது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வேலையின்மை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இதற்கு முன்பு 1977-78ஆம் ஆண்டில் வேலையின்மை உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. 1999-2000, 2004-2005, 2009-10 போன்ற ஆண்டுகளில்  சுமார் ஒரு கோடி என்ற அளவில் இருந்த வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை, 2011-12ல் 1.08 கோடியாக அதிகரித்து, மோடியின் ஆட்சி துவங்கியபிறகு கடந்த ஆறாண்டு காலத்தில் ஜெட் வேகத்தில் பாய்ந்து 2.85 கோடியாக 2 மடங்காக அதிக ரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் வெறும் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் தான் உருவாக்கப்பட்டுள்ளன. 

தொழிலாளர் சந்தையில் நாளுக்கு நாள் வேலை யில்லா பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2017-18 கணக்கின்படி நகர்ப்புற தொழிலாளர் சந்தையில் மட்டும் 2.64 கோடி புதிய இளம் தொழிலாளர்கள் இணைந்துள்ளனர். தமிழகம் உட்பட பல மாநிலங்கள் 5 சதவீதத்திற்கும் அதிகமான வேலையின்மை விகிதத்தை கொண்டிருக்கின்றன. இந்த மாநிலங்களில் ஏற்பட்ட வேலை வாய்ப்பு வீழ்ச்சி இந்திய அளவில் வேலையின்மை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு காரணமாகி உள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலக விபரங்கள் தெரிவிக்கின்றன.

வேலைக்கு எடுக்காவிட்டால் கூலி கொடுக்கவேண்டிய தில்லை; வேலையில்லா பட்டாளம் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருப்பதைக் காட்டி, ஏற்கெனவே வேலை யில் இருப்பவர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொள்ள முடியும்; அதிக நேரம் உழைப்புச் சுரண்டலை அமலாக்க முடியும்; குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு வேலைநேரத்தை அதிகரித்து, குறைந்த செலவில் கூடுதல் உற்பத்தி செய்ய முடியும்; அதன்மூலம்  மேலும் மேலும் லாபம் குவிக்க முடியும் என்று முதலாளித்துவம் அதிதீவிரமான உழைப்புச் சுரண்டலை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. எனவே வேலையின்மை என்பது  முதலாளித்துவம் உற்பத்தி செய்திருக்கிற பயங்கரமான சுரண்டல் ஆயுதம்.

ஜனவரி 8 பொது வேலைநிறுத்தம் 

எனவே வேலையின்மைக்கு எதிராக, புதிய புதிய சுரண்டல் வடிவங்களுக்கு எதிராக உலகப் பாட்டாளி வர்க்கம் உலகெங்கிலும் இடைவிடாத போராட்டங்களை விரிவு படுத்திக் கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உலக முதலாளித்துவத்திற்கு எதிரான உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான யுத்தத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 8 அன்று இந்திய தேசமே ஆர்த்தெழுகிறது. கோடிக்கால் பூத மென எழும் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக, இந்திய இளைஞர்களும் எழுகிறார்கள். ஜனவரி 8 பொது வேலைநிறுத்தத்திற்கு தங்களது ஒருமைப்பாட்டைத் தெரி விக்கிறார்கள். இந்திய தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம் இந்திய இளைஞர்களுக்கான போராட்டம். 

அடிப்படையில் பொருளீட்டுவதற்கான வேலை கொடு என்ற போராட்டம் பொருளாதார கோரிக்கைக்கான போராட்ட மாக இருக்கலாம். ஆனால் தொழிலாளர்களின் பொருளா தார போராட்டங்கள், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தின் ஒரு பகுதி என்கிறார்  மாமேதை லெனின். ‘‘துவக்கக் கட்டத்தில் பொருளாதாரப் போராட்டம் நடைபெறும். இது தொழிலாளர் குடும்பங்களின் உடனடி நிலைமையை மேம்படுத்துவதற்கான போராட்டம். இத்தகைய போராட்டங் கள்தான். முதலாளித்துவத்தின் ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கு ஆளாகியிருக்கும் கோடானுகோடி மக்களின் பின்தங்கிய நிலைமையிலிருந்து முன்னேறுவதற்கும் அவர்களது உணர்வலைகள் எழுச்சி பெறுவதற்கும் துவக்கப்புள்ளியாக இருக்கின்றன; அவர்களுக்கு சமூகத்தைப் பற்றிய உண்மை யான கல்வியை அளிக்கின்றன; அவர்களை புரட்சிகர பாதை யினை நோக்கி அணிதிரட்டுகின்றன; இத்தகைய தொடர் போராட்டங்கள், கோடானு கோடி உழைப்பாளி மக்களை அரசியல் போராட்டப் படையாக மாற்றுகின்றன” என்கிறார் லெனின்.

எனவே இந்திய தொழிலாளி வர்க்கம் நடத்துகிற ஜனவரி 8 பொது வேலைநிறுத்தத்தில் முன்னணிப் படையாக இளைஞர்களும் களமிறங்குவோம்.



 




 

;