தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 22ம் தேதி முதல் 24ம் தேதிவரை பல்வேறு பகுதிகளில் இடியுடன்கூடிய மலை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை இருக்கும் என்றும் சென்னையில் நாளை மறுநாள் மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு உள் கர்நாடகா முதல் மத்திய இந்திய பெருங்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையை பொருத்த வரை வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இயல்பை விட வெப்பம் 2டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல்லில் மட்டும் 9செ.மீ மழையும் கொடைக்கானல் பகுதிகளில் 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.