tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-3 : சுதந்திரப்போரில் பங்கேற்காது பெருந்துரோகம்

நூரானி தனது நூலின் மூன்றாவது அத்தியாயத்தை இப்படி முடிக்கிறார்: “இந்து மகாசபையும் ஆர்எஸ்எஸ்சும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக, காங்கிரசை ஒழிக்க முடியாவிட்டாலும் அதை ஓரங்கட்டுவதற்காக பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்தன”. இதுவொரு முக்கியமான கணிப்பு. இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆங்கிலேயர்களை எதிர்க்காதது மட்டுமல்லாது அதை எதிர்த்துவந்த காங்கிரசை ஓரங்கட்டும் வேலையில் இறங்கியிருந்தார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய துரோகம்!

இந்த கணிப்பிற்கானை ஆதாரங்களை அடுத்த அத்தியாயத்தில் தந்திருக்கிறார். அதற்குள் போவதற்கு முன்பாக இந்தக் காலம் பற்றி ஆர்எஸ்எஸ் என்ன சொல்கிறது என்பதைக் கேட்டுக் கொள்வோம். அதனது அதிகாரப்பூர்வ இணைய தளம் rss.org கூறுகிறது: “ அனைத்து துறையிலான வளத்திற்கு மட்டுமல்லாது பாரதம் ஒரு சுதந்திரமான சுயாதிபத்திய தேசமாக இருப்பதற்கே ஒரு வலுவான, ஒன்றுபட்ட இந்து சமுதாயம் அவசியமாகும். சமூக ஒழுங்கமைவே தேசிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும். அந்த சவாலை எதிர்கொள்ளவே டாக்டர் ஹெட்கேவார் 1925ல் ஆர்எஸ்எஸ்சை அமைத்தார்”. ஆக ஆட்சியிலிருந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்க இந்த அமைப்பை உருவாக்கவில்லை. மாறாக இந்து சமுதாயத்தை வலுப்படுத்தவே இதை ஆரம்பித்தார். அப்படியெனில் அதன் எதிரி பிற மதத்தவரே. இந்த அமைப்பு எப்படி ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடும்?

போராடவில்லை என்பதை அடுத்து வரும் வாக்கியங்களில் அது கோடி காட்டியது: “சங்கின் வளர்ச்சி மற்றும் வலுவிற்கான அஸ்திவாரத்தைப் போட டாக்டர் ஹெட்கேவார் இரவு பகலாக பாடுபட்டார். இந்த 15 ஆண்டுகால பெரும் பணி அதற்குரிய விலையை கேட்டது. நோய்வாய்ப்பட்ட டாக்டர் ஹெட்கேவார் 1940 ஜுன் 21 ல் தனது 51வது வயதில் காலமானார்”. ஆக 1925 முதல் 1940வரை ஆர்எஸ்எஸ் சுதந்திரப் போராட்டம் எதிலும் பங்கேற்கவில்லை! பங்கேற்றிருந்தால் விடுவார்களா? டாம்டூம் படுத்தியிருப்பார்கள் அல்லவா. மாறாக, எப்படி அந்தக் காலத்தை லாவகமாகக் கடந்து போகிறார்கள் பாருங்கள்.

இவருக்குப் பிறகு தலைவராக வந்தவர் மாதவ் சதாசிவ கோல்வால்கர். அவரது காலத்தின் முதல் ஏழு ஆண்டுகளில் சுதந்திரப் போராட்டம் தொடர்ந்தது. அப்போதாவது அதில் பங்கேற்றதா ஆர்எஸ்எஸ்? அதுவே சொல்கிறது: “இந்து ராஷ்டிரம் எனும் கருத்தியலின் தர்க்க நியாயத்தையும் அதன் வரலாறு மற்றும் சமூகப் பின்புலத்தையும் ஸ்ரீ குருஜி கோர்வையாக எடுத்துரைத்தார். சாதாரண கிராமத்தார் மற்றும் நகர்ப்புற படித்தவர் என இரு சாராரையும் இது பற்றி புரிந்து கொள்ள வைத்து சங்கின் சித்தாந்த தளத்தை அகலப்படுத்தினார்”.நம்மை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்கள் வெளியேற வேண்டியதன் தர்க்க நியாயத்தை எடுத்துரைக்க வில்லை, இந்து ராஷ்டிரத்தின் நியாயத்தை போதித்து வந்தாராம். அப்படியெனில் சுதந்திரப்போராட்டம்? பங்கேற்றிருந்தால்தானே பேசுவார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த காந்தி படுகொலையைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் தடை.செய்யப்பட்டது பற்றி அடுத்து பேசுகிறது அந்த இணையதளம். ஆக, இந்த ஏழு ஆண்டுகளிலும் சுதந்திரப் போரில் பங்கேற்கவில்லை. மாறாக இந்து ராஷ்டிரம் எனும் தந்திரப் போரில் இறங்கியிருந்தது.

ஆய்வாளர் ராம் புனியானி தனது “மதம், அதிகாரம் மற்றும் வன்முறை” எனும் நூலில் ஆர்எஸ்எஸ் வெளியிட்டுள்ள ஹெட்கேவாரின் வாழ்க்கை வரலாற்று நூலிலிருந்து இந்தப் பகுதியைத் தந்துள்ளார்: “அரசின் சட்டங்களை மீறுமாறு மகாத்மா காந்தி 1930ல் அறைகூவல் விடுத்தார்.தண்டி யாத்திரை மேற்கொண்டு அவரே உப்பு சத்தியாகிரகம் நடத்தினார். இதில் சங் பங்கேற்காது என்று எல்லா இடங்களுக்கும் டாக்டர் சாகேப் (ஹெட்கேவார்) செய்தி அனுப்பினார். எனினும் தனிப்பட்ட முறையில் பங்கேற்க விரும்புவோருக்கு தடை விதிக்கப்படவில்லை. இதன் பொருள் சங்கின் பொறுப்புவாய்ந்த உறுப்பினர் எவரும் சத்தியாகிரகத்தில் பங்கேற்க முடியாது என்பதுதான்”. ஆக, அன்று எழுச்சியாக நடந்த ஒரு சுதந்திரப் போராட் டத்தில் பங்கேற்பதில்லை என்று ஆர்எஸ்எஸ் ஒரு கொள்கை முடிவு எடுத்திருந்தது.

1939ல் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. தங்களைக் கலந்து கொள்ளாமல் அதில் இந்தியாவைச் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாணங்களிலிருந்த காங்கிரஸ் அரசுகள் ராஜினாமா செய்தன. ஆனால் சாவர்க்கரோ வைஸ்ராய் லின்லித்கோவைச் சந்தித்து தனது உற்சாகமான ஒத்துழைப்பை நல்கினார். இந்த லின்லித்கோவோடு அவர் ஒப்பந்தம் போட்டிருந்த செய்தியை அறிவோம். அவரின் இந்த ஒத்துழைப்பு முன்மொழிவை வைஸ்ராய் லண்டனிலிருந்த இந்தியாவுக்கான மந்திரி ஜெட்லாண்டிடம் சொன்னதை எடுத்துக்காட்டியிருக்கிறார் நூரானி. “மேன்மை தாங்கியவரின் அரசு இந்துக்கள் பக்கம் திரும்ப வேண்டும், எங்களது ஆதரவோடு இயங்கவேண்டும் என்று சாவர்க்கர் கூறினார்” என்கிறது அந்தச் செய்தி.அதுமட்டுமல்ல “1940 ஆகஸ்டு 19ல்,

அரசின் நிர்வாகசபையில் இந்து மகாசபையினரை  இணைத்துக் கொள்ள வேண்டும் என்று லின்லித்கோ பிரபுவிடம் சாவர்க்கர் ஒரு பட்டியலைக் கொடுத்தார். அதில் மூஞ்சே மற்றும் ஷியாமபிரசாத் முகர்ஜியின் பெயர்கள் இருந்தன. இந்த ஷியாமபிரசாத்தான் பின்னாளில் ஜனசங்கத்தை துவக்கியவர். ‘முஸ்லிம் லீக்கை விட அதிக ஆட்கள், பொருட்கள், ஞானம் ஆகியவற்றை வழங்க இந்துக்களால் முடியும்” என்று வைஸ்ராய்க்கு செப்டம்பர் 26ல் கடிதம் எழுதினார் மூஞ்சே” எனும் ஆதாரத்தையும் தந்துள்ளார் நூரானி. இப்படியாகப் பட்டவர்கள் காங்கிரஸ் நடத்திய 1942 ஆகஸ்டு போராட்டத்தை, அந்த “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை ஆதரித்திருப்பார்களா?

இல்லை, இந்து மகாசபையும் ஆர்எஸ்எஸ்சும் அதை எதிர்த்தது மட்டுமல்லாது அந்தப் போராட்டத்தை ஒடுக்காறு அரசுக்கு ஆலோசனை கூறியது. வங்காள கவர்னர் சர் ஜான் ஹெர்பர்ட் டிற்கு ஷியாம பிரசாத் முகர்ஜி எழுதிய கடிதத்தில் அந்த ஆலோசனை இருந்தது. அந்த கடிதத்தை கொடுத்திருக்கிறார் நூரானி. அப்போது அவர் வங்காள மாகாண அரசில் ஓர் அமைச்சரும்கூட. யாருடைய அமைச்சரவையில் பாகிஸ்தான் வேண்டும் எனும் தீர்மானத்தை 1940ல் முன்மொழிந்த மவுல்வி ஏ.கே.பசுலுல் ஹேக் தலைமையிலான அமைச்சரவையில்! பதவி ஆசை வெட்கம் அறியாதது!

1925ல் ஆர்எஸ்எஸ் துவக்கப்பட்டதிலிருந்து 22 ஆண்டுகள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மகத்தான சுதந்திரப் போராட்டம் நடந்தது. அதில் எந்தக் கட்டத்திலும் பங்கேற்கவில்லை ஆர்எஸ்எஸ். பங்கேற்கக் கூடாது என்று ஒரு முடிவோடு இருந்தது. காரணம் அதனது குறி எல்லாம் பிற மதத்தவர்கள். தனது இந்து ராஷ்டிரம் எனும் மனுவாத அரசுக்கு அவர்கள் இடையூறாக இருப்பார்கள் என்று அவர்கள் மீதுதான் வன்மம். ஆகவேதான் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு துரும்பை எடுத்துப் போடவில்லை 1947வரை. அதனால்தான் தோழர்கள் என்.சங்கரய்யா, ஆர்.நல்லக்கண்ணு போன்ற தீரமிக்க சுதந்திரப் போராளிகள் அவர்கள் மத்தியில் இல்லை. இந்த லட்சணத்தில் பிறரை பார்த்து தேச விரோதிகள் என்கிறார்கள் என்றால் எவ்வளவு நெஞ்சழுத்தம்.இந்தப் பிரச்சனையில் இன்னொரு கோணமும் உள்ளது. வெள்ளைக்காரனை எதிர்த்த நேரடிப் போராட்டத்தில்தான் ஈடுபடவில்லை, காங்கிரஸ் நடத்திய “ஹரிஜன சேவா” இயக்கத்திலாவது ஆர்எஸ்எஸ் ஈடுபட்டதா? அதன் முத்தாய்ப்பாக நடந்தேறிய ஆலய நுழைவுப் போராட்டத்திலாவது ஈடுபட்டதா? அதுதான் இந்து சமுதாயத்தை ஒன்றிணைக்க, வலுப்படுத்த பிறந்த இயக்கமாயிற்றே - அதனுடைய அதிகாரபூர்வ இணைய தளம் இது பற்றி மூச்சு விடவில்லை. ஈடுபட்டிருந்தால்தானே சொல்ல முடியும்? ஏன் ஈடுபடவில்லை?

நாடார் குல மக்களுக்கும் பட்டியல் சாதி மக்களுக்கும் அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதி இல்லை. 1939ல் காங்கிரசின் வைத்தியநாதய்யர் தலைமையில் அந்த இயக்கம் நடந்தது. அதை தேவஸ்தான கமிட்டி உறுப்பினர் சிதம்பர முதலியாரும், நிர்வாக அதிகாரி ஆர். எஸ். நாயுடுவும் ஆதரித்தார்கள். அதன் வெற்றிக்குப் பிறகுதான் தமிழகத்தின் கோயில்கள் இவர்களுக்கு திறந்துவிடப் பட்டன. அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தை இந்து மகாசபையும் ஆர்எஸ்எஸ்சும் ஆதரித்தனவா? இல்லை. மாறாக அதை எதிர்த்த சநாதனிகளின் பின்னால் ஒளிந்து கொண்டன. இவர்கள்தாம் இந்துக்களுக்கானஅமைப்புகளாம்! இவை மனுவாதிகளுக்கானைஅமைப்புகள், “இந்து” எனும் போர்வையில் இயங்குகின்றன என்பது அன்றே தெரியவந்தது.

சுதந்திரத்திற்குப் பிறகும்கூட தீண்டாமையை எதிர்த்து ஆர்எஸ்எஸ் போராடியதில்லை. அதற்கு மிக எளிய ஆதாரம் அது நம் காலத்திலும் அதற்காகப் போராடியதில்லை என்பது. இப்போதும் பட்டியல்சாதி மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவது தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகளே தவிர சங் பரிவாரம் அல்லவே? இதிலிருந்தும் அந்தக் காலத்தில் அவர்கள் எப்படி சநாதனிகளுக்கு ஆதரவாக நின்றிருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.அப்படியெனில் சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்து சமுதாயத்திற்காக அவர்கள் செய்த சேவை என்ன? 1939ல் ஆர்எஸ்எஸ் தனக்கென உருவாக்கிக் கொண்ட கீதம் முழங்கியது: “இந்துக்களின் பூமியே! கடவுளே! இந்து ராஷ்டிரத்தின் அங்கங்களாகிய நாங்கள் உன்னை வணங்குகிறோம். எமது தர்மத்தைக் காத்து தேசத்தை உன்னத நிலைக்கு உயர்த்துவோம்”.அது என்ன தர்மம்? சந்தேகம் என்ன மனு(அ)தர்மம்தான். இப்படியாக ஒரு பகுதி இந்துக்களை தம் வலைக்குள் வீழ்த்தி, அவர்களைப் பிற மதத்தவருக்கு எதிராக நிறுத்தி தாங்கள் நினைத்ததை சாதிக்க முனைந்தார்கள். மத அடிப்படையில் நாடு பிளவுபடுத்தப்பட்டு சுதந்திரம் கிடைத்தது அவர்களுக்கு வசதியாகப் போனது. அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி அவர்கள் வகுப்புவாத வெறி அரசியலில்தான் நின்றார்கள்.

(தொடரும்)
 

;