இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம், உயர்கல்வி நிறுவனங்களை நாசப்படுத்தவும், அவற்றிற்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தவும், அங்கே பயில வரும் மாணவர்களுக்கான வசதி வாய்ப்புகளைக் குறைக்கவும் மிகவும் விரிவான அளவில் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. இது, எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்பவர்களின் போர்த்தந்திர உத்தியாகும். இது இந்தியாவின் எதிர்காலத்திற்கும், மனிதகுல முன்னேற்றத்திற்கும் தடைக்கற்களாகும்.
நான் பேராசிரியராக உள்ள, புதுதில்லி, ஜவ ஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளாகத்திற்குள் ஜனவரி 5 அன்று முகமூடி அணிந்த ஆண்களும், பெண்களும் புகுந்து, மாணவர்க ளையும், ஆசிரியர்களையும், கம்புகளாலும், இரும்புக் கம்பிகளாலும், அரிவாள்களாலும் தாக்கினார்கள். பல்கலைக் கழக நிர்வாகம், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறை, குண்டர்கள் மேற்கொண்ட வன்முறை வெறியாட்டங்களிலிருந்து, அப்பாவி மாண வர்களையும், ஆசிரியர்களையும் பாதுகாக்கத் தவறியது மட்டுமல்லாமல், அவ்வாறு அவர்களின் வன்முறை வெறியாட்டங்களுக்கு உடந்தையாகவும் இருந்தார்கள். இதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவாகும்.
ஜேஎன்யு, மிகவும் மதிக்கப்படும் ஒரு நிறுவனமாகும். ஆனால், நாட்டிலுள்ள பல லட்சக்கணக்கான முஸ்லிம்க ளை நாடற்றவர்களாக்குவதற்கு வகை செய்யும், குடி யுரிமைத் திருத்தச் சட்டத்தை அரசமைப்புச்சட்டத்திற்கு முரணாக அப்பட்டமான முறையில் நிறைவேற்றியிருப்பது உட்பட, இந்து தேசியவெறியின் கோரமான வடிவத்தை மேம்படுத்திடும் இந்தியத் தலைமை, இப்பல்கலைக்கழகம் இந்திய ஜனநாயகத்தின் அடிநாதமாக விளங்கும் நெகி ழ்வுத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய கொள்கை களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், தங்களுக்கு எதிரியாக உள்ள பல்கலைக்கழகம் என்று கருதுகிறது.
மோடி அரசாங்கத்தின் கட்டளைகளை வெறித்தனமான முறையில் வியாக்கியானம் செய்திடும் சிறு குழுக்கள் சிலவற்றின் செயல்கள் மூலம் ஏற்பட்ட ஒரு விபத்து என்று இதனைச் சொல்ல முடியாது. மாறாக, மோடியின் பாஜக இத்தகையதொரு கதையை வெகு நீண்டகாலமாகவே மிகவும் சுறுசுறுப்புடன் அதிகரித்துக்கொண்டுதான் வந்திருக்கிறது. 2014இல் ஆட்சிக்கு வந்தபின், தங்க ளுக்குத் தாளம் போடுகிற ஊடகங்களைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியாளர்களின் கொள்கைகளையும் நட வடிக்கைகளையும் கடுமையாக விமர்சிக்கின்ற ஆசிரியர் கள், மாணவர்களைக் கொண்டுள்ள ஜேஎன்யு போன்ற பல்கலைக்கழகங்கள் மீது சேற்றை வாரிவீசி வந்திருக்கிறது.
உண்மையில், ஜேஎன்யு-வின் மீது இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடு கிறவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு “ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதன்மூலம், சிறுபான்மையினருக்கு ஆதரவாகச் செயல்படுபவர் கள்மீது இந்து வெறி “வேட்டைக்காரர்கள்” மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசின் உயர்மட்ட அளவில் ஆதரவு உண்டு என்பதை உறுதி செய்திருந்தார். மேலும் அவர், ஜேஎன்யு-வில் மாணவர்கள் தங்களின் படிப்பைக் கைவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாங்கத்தால் தான்தோன்றித் தனமாகக் கொண்டுவரப்பட்டுள்ள கட்டண உயர்வுகளுக்கு எதிராக அவர்கள் நடத்திவரும் போராட்டத்தையும் இணைத்துப் பேசியிருந்தார்.
ஜேஎன்யு மீதான தாக்குதல் நடைபெற்ற சமயத்தில், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர், குண்டர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட வசதி செய்து தரும் விதத்தில், தெரு விளக்குகளை அணைத்தனர். இவற்றைக் கேள்விப்பட்டுத் தடுப்பதற்காக வந்தவர்களையும், ஊட கத்தினரையும் வளாகத்தினுள் நுழையாதவாறும், வளா கத்திலிருந்து வெளியேறாதவாறும் நிறுத்தி வைத்தார்கள். ஜேஎன்யு நிர்வாகத்திற்கு நெருக்கமாக இருக்கும் ஆசிரி யர்களும், பாஜக-வின் மாணவர் அணியில் உள்ள மாண வர்களும், வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, உதவிகளையும் செய்தனர்.
குண்டர்கள், ஜேஎன்யு மாணவர் சங்கத் தலை வரையும், மற்றும் பெண்களையும், சில ஆசிரியர்களை யும் “ராமனுக்கு ஜே” (“Hail Lord Ram”) என்று கத்திக் கொண்டே, குறி வைத்துத்தாக்கிக் கொண்டிருந்தபோது, இவர்களும் அவர்களுடன் சேர்ந்து நின்றுகொண்டு, கத்தி னார்கள். வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று பல மணி நேரம் கழிந்தபின்னர்தான், போலீசார் வன்முறை யில் ஈடுபட்ட குண்டர்களை அவர்களின் சூறையாடல்கள் முடிந்தபின்னர் வளாகத்திலிருந்து மிகவும் பாதுகாப்பாக வெளியேற்றி இருக்கின்றனர். சிசிடிவி கேமராக்கள் செயல் படாதிருந்தது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.
சம்பவம் தொடர்பாக பாதிப்புக்கு உள்ளான மாணவர்க ளும், ஆசிரியர்களும் தாக்கல் செய்த புகார்களைப் பதிவு செய்ய மறுத்தார்கள். இப்போது காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக சிலரை அடையாளம் கண்டிருப்பதாகக் கூறி, சம்பவத்தில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீதே தாக்குதலை ஏற்படுத்தியவர்கள் என்று வழக்குகள் பதிவு செய்திருக்கிறார்கள். இது, அரசே ஏற்பாடு செய்து கட்டவிழ்த்துவிட்டுள்ள பயங்கரவாதமாகும். இதன்கீழ் பலியாகியுள்ள பல்கலைக் கழகங்களில் ஜேஎன்யு-வும் ஒன்று. டிசம்பரில், காவல்துறை புதுதில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல் கலைக் கழக வளாகத்தினுள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியானமுறையில் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களைத் தாக்கியது. அவர்கள் மீது தடியடிப் பிரயோகம் மட்டுமல்லாமல், அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகை குண்டுகளையும், புல்லட் குண்டுகளையும் வீசியும் உள்ளது. தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் நூலகம் உட்பட அனைத்து சொத்துக்களையும் நாசப்படுத்தியுள்ளது. இவர்களின் இச்செயல்களின் விளைவாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அன்றையதினமே, இதைவிட மேலும் மோசமான முறையில் ஒரு வன்முறை வெறியாட்டத்தை காவல்துறை யினர், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்திலும் மேற் கொண்டுள்ளனர். இவர்களின் கண்ணீர்புகைக் குண்டு தாக்கியதில், முனைவர் பட்டத்திற்கு பயிலும் மாணவர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் போலீசார் மேற்கொண்ட தாக்கு தல்கள் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் இருந்ததன் காரணமாக, அலகாபாத் உயர்நீதிமன்றம், மேற்படி சம்பவம் தொடர்பாக ஒரு நியாயமான புலனாய்வை காவல்துறையினர் மேற்கொள்வார்கள் என்பதில் நம்பிக்கையிழந்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணை யத்திற்குக் கட்டளை பிறப்பித்திருக்கிறது.
மோடி அரசாங்கம் பல்கலைக் கழகங்கள் மீது மேலும் பல வகைகளிலும் குறி வைத்திருக்கிறது. உயர்கல்விச் செலவினங்களுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு ஏற்கனவே மிகவும் குறைவாகும். அதாவது 2013-14இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் அது 0.6 சதவீதமாக மிகவும் அற்பமான அளவிலேயே இருந்தது. இப்போது மோடி அரசு இதனை 2018-19ஆம் ஆண்டில் 0.2 சதவீத மாக மேலும் வெட்டிக் குறைத்துள்ளது. இதன்மூலம் அர சாங்கத்தின் தரப்பில் ஒவ்வொரு மாணவருக்காகவும் செலவு செய்திடும் தொகை என்பது கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துவிட்டது. இவ்வாறு நிதி ஒதுக்கீடு குறைந்ததன் காரணமாக, கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் தங்களின் தரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு மிகவும் போராடிக் கொண்டிருக்கின்றன. இதனால் இவற்றில் பல தங்கள் சேவைகளை வெட்டிச் சுருக்கி இருக்கின்றன, தங்கள் நிறுவனங்களை நடத்துவதற்கு அதீதமான அளவில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்திட ஒப்புக்கொள்ளும் தற்காலிக ஆசிரியர்களையே சார்ந்திருக்கின்றன. ஜேஎன்யு உட்பட பல பொது நிறுவனங்கள் கல்விக் கட்ட ணங்களை மிகவும் செங்குத்தான முறையில் உயர்த்தி இருக்கின்றன. இதனால் பல மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாமல் இடையிலேயே கைவிட்டு விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
உயர் கல்விக்கு எதிரான பாஜக-வின் பிரச்சாரத்தை விளக்குவதில் எவ்விதச் சிரமமும் கிடையாது. உண்மையில், அவர்களுக்குத் தாங்கள் சொல்வதையெல்லாம் எவ்வித மான நிபந்தனையுமின்றி அப்படியே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படிந்தும், விசுவாசமாகவும் நடக்கக்கூடியவர்கள்தான் தேவை. தாங்கள் சொல்வதற்கு மாற்றுக்கருத்து எதுவும் சொல்லாமல் அப்படியே கிளிப்பிள்ளை போல திருப்பிச் சொல்கிறவர்கள்தான் அவர்களுக்குத் தேவை. மாறாக, விமர்சனரீதியாக சிந்திப்பதை ஊக்கப்படுத்துகிறவர்கள் அவர்களுக்குத் தேவையில்லை. இத்துடன், முன்பு கல்வி மறுக்கப்பட்டிருந்த பிரிவின ரான பெண்கள், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் விளிம்புநிலையில் உள்ள சமூகத்தினருக்குக் கல்வி அளிக்கப்படுவதையும் இவர்கள் விரும்பவில்லை. இதனால் இவர்கள் கல்வி கற்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டி ருக்கிறது. கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக அநீதி குறித்த விளிப்புணர்வைக் கொணர்வதுடன், அவற்றுக்கு எதிராகப் போராட வேண்டியதன் தேவையையும், அதற்கான திறமையையும், வலைப்பின்னலையும் உரு வாக்குகிறது. இவ்வாறு கல்வியை இவர்கள் பெறுவது என்பது, இவர்களுக்குச் சமூகத்தில் பெரிய அளவில் சமத்து வத்தையும், சமூகத்தில் அனைவருடனும் ஒட்டி உறவாடும் நிலையினையும் ஏற்படுத்துகிறது. மதவெறிச் சிந்தனைகளி லிருந்தும், மக்களிடையே பிளவினை ஏற்படுத்தும் சிந்த னைகளிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான வாய்ப்புக ளையும் அளிக்கிறது.
கல்வி மறுக்கப்படுதல் மற்றும் துடிப்பான விவாதம் மறுக்கப்படுவதன் விளைவுகளை மிகைப்படுத்திக் கூற முடியாது. இத்தகைய அணுகுமுறை ஆரம்ப காலத்தில் சமூகத்தினரை அவர்களின் கட்டளைகளுக்குக் கட்டப்பட்ட வர்கள் போல் இருக்க வைத்திடலாம். ஆனால் நீண்ட கால அளவில், இது அறிவார்ந்த மற்றும் கலாச்சார வறிய நிலைக்கு இட்டுச் செல்லும், இந்தியாவின் எதிர்காலத் திற்கு, மனிதகுல முன்னேற்றத்திற்குத் தேவையான கண்டு பிடிப்புகள் கிடைக்காமல் முட்டுக்கட்டை போட்டுவிடும்.
எதிர்காலம் இப்போது தொங்கிக்கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கம், உயர்கல்வியின் மீது பொருளாதார ரீதியாகவும், குண்டர்கள் மூலமாகவும் ஏற்படுத்திக்கொண்டி ருக்கும் ஒவ்வொரு தாக்குதலும், நாட்டை, பேரழிவை நோக்கி வேகமாகத் உந்தித்தள்ளிக் கொண்டிருக்கிறது.
கட்டுரையாளர்: ஜேஎன்யு பொருளாதாரத்துறைப் பேராசிரியர் நன்றி: பிராஜக்ட் சிண்டிகேட் தமிழில்: ச.வீரமணி