டிசம்பர் 26 (இன்று) வானில் ஓர் அற்புதமான நிகழ்வு நடைபெறுகிறது. அதுதான் வானில் அரிதாக நடைபெறும் வளைய சூரிய கிரகணம். தமிழகத்தை வளைய சூரிய கிரகணம் ஆசையோடு பார்வையிட வருகிறது.இதற்கு முன்னர் தமிழகத்தில் 2010, ஜனவரி 15, அன்று இராமேஸ்வரத்தில் வளைய சூரியகிரகணம் மதியம் 1.10 க்கு வந்து போனது.
சூரிய கிரகணம் என்பது வானத்து சந்திரனின் நிழல் விளையாட்டுத்தான். சூரிய னுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திர ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் வரும்.
சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்துவிட்டால் அதுமுழு சூரிய கிரகணம்.சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன், நெருப்பு வளையமாக(Ring of fire) தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் எனப்படும். சந்திரனின் நிழலால் பகுதி சூரியன் மட்டும் மறைக்கப்பட்டால் அது பகுதி சூரிய கிரகணம். இப்போது இன்று (டிசம்பர் 26) நடைபெற இருப்பது வளைய சூரிய கிரகணம்.
வளைய சூரியகிரகணம் தமிழகத்தில், ஊட்டி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் மற்றும் ஈரோடு என 9 மாவட்டங்களில், சூரியன் பொன் வளையமாக தெரியும். மற்ற மாவட்டங்களிலும் இந்தியா முழுமைக்கும் சூரியன் பகுதி கிரகணமாகத் தெரியும்.
இன்றைய வளைய சூரியகிரகணம் இந்தியாவில் கேரளாவின் காசர்கோடு மாவட்டம் செகாவத்து என்ற ஊரில் துவங்கி, ஊட்டியில் நுழைகிறது. சூரியகிரகணம் காலை 8.07 மணிக்குத் துவங்கி, காலை 11.14 க்கு முடிகிறது. (சுமார் 3 மணி 7 நிமிடம்) ஆனால் சூரியன் நெருப்பு வளையமாக (Ring of fire) காலை 9.31 க்கு துவங்கி 9.34 வரை சூரியனின் வளையம் நீடிக்கிறது.
2019, டிசம்பர்26 வளைய கிரகணப் பாதையின் அகலம் 118 கி.மீ. நீளம் 12,900 கி.மீ. வளைய சூரிய கிரகண பாதை சவூதியில் துவங்கி, வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் வரை பயணிக்கிறது. ஒரு முழு சூரிய கிரகணம் என்பது 2 ஆண்டுகளில் 18 மாதத்தில் ஒரு முறை வரும். முழு சூரிய கிரகணம் என்பது ஓர் அரிதான நிகழ்வுதான். முழு சூரிய கிரகணம் அதிக பட்சமாக 7.5 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்.
ஆதிகாலத்தில் சூரிய கிரகணம் பார்த்தார்களா?...
பழங்கால தொல்பொருள் ஆய்வு இடங்களில் கிடைத்த களிமண் பலகைகள் மூலம், ஆதிகால பாபிலோ னியர்கள் கிரகணங்கள் பற்றி பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. கிரகணம் பற்றிய அவர்களின் முதல் பதிவு சூரிய கிரகணம் கி.மு.1375, மே 3 ஆம் நாள் (இன்றிலிருந்து 3094 ஆண்டுகளுக்கு முன் நடந்துள் ளது). அவர்கள் இதனை துல்லியமாக கணித்துள்ள னர். ஆதிகால சூரிய கிரகண பதிவு உகாரிட் (மத்திய தரைக்கடல் பகுதியில்) என்னுமிடத்தில் நடந்துள்ளது. அப்போது வானம் 2 நிமிடம், 7 நொடிகள் இருட்டாகி இருந்தது என்ற பதிவு உள்ளது.
குட்டி சந்திரன் எப்படி பெரிய சூரியனை மறைக்கிறது?
சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது. அது போலவே, சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தைப் போல சூரியனுக்கு உள்ள தூரம் 400 மடங்கு அதிகம். எனவே பூமியிலிருந்து பார்க்கும் போது சந்திரன், சூரியன் இரண்டும் ஒரே அளவில் தெரிகிறது. எனவே சந்திரனின் நிழல் சூரியனை மறைத்து சூரிய கிரகணத்தை உருவாக்குகிறது.
எதனால் இப்படி சூரியன் கிரகணத்தின் போது வளையமாகத் தெரிகிறது?
சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. அப்போது சில சமயம் அருகிலும், சில சமயம் தொலைவிலும் இருக்கும். முழு சூரிய கிரகணம் என்பது சந்திரன் அருகில் இருக்கும்போது ஏற்படும். வளைய கிரகணம் என்பது சந்திரன் தூரத்தில் இருக்கும்போது, சந்திரனின் நிழல் சூரியனுக்குள் ளேயே விழும். சூரியனை முழுமையாக மறைக்காது. சூரியன் எட்டிப்பார்த்துக்கொண்டு வெளியே இருக்கும். இதனையே வளைய சூரிய கிரகணம் என்று சொல்கிறோம்.
சூரிய கிரகணத்தின் போது சூரியனைப் பார்க்கலாமா?
சூரிய கிரகணத்தின் போது மட்டுமல்ல,எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியனைப் பார்ப்பதற்கு சிறப்பான ஒரு சூரியக் கண்ணாடி தயாரித்துள்ளனர்.அதனைபோட்டுக் கொண்டு சூரியனைப் பார்த்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சூரியனைப் பார்க்கும்போது கண்ணுக்கு எப்போதும் பாதுகாப்பு அவசியம்.
சூரியகிரகணம் தொடர்பான மூடநம்பிக்கைகள்
சூரிய கிரகணத்தின்போது உணவு உண்ணக்கூடாது என்கிறார்களே? அது ஏன்? சூரியனிலிருந்து ஏதாவது சிறப்புக் கதிர்கள் வருகின்றனவா?
எந்த ஒரு சிறப்பு சூரியக் கதிரும் வந்து பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. அப்படி ஏதோ கதிர்கள்/ அகச்சிவப்பு கதிர்கள் வந்து பூமியிலுள்ள உணவை பாதிப்படையச் செய்வதாக சில ஊடகங்கள் மற்றும் சோதிடர்கள் புரளியைக் கிளப்பி விடுகின்றனர். சூரிய கிரகணத்தின் போது பாதிப்பை உருவாக்கும் கதிர்கள் சூரியனிலிருந்து வருவதில்லை.எப்போதும் வரும் கதிர்களே சூரிய கிரகணத்தின்போதும் வருகின்றன. அந்த அகச்சிவப்பு கதிர்கள் எப்போதும் வருபவைதான். சூரியனிடமிருந்து வரும் அகச்சிவப்பு கதிர்கள் தான் பூமியை,வளிமண்டலத்தை மற்றும் அதன் மேலுள்ள பொருட்களை சூடாக்குகிறது.அவை உணவை பாழாக்காது. எனவே நீங்கள் சூரிய கிரகணத்தின்போது தாரளமாக சாப்பிடலாம் .உங்கள் நண்பர்களையும் சாப்பிடச்சொல்லலாம்.
- கிரகணத்தின் போது கருவுற்ற பெண்கள் வெளியே வரக்கூடாது என்கிறார்களே?
அப்படி ஏதும் இல்லை. தாராளமாக சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின்போது அம்மாவாகப் போகிற கர்ப்பிணிப்பெண்கள் வரலாம்.எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
- கர்ப்பிணிப் பெண்கள் சூரியகிரகணத்தின் போது வெளியே வந்தால், குழந்தை பிறந்த பின்னர்,அது ஊனமாக இருக்கும் என்கிறார்களே? அது உண்மையா?
உண்மை இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை.தவறான கருத்து. கர்ப்பிணி பெண்கள் தாராளமாக சூரியகிரகணத்தின் போது வெளியே வரலாம். எதுவும் நிகழாது.
- சூரிய கிரகணத்தின்போது வீட்டிலுள்ள உணவு மற்றும் நீரில் தர்ப்பையை போடவேண்டும் என்கிறார்களே.அது ஏன்? தர்ப்பை என்றால் என்ன?
தர்ப்பை என்பது ஒரு வகை கோரைப்புல்.அது சூரியனிலிருந்து வரும் எந்தவித கதிரையும்/கிருமி யையும் தடுக்க முடியாது. கிணறு, குளம், ஏரி மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளில் எத்தனை தர்ப்பை போட்டு அந்த நீரை காப்பாற்ற முடியும்? மேலும் இது முழுக்க முழுக்க தவறான கருத்து.தர்ப்பை போடுவதால் எந்த பலனும் இல்லை.
கிரக ராசி பலன்கள் என்ற பெயரில் சூரிய கிரகணம் பற்றி அவிழ்த்து விடப்படும் பொய்கள் என்ன?
“சூரிய கிரகணத்தின் தாக்கத்தினால் தோஷம் ஏற்படும் என்றும்,கேட்டை, மூலம், பூராடம், மகம், அஸ்வினி இந்த ஐந்து ராசிக்காரர்களும் கிரகணத்தன்று பரிகாரம் செய்யவேண்டிய ராசிகளாகும்; இந்த சூரிய கிரகணம் நிகழ்வதற்கு முன்னாள் ஒரு முறை குளித்து விடுங்கள்; சூரிய கிரகணம் முடியும் வரை எதுவும் சாப்பிடக்கூடாது; சமைத்த பொருட்களை மூடி வைக்க வேண்டும்; வெளியில் செல்லாமல் இருப்பது நலம் தரும்; சூரியகிரகண சமயத்தில் எந்த வேலையும் செய்யாமல் இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவது எந்த அளவிற்கு சிறப்பான பலனை பெற்றுத்தரும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது; கிரகண நேரத்தில் உச்சரிக்கப்படும் மந்திரம் சாதாரண நேரங்களில் நீங்கள் உச்சரிப்பதை விட லட்சம் மடங்கு பலன் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; அதனால்தான் அந்த நேரத்தில் இறைவனை வழி படுவது மிகவும் அவசியமான ஒன்றாக கூறப்படுகிறது; இந்த கிரக சேர்க்கையினால் டிசம்பர் 25, 26, 27 அன்று பிறக்கும் குழந்தைகளின் உடல்நலனில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்; அதனால் அந்தப் பெற்றோர்கள் அதற்குரிய சரியான பரிகாரங்களை செய்வது அவர்களது குடும்பத்திற்கு நல்லது; குரு – சனி இவர்கள் இருவரின் சேர்க்கை இருப்பதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும்; அத னால் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாது இருப்பவர்களுக்கு பாதிப்புகள் உருவாகலாம்; அதனால் அவர்கள் முறைப்படி தர்ப்பணம் செய்வது நற்பலன்களை நல்கும்” - என் றெல்லாம் ராசி பலன்காரர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு அறிவியல் இயக்கத்தின் பதில் என்ன?
- சூரிய கிரகணத்தால் உலகில் எந்த ஒரு ஜீவராசிக்கும் தீங்கு ஏற்படுவது இல்லை. இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இவர்கள் குறிப்பிடும் 6 கிரகங்க ளில் சூரியன், சந்திரன் இரண்டும் கிரகங்கள் இல்லை. சூரியன் அறிவியல் ரீதியாக ஒரு விண்மீன். சந்திரன் பூமியின் துணைக்கோள். கேது என்ற கோளே, நம் சூரிய மண்டலத்தில் இல்லை. புராணத்தின் வழியே அவிழ்த்து விடப்பட்ட கற்பனைக் கதை அது.
- சூரிய கிரகணத்தின் முழுமையான நேரம் காலை 8.06 லிருந்து - காலை 11.14 வரை மட்டுமே. இவர்கள் சொல்லுவது காலை 8 மணி முதல் மதியம் 1.15 வரை என்று. இதுவும் தவறு.
- இவர்கள் குறிப்பிடும் மூல நட்சத்திரம் என்பது, விருச்சிக (ராசி) மண்டலத்தில் பூமியி லிருந்து 550 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. தனுசு (ராசி) 5000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனோ பூமியிலிருந்து 14.79 கோடி கி.மீ தூரத்தில்தான் உள்ளது. இதில் சூரிய கிரகணத்தால் மூல நட்சத்திரம் மற்றும் தனுசு (ராசி) பிரச்சனைக்குள்ளாவது எங்கே? சூரிய கிரகணத்தின்போது எந்தவொரு தீமை விளைவிக்கும் கதிரும் சூரியனிடமிருந்து வர வில்லை. அவை உணவை, உயிரினங்களைப் பாதிப்பதும் இல்லை.எனவே குளிக்க வேண்டியதும் இல்லை. உணவை மூடிவைக்க வேண்டியதும் இல்லை. வீட்டை/கோவிலை கழுவ வேண்டியதும் இல்லை. கிரகணத்துக்கு முன்னும் பின்னும் குளிக்க வேண்டியது இல்லை. கடலில் குளிக்க வேண்டி யதோ, சாங்கியமாக நல்ல தண்ணீரில் உப்பை போட்டு குளிக்க வேண்டியதில்லை. அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும். போலி அறிவியலுக்குள் மூழ்கிவிடக்கூடாது.
- கிரகணத்தின்போது ஏதாவது அறிவியல் கண்டுபிடிப்புகள் நடந்திருக்கிறதா?
ஓ..தாராளமாக.. நிறைய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அதில் முக்கியமாக 3 கண்டுபிடிப்புகள் உலகத்திற்கு நன்மை பயப்பவை.
1. தனிம அட்டவணையின் இரண்டாவது தனிமம் (லேசான தனிமம்) ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது; 1868 ஆகஸ்ட் 18 அன்று நிகழ்ந்த முழு சூரியகிரக ணத்தின் போதுதான். வானவியலாளர் பியரீ ஜான்சென் (Pierre Janssen) இதனை கண்டறிந்து கூறிய பிறகே, 1895ல் பூமியில் ஹீலியம் இருப்பது கண்டறியப்பட்டது.
2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சார்பியல் தத்துவம் ( Relativity Theory of Light) நிரூபணம் செய்ய சான்று கிடைத்தது, 1919 மே 19 இந்தியாவின் குண்டூரில் நிகழ்ந்த முழு சூரியகிரகணத்தின் போதுதான். கண்டறிந்தவர் ஆரதர் எட்டிங்டன் (Arthur Eddington).
3. சூரியனின் வெளிப்பகுதியான ஒளி மகுடத்தை (Corona) பார்க்கவே முடியாது. 1930-இல் நிகழ்ந்த முழு சூரியகிரகணத்தின் போது ஜெர்மன் வானவியலாளர் வால்டர் க்ரோட்ரைன் (Walter Grotrian), சூரிய கிரகணத்தின் போது சூரியனின் ஒளிவட்டம் மிகுந்த ஒளியுடன் தெரிந்ததையும், அதன் ஒளி மட்டுமல்ல, வெப்பமும் சூரியபரப்பை விட அதிகமாக உள்ளதையும் கண்டறிந்தார்.