tamilnadu

கேரளாவை போல் தமிழகத்திலும் நெல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை

 தஞ்சாவூர், ஜன.21- தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில், நடப்பாண்டு சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்பில், விவசாயிகள் மற்றும் அலுவலர்களுடனான ஒருங்கிணைந்த முத்தரப்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை தஞ்சை ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்றது.   கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் அளித்த கோரிக்கை மனுவில், “கடந்த காலங்களை விட நெல் உற்பத்திக்கான செலவு தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால் நெல் கொள்முதல் விலை, போதுமான அளவு அதிகரிக்கப்படவில்லை. நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்திட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.  மாநில அரசு, அண்டை மாநிலங்கள் போல ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கேரளாவில் நெல் விலை குவிண்டாலுக்கு ரூ 2,630 வழங்கப்படுவதைப் போல, தமிழகத்திலும் நெல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது மாவட்டம் முழுவதும், நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட வேண்டும். நெல் தேங்காமல் கொள்முதல் நடைபெற சாக்கு உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரணங்களையும் போதுமான அளவு வழங்கவேண்டும்.  நெல் கொள்முதல் நடந்தவுடன் தாமதமின்றி நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு கிடைத்திட துரித ஏற்பாடு செய்திட வேண்டும். மழை, பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் நெல்லில் ஈரப்பதம் கூடுதலாக காணப்படுகிறது. எனவே ஈரப்பதத்தை காரணம் காட்டாது ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்திட வேண்டும். மேலும் இயற்கை இடர்களிலிருந்து பாதுகாக்க தேவையான பாதுகாப்பான நெல் கிடங்குகள் அமைத்திட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது.

;