tamilnadu

img

தஞ்சை பெரியகோவிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்துக!

தமுஎகச கோரிக்கை

சென்னை,ஜன.27-  தஞ்சை பெரியகோவிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலை ஞர்கள் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை பெரியகோவில் தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றா கும். தமிழர் கட்டிடக்கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக்கலைக்கும், ஆடற் கலைக்கும் மட்டுமல்லாமல் தமிழர்களின் தேர்ந்த வரலாற்று அறிவின் வடிவங்களுள் ஒன்றான கல்வெட்டுப் பதிவுகளுக்கும் ஆயிரம் ஆண்டுகால சாட்சியாக நம் மண்ணில் செம்மாந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோவில்.

தமிழ் மற்றும் தமிழர்களின் சிறப்புகள் நிறைந்துள்ள தஞ்சை பெரிய கோவிலுக்கு, வரும் 2020 பிப்ரவரி 5 அன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்தக் குட முழுக்கை தமிழில் தான் நடத்தவேண்டும் என்று தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும், தன்னார்வ அமைப்புகளும் அரசிடம் கோரியுள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம்,  வழிபாட்டில் தமிழ் உரிமையை உறுதிசெய்திட வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறது. வழி பாட்டுரிமையின் ஒரு பகுதியாக, தஞ்சை பெரியகோவிலில் மட்டுமல்லாமல் எல்லா கோவில்களிலும் தமிழில் குடமுழுக்கு, வழிபாடு என்பதை அரசு உறுதி செய்ய தமுஎகச கோருகிறது. 

நீண்ட நாட்களாகவே தஞ்சை பெரிய கோவிலில் சமஸ்கிருதத்தில் தான் வழிபாடு நடைபெறுகிறது என்கிற ஆதாரமற்ற செய்தியை அரசும், சில அமைப்புகளும் சொல்லி வருகின்றன. ஆனால் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட காலத்தில், இதற்கு எந்த மொழியில் குடமுழுக்கு நடை பெற்றது என்கிற எந்த வரலாற்றுப் பதிவும் நம்மிடம் இல்லை. ஆனால் இந்தக் கோவிலை எடுப்புவித்த இராஜராஜ சோழன், தில்லை நடராஜர் கோவிலில் தீட்சிதர்க ளின் சூழ்ச்சியால் செல்லரித்து அழிந்து கொண்டிருந்த மூவர் திருமுறைகளைக் காப்பாற்றிக் கொடுத்தவன் என்கிற வர லாற்று பதிவு உள்ளது. இதன் காரணமாகவே அவனுக்கு திருமுறை கண்ட சோழன் என்கிற பட்டப்பெயரும் உண்டு. அதை இராஜ ராஜ சோழனும் பெருமையாக கருதி யுள்ளான். அதோடு, தான் எடுப்புவித்த தஞ்சை பெரியகோவிலில் மூவர் திருமுறை களை ஓதுவதற்கு, ஓதுவார்களை பணிக்கு அமர்த்திய மன்னனும் இராஜராஜ சோழனே. தமிழின் பக்தி இலக்கியங்களை போராடி மீட்டுத்தந்த இராஜராஜன், தான் எடுப்புவித்த கோவிலுக்கும் தமிழிலேயே குடமுழுக்கு நடத்தியிருக்க வேண்டும்.

அதோடு தஞ்சை பெரிய கோவிலில் 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த மராத்திய கல் வெட்டுகளை தவிர, அனைத்து கல்வெட்டுக ளும் தமிழ்க் கல்வெட்டுகளே. அங்கு சமஸ்கிருதத்தில் ஒரு கல்வெட்டு கூட இல்லை என்பதையும் இணைத்துப் பார்க்கவும். பிற்காலத்தில் வந்த அரசர்களின் காலத்தி லேயே சமஸ்கிருதம் இந்தக் கோவிலுக்குள் நுழைந்திருக்க வேண்டும். அதன் பிறகே சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு என்பது வழக்கத்தில் வந்திருக்க வேண்டும். இந்தச் சூழலில் 23.01.2020 அன்று நீதிமன்றத்தில், இந்து அறநிலையத் துறை, தஞ்சை பெரிய கோவிலில் சமஸ்கிருதத் தோடு, தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது கண்துடைப்பான நடவடிக்கை என்றே தமுஎகச கருதுகிறது. இன்றைக்கும் பல கோவில்களில் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடக்கும் போது, அதன் தொடர்ச்சியாக ஓது வார்களை வெளியே இருந்துகொண்டு தேவாரம் பாடச்சொல்வார்கள்.  தமிழில் குடமுழுக்கு என்கிற கோரிக்கையின் பொருள் இதுவல்ல.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் தஞ்சை பெரியகோவி லில், தமிழிலும் குடமுழுக்கு என்பதை மாற்றி, தமிழில் மட்டுமே குடமுழுக்கு  நடத்தப் படும் என்பதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோருகிறது. 23 ஆண்டு களுக்கு முன்பு நடந்த குடமுழுக்கு காலத்தில் இருந்ததை விட, இம்முறை இந்தக் கோரிக்கை  மக்களிடையே கூடுதலாக வலுப்பெற்றுள்ளது. ஆயிரம் ஆண்டுக ளுக்கும் மேல் தமிழ் வளர்த்ததாக உரிமை கோரும் தருமபுரம், திருப்பனந்தாள், திருவாடு துறை உள்ளிட்ட  சைவ மடங்களும் தமிழ்க் குடமுழுக்கு கோரி குரலெழுப்ப வேண்டும் என்று தமுஎகச கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;