tamilnadu

img

‘வீரம் என்பது சாதியில் இல்லை’

16 காளைகளை அடக்கி, இந்த ஆண்டின் தலைசிறந்த ஜல்லிக்கட்டு வீரர் என்ற பெயரைப் பெற்றான் அந்த இளைஞன். மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று வழக்கமாக நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்று, மாருதி கார் மற்றும் கிடைத்த பல்வேறு வகையான பரிசுப் பொருட்களை ஒரு டெம்போ வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தனது சொந்த கிராமத்திற்குள் நுழைந்தான் அந்த இளைஞன். உற்சாகமாக வரவேற்றார்கள் மக்கள். ஆனாலும் பழமை சிந்தனையிலிருந்து மாறாத ஒரு சிலர் முகத்தை சுளித்துக் கொண்டு, அந்த இளைஞனின் சாதியைக் குறிப்பிட்டு, இவனுக்கெல்லாம் பரிசு கிடைச்சிருக்காக்கும் என்று கூட பேசிக்கொண்டது காதில் விழுந்தது. ஆனால் அந்த முணுமுணுப்பை மீறி பலத்த கைத்தட்டல் சத்தத்துடன் அந்த இளைஞனை பெரும் உற்சாகத்துடன் வரவேற்று ஊர் நடுவில் அனைத்துத் தரப்பு மக்களின் மத்தியில் பெருமிதத்துடன் மேடையேற்றி கவுரவித்தது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.

மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞனின் பெயர் பிரபாகரன். 25 வயது நிரம்பிய இளம்காளை. வறுமையின் பிடியில் சிக்கியுள்ள ஒரு எளிய சலவைத் தொழிலாளியின் மகன். தனது தாயை இழந்த பிரபாகரன், தந்தை சப்பானியுடன் வசித்து வருகிறார். பள்ளிக்கு செல்ல வசதி இல்லை. படிப்பை இடையிலேயே நிறுத்த வேண்டிய நிலைமை. எனினும் சிறுவயதிலிருந்தே கபடி, வாலிபால் மட்டுமல்ல, ஜல்லிக்கட்டு போட்டியிலும் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தார். கடந்த மூன்றாண்டுகளாக தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்று பலவகையான பரிசுகளைப் பெற்றார். கடந்த ஆண்டு இரண்டாம் இடம் பெற்ற பிரபாகரன், இந்த ஆண்டு, அலங்காநல்லூர் போன்றே புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 16 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார்.  பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அந்த இளைஞன் பெற்ற பரிசுகள் ஒரு வண்டி நிறைய குவிந்துவிட்டன.  ஏற்கெனவே பல ஆண்டுகாலமாக முதலிடம் உள்பட வெற்றிபெற்ற வீரர்கள் பெற்ற பரிசுகளையெல்லாம் தங்களது வீடுகளில் வைப்பதற்கு இடமில்லாமல் எப்படி வறுமையிலும் ஏழ்மையிலும் வாடுகிற அவலம்மிக்கவர்களாக இருந்தார்களோ, அதேபோல இந்த இளைஞனுக்கும் அந்தப் பரிசுகளை வைப்பதற்கு இடமில்லை. ஒரு சின்ன குடிசைதான் அவனது வீடு. 

தமிழக கிராமங்களில் பிரபாகரன் போல எண்ணற்ற இளைஞர்கள், சரியான வாய்ப்பு கிடைக்காமல் வெளிச்சம்பெறாமல் இருக்கிறார்கள். எல்லாப் போட்டிகளையும் விட கடுமையானது ஜல்லிக்கட்டு. ஆனால் அதிலும் கூட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஜொலிக்கிறார்கள். தமிழகத்தில் வீரவிளையாட்டுக்கள் உள்பட, கபடி போன்ற விளையாட்டுக்களும் சரி; வழக்கமான வாய்ப்புகளை பெற்றிருக்கக்கூடிய இதர விளையாட்டுக்களும் சரி, அரசின் முழுமையான கவனம்பெறாமல், இதுபோன்ற கிராமத்து இளைஞர்களுக்கு உரிய வாய்ப்புகளைக் கொடுக்காமல் தொலைதூரத்தில் நின்றுகொண்டிருக்கின்றன. வீரம் என்பது சாதியில் இல்லை; விளையாட்டுத் திறன் என்பது பணத்தில் இல்லை; உரிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றால் நூற்றுக்கணக்கான பிரபாகரன்களை வெளியில் கொண்டுவர முடியும்; அத்தகைய முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்று பொருத்தமான முறையில், பிரபாகரனை கவுரவித்த அந்த விழா மேடையில் சுட்டிக்காட்டினார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா.

ஆனால், அரசு செய்கிறதோ இல்லையோ, தமிழகம் முழுவதும் பொங்கல் தினத்தன்றும் அதைத் தொடர்ந்த நாட்களிலும் மாணவர்கள், இளைஞர்களின் பல்வேறு வகையான விளையாட்டுத் திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடந்த பல்லாண்டுகாலமாக பொங்கல் விளையாட்டு விழாக்களை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு சுமார் 700 இடங்களில் வாலிபர் சங்க பொங்கல் விளையாட்டு விழாக்கள் நடந்துள்ளன. அநேகமாக தமிழகத்தில் ஒரு வாலிபர் இயக்கம் இத்தனை இடங்களில் ஒரே நேரத்தில் விளையாட்டு விழாக்களை நடத்துகிறது என்றால் அது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மட்டுமே எனக் கூறலாம். பிரபாகரனின் சொந்த ஊரான பொதும்பு கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாலிபர் சங்கம் வெகு விமரிசையுடன்  பொங்கல் விளையாட்டு விழாவினை நடத்தி வருகிறது. மாட்டுப்பொங்கலன்று நடைபெற்ற விளையாட்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் மாதர் சங்க தலைவர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், பிரேமலதா, அமிர்தம், வாலிபர் சங்கத் தலைவர்கள் ஆர்.தமிழரசன், எஸ்.கார்த்திக், எஸ்.பாலகிருஷ்ணன், மாதவன் உள்ளிட்டோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் பங்கேற்றனர்.

;