tamilnadu

img

போராட்டங்கள் தரும் நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

சென்னை:
மக்கள் போராட்டங்களின் ஆண்டாகபுத்தாண்டு மலரட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்து சென்ற ஆண்டின் கசப்புகள் நீங்கி, எதிர்வரும் ஆண்டில் மகிழ்ச்சி மலரட்டும் என வாழ்த்துகிறோம். கோவிட்-19 எனும் பெருந்தொற்று உலக மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியது. உலகம் முழுவதும் 18 லட்சத்திற்கும்அதிகமானோர் உயிரிழந்த சோகம் குடிகொண்டுள்ளது. உயிர் வாழ்வதற்காகவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் பெரும் போராட்டத்தை மக்கள் நடத்தவேண்டி வந்தது. 

மறுபக்கம், மோடி அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியிலும், நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் வீரஞ்செறிந்த போராட்டம் நம்பிக்கையளிக்கிறது.இந்த கொடுந்தொற்றுக்காலம் முதலாளித்துவத்தின் கோரமுகத்தை மீண்டும் ஒரு முறை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. கொடுந்தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும் கூட பாகுபாடு காட்டப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் ஏழை எளிய மக்களை கைவிட்டனர். வேலையின்மை, வறுமை அதிகரித்தது. மக்களின் அடிப்படை தேவைகள் கேள்விக்குறியாகின. மக்கள் சீனம், கியூபா, வியட்நாம்,வடகொரியா உள்ளிட்ட சோசலிச நாடுகள் நோய்த்தொற்றிலிருந்தும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் மக்களை பாதுகாப்பதில் முனைப்புடன் முன்னணியில் நின்றன. மனிதகுலத்தின் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவத்தால் தீர்வுகாண முடியாது. சோசலிசமே மக்களை அனைத்து துன்பங்களிலிருந்தும் பாதுகாக்க முடியும் என்பதை மீண்டும் உரத்துச்சொல்லி 2020 ஆம் ஆண்டு விடைபெற்றிருக்கிறது.

மத்தியில் அமைந்துள்ள மோடி அரசு கடந்த ஆண்டில் நிலவிய கொடுந்தொற்றுக் காலத்தை பயன்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டின் அனைத்துத்துறை களையும் தாரைவார்க்கத் துணிந்தது. மறுபுறத்தில் தன்னுடைய மதவெறி நிகழ்ச்சி நிரலை வெறித்தனமாக நிறைவேற்றியது. மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் கூட அளிக்காமல் நட்டாற்றில் விட்டது. புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் கொள்கை, வேளாண் சட்டத்திருத்தம், தொழிலாளர் சட்டத்திருத்தம் என முற்றிலும் எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கையை வீழ்ச்சி அடையச் செய்யும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. 

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, பாஜகவின் எடுபிடி அரசாக செயல்படுகிறது. மாநில உரிமைகள் பறிப்பு, இந்தி,சமஸ்கிருத திணிப்பு, நீட் தேர்வு திணிப்பு என எதையும் எதிர்க்க திராணியற்ற அதிமுக அரசு, மத்திய அரசின் மக்கள் விரோதக்கொள்கைகளை நகலெடுத்து நடைமுறைப்படுத்துகிறது. ஊழல், முறைகேடுகளில் மூழ்கியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்அதிமுக அரசை அகற்றவும் பல்வேறு சித்துவேலைகள் செய்து தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக பரிவாரத்தை நிராகரிக்கவும் இந்த புத்தாண்டில் சூளுரைப்போம்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும்.இந்தியாவில் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் கொரோனா தொற்று காலத்தில்மக்களை பாதுகாக்கத் தவறி திணறி நின்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி செய்யும் கேரளம் நோய்த்தொற்றை சமாளித்ததிலும் மக்களை பல்வேறு வழிகளில் பாதுகாத்ததன் மூலமும் வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்கிறது. இந்த அரசின் மீது மக்கள்  கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி பெற்ற மகத்தான வெற்றியாகும். இத்தகைய இடதுசாரிபாதையே இந்தியாவிற்கு விடிவெள்ளியாகும். மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி உள்ளிட்ட விழுமியங்களை பாதுகாக்கவும் தொழிலாளர், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், வர்த்தகர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்துப்பகுதி மக்களின் நலன்களை பாதுகாக்கவும் தீண்டாமைக் கொடுமைகளை முற்றாக ஒழித்து சமூகநீதியை நிலைநாட்டவும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, பாலின சமத்துவத்தை நிலைறுத்தவும் எதிர்வரும் ஆண்டில் தீரமிக்க போராட்டங்களை நடத்த உறுதியேற்போம். 

போராட்டங்களின் மூலமே ஆட்சியாளர்களின் அக்கிரம கொள்கைகளை பின்னுக்குத்தள்ள முடியும் என்பதை வரலாறு பல முறை உணர்த்தியுள்ளது. தொழிலாளர், விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் நாட்டில் இடதுசாரி மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வலுப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டும் போராட்டங்களின் ஆண்டாக அமையும் என்பது திண்ணம். இந்தப் போராட்டங்கள் சாதி மத பேதம், போதை, வன்முறையற்ற தமிழகம் உருவாவதற்கான அடிக்கல் நாட்டட்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;