எழுத்தாளர் தோழர் டி.செல்வராஜ் 1938 ஜனவரி14ல் பிறந்தவர். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 1975-இல் செம்மலர் எழுத்தாளர்கள் 32 பேர்கூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற அமைப்பைத் தொடங்கியபோது அதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர். அவ்வமைப்பின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் .இவர் பொதுவுடமைக் கொள்கையில் பிடிப்புடையவர்.
தோழர் டி. செல்வராஜின் முதல் நாவலான “மலரும் சருகும்” நெல்லை வட்டாரத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் விவசாய வாழ்க்கையையும்,அன்று அம்மக்கள் நடத்திய ‘முத்திரை மரக்கால்’ போராட்டத்தையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட ‘தேநீர்’ நாவல் அவரது அடுத்தமுக்கியமான படைப்பாகும். ‘ஊமை ஜனங்கள்’ என்கிற பேரில் அக்கதைதிரைப்படமாகவும் வெளிவந்தது.செம்மலரில் தொடராக வந்த “மூலதனம்”நாவல் உலகமயக் காலத்தில் முதலாளித்துவம் பற்றிய படைப்பு. திண்டுக்கல்லில் 1940- களில் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நடத்தப்பட்ட தோல் பதனிடும்தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றை “தோல்” என்ற நாவலாகப் படைத்தளித்தார்.அதற்கு 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது.இவர் மொத்தம் 6 நாவல்கள் எழுதியுள்ளார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள்எழுதியிருக்கிறார். அவை “நோன்பு” உள்ளிட்ட சில தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தோழர் டி.செல்வராஜ் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் நாள் மறைந்தார்.
===பெரணமல்லூர் சேகரன்===