tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தமிழறிஞர் தமிழண்ணல் நினைவு நாள்...

...டிசம்பர் - 29...

தமிழண்ணல் என்கிற இராம. பெரியகருப்பன் 1928 ஆகஸ்ட் 12-ல் பிறந்தார். இரண்டாண்டுகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்க்குடிமகன், கா. காளிமுத்து உள்பட ஐம்பதுக்கும் மேற்
பட்டோருக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் சாகித்ய அகாடமியில் 10 ஆண்டுகள் உறுப்பினராகவும் இருந்தார். தமிழ் இலக்கணம்குறித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், நூல்கள், சங்க இலக்கியம், ஒப்பிலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள், ஆய்வியல் துறைகள் விரிவாக அமைய பல அடிப்படை நூல்கள் எழுதியுள்ளார்.

தினமணி இதழில் வளர்தமிழ்ப் பகுதியில் உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் எழுதியவற்றை வளர்தமிழ் : உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு (நூல்) என்ற நூலில்  தமிழ் மொழியின் இலக்கிய வரலாற்றைப் பல கோணங்களில் விவாதிக்கிறார். சிங்கப்பூர் அரசு பள்ளிகளுக்காக தமிழ்ப் பாட நூல்களையும் எழுதி உள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார்பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்தார். தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டம் நிகழ்த்திய பொழுது அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் போராட்டத் தலைமையிலிருந்து விலகிக்கொண்டபொழுது தாமே முன்வந்து தமிழ்வழிக் கல்விக்காகச் சாகும்வரை உண்ணா நோன்பில் தலைமைதாங்கி நடத்தினார். தமிழக அரசால் சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றினார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தார்.நல்லாசிரியர் விருது, 1989இல் திரு. வி. க. விருது, 1995இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் செம்மல் விருது, மத்திய அரசின் செம்மொழி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது, கவிதை நூலுக்காக மதுரை மீனாட்சி விருது ஆகியவை அவர்பெற்ற விருதுகள். அவர்  2015 டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

;