சென்னை, ஏப். 17-வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பா ளர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றிபெறுவது உறுதி என்றவுடன் மக்களிடம் திமுக கூட்டணிக்கு அவப்பெயரை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் சோதனை நடத்தினர்.பின்னர் தேர்தல் அதிகாரி அளித்தஅறிக்கை அடிப்படையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பினர். இதையடுத்து வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வியாழனன்று (ஏப்.18) நடைபெற விருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக செவ்வாயன்று இரவு தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சுகுமாரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்டவரைத் தான் தகுதி நீக்க வகை செய்கிறது, வேட்பாளரை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்? என்று நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினர். மேலும் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்தது. நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவருக்கு அந்த முடிவு பரிந்துரைக்கப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வழக்கறிஞர் கூறினார்.அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீதான தீர்ப்பை மாலையில வழங்கிய நீதிபதிகள் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.